புத்தளம் மாவட்டத்தில், பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களில் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்கும் இரண்டாம் கட்ட கலந்துரையாடல் நேற்று முன்தினம் புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
ஏற்கனவே இம்மாதம் 09ஆம் திகதி சுமார் 15 சட்டத்தரணிகளை ஒன்றிணைத்து புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸின் தலைமையில் புத்தளம் பெரியபள்ளிவாசல், ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளை ஆகியவற்றினால் நடாத்தப்பட்ட முதற்கட்ட செயலமர்வில் அரச திணைக்களங்களில் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக, அபாயா தொடர்பான பிரச்சினை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதோடு, சட்டத்தரனிகளால் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த இரண்டாம்கட்ட கலந்துரையாடலானது முதற்கட்டமாக குழுநிலை கலந்துரையாடலாக பழைய நகர மண்டபத்திலும் பின்னர் அதற்கான தீர்வுகளை வழங்கும் கூட்டம் புதிய நகர மண்டபத்திலும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ், புத்தளத்தின் மூத்த சட்டத்தரணிகளான அப்துல் காதர், எம்.எம். இக்பால் உட்பட சட்டத்தரணிகளான ஏ.எம்.கமர்தீன், ஏ.எம். சம்சுர் ராபி, எம்.ஐ.ஹிஸ்மி, ரம்சான் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
இதன்படி முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பும் இல்லையென்றும், தேவையேற்படின் நீதிமன்றம் செல்லவும் தயார் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
-Vidivelli