தன்னை கைதுசெய்து பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு கோரி, குருநாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி உயர் நீதிமன்றில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். குருநாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால்,
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். தான் வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு இம்மனு ஊடாகக் கோரப்பட்டுள்ளது. ஆப்தீன் அசோசியேட் சட்டத்தரணிகள் நிறுவனத்தின் ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், சட்டத்தரணிகளான ஹபீஸ் பாரிஸ், ஷிபான் மஹ்ரூப், என்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எந்த நியாயமான காரணிகளுமின்றி தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சட்டவிரோதமானதெனத் தீர்ப்பளிக்குமாறும், மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, பாதுகாப்பு செயலரின் அனுமதியுடன் தடுப்புக்காவல் அனுமதிக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli