வீடுகள், தனியார் நிறுவனங்களிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்றத் தேவையில்லை
முஸ்லீம் கவுன்சிலடம் அமைச்சர் மனோ
அரபு மொழியிலான பெயர்ப் பலகைகளை அரச நிறுவனங்களிலும் வீதிகளிலும் மாத்திரமே பயன்படுத்த முடியாது. வீடுகளிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகளிலும் பயன்படுத்த முடியும் என தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் அல்ஹாமியா அறபுக் கல்லூரியிலுள்ள அறபு மொழியிலான பெயர்ப் பலகைகளை அப்புறப்படுத்துமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட உத்தரவை யடுத்து அவ்விவகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் மூலம் அமைச்சர் மனோ கணேசனின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத்தொடர்ந்து அமைச்சர் மேற்கண்ட தீர்மானத்தை விடுத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் விளக்கமளிக்கையில் கூறியதாவது,
அறபு மொழியிலான பெயர்ப் பலகைகளை வீடுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மத்ரஸா, அரபுக்கல்லூரிகள், பள்ளிவாசல்கள் போன்ற இடங்களிலிருந்து அகற்றுமாறு எவராலும் உத்தரவிட முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனவே முஸ்லிம்கள் இது விடயமாக ஐயம் கொள்ளத்தேவையில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவங்களிலும் வீதிகளிலுமுள்ள அரபு மொழியிலான பெயர்ப் பலகைகளை அகற்றுமாறே பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்படும் எனவும் அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலிடம் உறுதியளித்துள்ளதாக என்.எம். அமீன் மேலும் தெரிவித்துள்ளார்.
vidivelli