இந்திய உதவியின் கீழ் நாடு முழுவதும் ‘1990 அம்பியூலன்ஸ் சேவை’ விஸ்தரிப்பு
கிழக்கு மாகாணத்திற்கான சேவைகள் நேற்று முன்தினம் அங்குரார்ப்பணம்
இந்திய அரசாங்கத்தின் நன்கொடைத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 1990 அவசரகால நோயாளர் காவு வண்டிச் சேவை கிழக்கு மாகாணத்திலும் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அம்பாறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வளங்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே, இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கமைய, அவசரகால நோயாளர் காவு வண்டிச் சேவைகளை நாடு முழுவதற்குமாக விஸ்தரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் பூர்த்தியடைந்துள்ளது. இலங்கையின் அனைத்து ஒன்பது மாகாணங்களிலும் இப்பொழுது இச்சேவை கிடைக்கப்பெறுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி. சு. ஜெய்சங்கர் ஒரு விசேட காணொலிச் செய்தி மூலமாக இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் மத்தியில் உரையாற்றினார். ஆரம்பத்திலிருந்து தனிப்பட்ட விதத்தில் இச்செயற்றிட்டத்தோடு தான் தொடர்புபட்டிருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.
இச்சேவை, அதற்கான ஒரு குறியீட்டு நாமமாக வந்துள்ளதாக கலாநிதி. சு. ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
வெள்ளம் மற்றும் அண்மைய பயங்கரவாதத் தாக்குதல்களின் போது இச்சேவை எவ்வாறு இலங்கைக்கு உதவியது என்பதையும் அவர் நினைவுபடுத்தினார். இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து எதனையும் சாதித்துக் கொள்ள முடியுமென்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இச்செயற்றிட்டம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து தனதுரையில், இச்செயற்றிட்டம் இந்தியாவின் பகிர்ந்து கொள்ளும் உணர்வை குறித்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டார். ‘இலங்கைக்கு முதலில் பதிலிறுப்பவராக’ இந்தியா என்றும் தொடர்ந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவையின் நாடு முழுவதிற்குமான விஸ்தரிப்பு 2018, ஜூலையில் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புதுடெல்லியிலிருந்து நேரலை செய்மதித் தொடர்பு மூலமாக இணைந்து கொண்டார். இந்த அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவை 2018 ஜூலை மாதத்திலிருந்து வட மாகாணத்திலும், 2018 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஊவா மாகாணத்திலும், அந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்திலிருந்து வட மத்திய மாகாணத்திலும், ஒக்டோபர் மாதத்திலிருந்து வட மேல் மாகாணத்திலும், நவம்பர் மாதத்திலிருந்து மத்திய மாகாணத்திலும் மற்றும் 2019 ஜனவரி மாதத்திலிருந்து சப்ரகமுவ மாகாணத்திலும் கிடைக்கப் பெறுகிறது.
2015 மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தியப் பிரதமரிடம், இலங்கையில் வைத்தியசாலை முன்னனுமதி அவசரகால நோயாளர் காவு வண்டிச் சேவை ஒன்றினை ஆரம்பித்து வைப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கமைய 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய நன்கொடை உதவியின் கீழ் ஜூலை 2016 இல் தென் மற்றும் மேல் மாகாணங்களில் 1990 அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நன்கொடை 88 நோயாளர் காவுவண்டிகளைக் கொள்வனவு செய்தல், ஒரு வருட சேவைக்கான நடைமுறைச் செலவு மற்றும் அவசரகால பதிலிறுப்பு மையம் ஒன்றை ஸ்தாபிக்கும் செலவு என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
செயற்றிட்டத்தின் நேர்மறைத் தாக்கத்தை கருத்திற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவையை நாடு முழுவதிலுமாக விஸ்தரிப்பதற்கு இந்தியப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார். மே 2017 இல், இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் கீழ் நாடு முழுவதிலுமாக நோயாளர் காவுவண்டிச் சேவையினை விஸ்தரிப்பது தொடர்பிலான ஓர் அறிவித்தலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்தார். 209 நோயாளர் காவுவண்டிகளின் கொள்வனவு, ஒரு வருடத்திற்கான சேவையின் நடைமுறைச் செலவுகள் மற்றும் பயிற்சிச் செலவுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக நாடு முழுவதிலுமான விஸ்தரிப்பை மேற்கொள்வதற்கு இந்தியாவினால் 15.02 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒரு மேலதிக நன்கொடைத் தொகையாக வழங்கப்பட்டது.
இலங்கையின் எந்தத் தொலைத் தொடர்பு வலையமைப்பு மூலமாகவும் ‘1990’ எனும் இலக்கத்தை வெறுமனே அழுத்திப் பெறக்கூடிய இந்தக் கட்டணமின்றிய அவசரகால நோயாளர் காவுவண்டிச் சேவை, இலங்கையில் இந்திய வீடமைப்பு செயற்றிட்டத்திற்கு அடுத்து பாரிய இந்திய நன்கொடை செயற்றிட்டமாக அமைந்துள்ளது.
இதுவரை இச்சேவைக்கு வந்த 1,133,344 தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளித்து, 219,371 தடவைகள் அம்பியூலன்ஸ் வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு, 12.58 நிமிடம் எனும் சொற்ப நேரத்தினுள் நோயாளரை அணுகியதுடன், அவசர சிகிச்சை தேவைப்பட்ட 198,223 நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளது. மேலும், இந்த அம்பியூலன்ஸ் வாகனங்களில் இதுவரை 89 குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli