வென்னப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை வன்மையாகக் கண்டித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர, அதனை ஓர் ‘இனவெறிச் செயல்’ என்றும் வர்ணித்துள்ளார்.
”வென்னப்புவவில் இனவெறி; முஸ்லிம் வர்த்தகர்கள் வாராந்த சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட மஹிந்த ராஜபக்ச தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபை தடை விதித்துள்ளது” என அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை
வென்னப்புவ – தங்கொட்டுவ பிரதேச வாராந்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு தற்காலிக தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், வென்னப்புவ பகுதியின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறும் வென்னப்புவ பிரதேச சபை தலைவர் தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தங்கொட்டுவ வாராந்த சந்தை தற்போது வென்னப்புவ பிரதேச சபையின் பொறுப்பின் கீழ் செயற்படுகின்றது. அடிப்படைவாத தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இனக் கலவரங்கள் தோற்றம்பெற்றன. இந்நிலையில் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் பல்லினத்தவர்களும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இச்சந்தையில் முஸ்லிம் இனத்தவர்களும் உள்ளமையினால் பல மாறுபட்ட கருத்துக்களும், முரண்பாடான சூழ்நிலைகளும் தற்போது காணப்படுகின்றன. இந்நிலைமை தொடருமாயின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத விளைவுகள் தோற்றம் பெறும்.
முரண்பாடுகளை தீர்த்து அமைதியான சூழலை ஏற்படுத்தி இப்பிரதேச பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். ஆகவே நிலைமையினை கருத்திற்கொண்டு தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் சமூகத்தவர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தற்காலிக தடைவிதிக்கும் நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
vidivelli