ஐக்கிய அரபு அமீரகம் உடனடியாக செயற்படும் வண்ணம் பிரித்தானிய கல்வியியலாளரான மத்தியூ ஹெட்ஜஸுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தின கருணை அடிப்படையிலான செயற்பாட்டின் ஒரு பகுதியாக 31 வயதான மத்தியூ ஹெட்ஜஸுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரச ஊடகம் கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.
கடந்த திங்கட்கிழமை ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மத்தியூ ஹெட்ஜஸுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஹலீபா பின் ஸெயிட் அல்-நஹ்யான் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நூற்றுக்கணக்கான ஏனையோருடன் பிரித்தானிய கல்வியியலாளருக்கும் இப்பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமான சில விதிமுறைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து செல்வதற்கு பிரித்தானிய கல்வியியலாளருக்கு அனுமதி வழங்கப்படுமென உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக தான் இருப்பதாக வேண்டுமென்றே ஹெட்ஜஸ் தெரிவிக்கும் காணொலியொன்று ஊடகவியலாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்தவாரம் மத்தியூ ஹெட்ஜஸுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கின.
கலாநிதிப் பட்டத்திற்கான கற்கையினை துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வரும் ஹெட்ஜஸ் இரு வார கால ஆய்வுப் பயணத்தின் பின்னர் துபாய் விமான நிலையத்தில் வைத்து கடந்த மே மாதம் 05ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டபோது 2011 ஆம் ஆண்டு அரபு வசந்தப் புரட்சியின் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புக் கொள்கைகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.
வளைகுடா நாட்டில் உளவு பார்த்தாரெனக் கடந்த ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாக குற்றம்சாட்டப்பட்ட ஹெட்ஜஸ் கடந்த ஆறு மாதங்களாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஒரு காணொலியில் தான் எம்.ஐ.6 என்ற பிரித்தானிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் என தன்னை விபரிக்கின்றார். மற்றுமொரு காணொலியில் தான் மேற்கொள்ளும் ஆய்வின் மூலம் இலகுவாக உள்நுழைய முடிவதாக அலுவலகமொன்றில் அவர் கூறுகின்றார்.
அதன் பின்னர் அவர் தனது விரல்களை சொடுக்கி அதுதான் எம்.ஐ.6 எனக் குறிப்பிடுகின்றார்.
இந்த விடயம் எமது நீண்டகால நட்புறவின் அடிப்படையில் பொதுவான தளத்தினூடாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்பார்ப்பாகும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கலாநிதி அன்வர் கர்காஷ் பொது மன்னிப்பு தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் நல்ல செய்தி, இப்பிரச்சினை தீர்ந்துள்ளமை தொடர்பில் ஐக்கிய இராச்சியம் மகிழ்வடைகின்றது” என ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு செயலாளர் ஜெரமி ஹன்ட் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அமீரகமல்லாத நாடொன்றைச் சேர்ந்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை என்பது 25 வருடங்களாகும். அதன் பின்னர் அவர் நாடுகடத்தப்படுவார் என
‘த நெஷனல்’ பத்திரிகை தெரிவித்துள் ளது. அவரது உபகரணங்களும் ஆய்வும் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாகவும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
-VIdivelli