மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி)
ஒரு விடயத்தை மக்களுக்குப் புரியவைக்க விரும்பினால் உள்ளத்தளவில் தூய்மை இருக்க வேண்டும். இஸ்லாம் பற்றித் தெளிவடைய விரும்புவோர் ஒவ்வொன்றிலும் அதன் அடிப்படையை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அல்குர்ஆனில் 09:05 வசனத்தில் “(போர் விலக்கப்பட்ட) புனித மாதங்கள் கழிந்துவிட்டால் இந்த இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொலை செய்யுங்கள். அவர்களை (சிறை) பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறி வைத்து உட்கார்ந்திருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வசனத்தை வாசித்தவுடன் முஸ்லிம்கள் எப்பொழுதும் முஸ்லிமல்லாதவர்களுடன் பகைமையாக இருக்க வேண்டும் என்றும் கண்ட இடத்தில் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்றும் கருத்துக் கொள்ளக் கூடாது.
இது மேற்படி 09:05ஆவது வசனமாகும். இதன் முன்பின் வசனங்களைத் தொடர்புபடுத்தாமல் இதனை வாசித்தால் அவ்வாறுதான் விளங்கும். முன்பின் தொடர்புகளை ஏற்படுத்தினால் அவ்வாறு தவறான விளக்கம் ஏற்படமாட்டாது.
இவ்வேதம் – அல்குர்ஆன் இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டது. இது மொத்தமாக அருளப்படவில்லை. சந்தர்ப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்பச் சிறுகச் சிறுக அருளப்பட்டது. இது அருளப்பட ஆரம்பித்த நாளிலிருந்து 20 வருடங்களுக்குப் பின்னால்தான் ஒன்பதாவது அத்தியாயத்தின் முதல் 16 வசனங்கள் அருளப்பட்டன.
மேலும், இவ்வேதம் அருளப்பட ஆரம்பித்த நாளிலிருந்து 13 வருடங்கள் வரை முஸ்லிம்கள் மக்காவில் பலவீனர்களாகவே இருந்து வந்தனர். எதிரிகளிடம் அடி வாங்கினர். சித்திரவதை செய்யப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். 13 வருடங்களுக்குப் பின்னால் இனி முஸ்லிம்கள் மக்காவில் வாழமுடியாது என்ற ஒரு நிலை ஏற்பட்டபோது அவர்கள் அங்கிருந்து 480 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள மதீனாவுக்கு அகதிகளாக சென்று குடியேறினர்.
அதன் பின்னரும் அவர்களால் மதீனாவில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எதிரிகள் முஸ்லிம்களைத் தேடிவந்து போர் தொடுத்தனர். இக்காலகட்டத்தில் முஸ்லிம்கள் சற்றுப் பலமுடன் இருந்ததால் தற்பாதுகாப்புக்காகத் திருப்பித் தாக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். அதன் தொடரில் ஏற்பட்ட போர்களில் முதலாவது போர் பத்ர் போர் என்பதாகும். இப்போரில் முஸ்லிம்கள் பாரிய வெற்றியை தழுவினர்.
இதனைத் தொடர்ந்து பல போர்கள் நடந்தன.
முஸ்லிம்கள் படிப்படியாகப் பலமடைந்து வந்ததால் தாக்குப்பிடிக்க முடியாத எதிரிகள் முஸ்லிம்களுடன் உடன்படிக்கை செய்ய முன்வந்தனர். இவ்வுடன்படிக்கைக்கு ஹுதைபிய்யா உடன்படிக்கை என்று கூறப்படும்.
முஸ்லிம்கள் இவ்வுடன்படிக்கையை மதித்து நடந்தனர். ஆனால் எதிரிகளோ சிறிது காலத்துக்குப் பின் அவ்வொப்பந்தத்தை மீறினர். அப்போதுதான் உடன் படிக்கையை முறித்தவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து ஒன்பதாவது அத்தியாயத்தின் முதலாவது வசனம் முதல் 16 வது வசனம் வரையுள்ள வசனங்களை அல்லாஹ் தனது தூதருக்கு அருளினான். 16 வசனங்களில் விளக்கவேண்டிய ஒரு விஷயத்தை ஒரேயொரு வசனத்தில் புரிய வைப்பது சரியாகுமா? இவை போர் புரிவோருடன் தொடர்பான வசனங்களேயல்லாமல் பொதுவான மக்களுடன் தொடர்பான வசனங்களல்ல. இவ்வசனங்களிலுள்ள உடன்படிக்கை என்ற வாக்கியமே இவை போர் தொடர்பான வசனங்கள் என்பதை தெளிவுபடுத்துவதாயுள்ளது.
இலங்கையில் புலிகள் அரசுடன் உடன்படிக்கை செய்தனர். இவ்வுடன்படிக்கையை புலிகள் முறித்தபோது இலங்கை இராணுவம் புலிகளுக்கெதிராகப் போரை தொடங்கியது. இலங்கை இராணுவத்தின் இப்போரைத் தமிழ்ச் சமுதாயத்திற்கெதிரான போர் என்று குறிப்பிடலாமா? குர்ஆனிலுள்ள 09:05 வசனத்தின் நிலையும் இதுதான்.
முஸ்லிம்கள் சம்பந்தமான வெறுப்பைத் தூண்டுவதற்காக அல்குர்ஆனிலுள்ள 09:05 வசனத்தை மட்டும் தனியாக எடுத்துக்கூறுவது விஷமத்தனமான செயலாக இல்லையா ?
ஆனால், அதைத் தொடர்ந்து வரும் 6 ஆவது வசனம் இவர்களது விளக்கம் பிழையானது என்பதை உணர்த்துவதாக உள்ளது. அவ் வசனம் பின்வருமாறு:
இணை வைப்பவர்களில் எவரேனும் உங்களிடம் புகலிடம் கோரினால் அவர்கள் அல்லாஹ்வின் வார்த்தையை (அல் குர்ஆனை) செவியேற்கும் வரை அவர்களுக்குப் புகலிடம் அளிப்பீராக. பின்னர் அவர்களுக்குப் பாதுகாப்பான இடத்தில் அவர்களைச் சேர்த்து விடுவீராக.
இவ்வசனம் நமக்குத் தரும் விளக்கம் என்னவென்றால் போரென்று வந்துவிட்டால் போரிடுங்கள். மனிதாபிமான ரீதியில் வரும்போது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்பதாகும். இதுதான் அதற்கான விளக்கம் என்பதை மற்றுமோர் இடத்தில் குர்ஆன் கூறுவதைக் காணலாம்.
எவர்கள் மார்க்க விடயத்தில் போர் புரிய வில்லையோ அவர்களுக்கும் மேலும் உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றவில்லையோ அவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீங்கள் நீதமாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. அல்லாஹ் நீதமாக நடப்பவர்களை நேசிக்கிறான். 60:08
இந்த வசனம் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் எவ்வாறு உறவைப் பேணி நடக்க வேண்டுமென்ற நல்ல பண்பை உணர்த்துவதாக உள்ளது. ஆனால் முஸ்லிம்களுடன் எவர்களெல்லாம் போர் தொடுக்கிறார்களோ,
இல்லங்களை விட்டும் வெளியேற்றுகின்றார்களோ அவர்களுடன் நேசம் கொள்ள வேண்டாம் என்றுதான் தொடர்ந்து வரும் அடுத்து வரும் வசனம் கூறுவதைக் காணலாம்.
எவர்கள் மார்க்க விடயத்தில் உங்களிடம் போரிட்டு, உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றினார்களோ அவர்களையும், மேலும் உங்களை வெளியேற்றிட உதவி செய்தார்களோ அவர்களையும் நேசத்துக்குரியவர்களாக எடுத்துக் கொள்வதையோ அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கிறான். யார் அவர்களை நேசத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்கிறார்களோ அவர்கள் தாம் அநியாயக் காரர்கள். (60:09)
9:05 ஆவது வசனம் போர் தொடர்பானதுதான் என்பதை அவ்வசனத்தின் முன் பின் தொடர் தெளிவாக குறிப்பிடுவதைக் காணலாம்.
அவ்வசனம் கண்ட இடங்களில் கொலை செய்யுங்கள் என்று மட்டும் சொல்லவில்லை. அவர்களைச் சிறை பிடியுங்கள், முற்றுகை இடுங்கள் என்றும் கைது செய்வதற்காக பதுங்கும் இடங்களில் குறி வைத்து உட்கார்ந்திருங்கள் என்றும் கூறுகிறது.
சிறைப் பிடித்தல், கைது செய்தல், முற்றுகை இடுதல் போன்றவை போர் தொடர்பானவை என்பதைச் சாதாரண அறிவுள்ளவரும் அறிவர்.
இவ்வசனத்தைச் சுமுகமான உறவுடன் வாழ்கின்ற பல்லின மக்களுடன் எவ்வாறு தொடர்புபடுத்த முடியும் ? முஸ்லிம் அல்லாதவர்களைக் கொலை செய்யுமாறு முஸ்லிம்களுக்குக் குர்ஆன் கட்டளை இடுகிறதென்று எவ்வாறு அர்த்தம் கொள்ள முடியும்?
சவூதி அரேபியாவில் குர்ஆனுடைய ஆட்சி நடை பெறுகின்றது. ஒரு வருடத்தின் சங்கையான நான்கு மாதங்கள் போக மீதி எட்டு மாதங்களிலும் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோரைக் கொலை செய்ய வேண்டும் என 9:05 வசனத்தை விளங்குவது சரியானால் சவூதியில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிமல்லாத இலங்கையர்களை அந் நாட்டு அரசு கொலை செய்ய வேண்டுமல்லவா ! அது மட்டுமல்ல, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முஸ்லிமல்லாதோர் பல இலட்சம் பேர் தொழில் புரிகின்றனர்.
குர்ஆனை விஷமத்தனமாக விளங்குகின்றவர்களின் விளக்கத்தின்படி இவர்களையெல்லாம் அவ்வரசு கொலை செய்ய வேண்டும் அல்லவா?
சவூதி ஆட்சியைப் பற்றி உலமாக்கள் நன்கறிவர். அந் நாட்டுக்குடி மக்களாயினும் சரி அங்கு தொழில் புரிகின்ற வெளிநாட்டவர்களாயினும் சரி மரண தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை செய்தால் மரண தண்டனை நிறை வேற்றப்படுவதை நாம் பார்க்கின்றோம். இலங்கையர் சிலருக்கும் அவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவங்களும் உண்டல்லவா ? குர்ஆன் கூறுகின்ற இத்தகைய தண்டனைகளை நிறைவேற்றுகின்ற சவூதி அரசு சங்கையான நான்கு மாதங்கள் போக மீதி எட்டு மாதங்களிலும் முஸ்லிமல்லாதவர்களைக் கொலை செய்ய வேண்டுமென்பது 09:05 வசனத்தின் விளக்கமானால் அந் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிமல்லாதோரையும் கொலை செய்ய வேண்டுமல்லவா?
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் நிறுவப்பட்ட இஸ்லாமிய அரசிலிருந்து இன்றுவரை பதினைந்து நூற்றாண்டுகளாக சவூதியிலோ மத்திய கிழக்கு நாடுகளிலோ வேறெந்த இஸ்லாமிய நாடுகளிலோ இப்படி ஒரு தண்டனை நிறை வேற்றப்பட்ட துண்டா?
கொலை, கொள்ளை, விபசாரம் போன்ற குற்றங்களுக்குக் குர்ஆன் கூறும் தண்டனைகளை வழங்குவதென்றாலும் அவைகளை அதிகாரமுள்ள அரசுதான் நிறைவேற்ற வேண்டும்.
குர்ஆனைப் பின்பற்றுகின்ற எந்த முஸ்லிமுக்கும் தண்டனை வழங்கும் அதிகாரத்தைப் பிறருக்கு இஸ்லாம் வழங்கவில்லை. இது அதிகாரமுள்ள அரசுக்குரிய கடமையாகும்.
இலங்கை போன்று சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையான முஸ்லிம் அல்லாதோருக்குக் குர்ஆன் கூறும் தண்டனைகள் எதனையும் வழங்குவார்கள் என்று எவரும் எதிர்பார்க்க வேண்டாம். முஸ்லிம்கள் 100 வீதமாக வாழ்கின்ற சவூதியில் கூட ஒரு தனி மனிதன் மற்ற ஒருவருக்குத் தண்டனை வழங்குகின்ற அதிகாரத்தைப் பெற மாட்டார்.
இஸ்லாத்தின் வழிகாட்டல் இவ்வளவு தெளிவாக இருக்கும் போது இவ்வாறான விஷம கருத்துக்களை எவரும் பிரசாரம் செய்து அறியாத அப்பாவி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்.
முஸ்லிமல்லாதோர் குர்ஆனை வாசிக்கும்போது அதில் அவர்களுக்குத் தெளிவின்மை ஏற்பட்டால் அந்தக் குர்ஆனை நடைமுறைப்படுத்துகின்ற முஸ்லிம் சமுதாயத்திலுள்ள அறிஞர்களிடம் அதுபற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதுதான் நீதியான அணுகுமுறையாகும்.
இவ்வாறு குர்ஆனை அணுகுவதற்குப் பதிலாக ஒரு வசனத்தின் முன் பின் தொடர்களை அறுத்து விட்டுக் கற்பனைக் கருத்துக்களைக் கூறி சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
முஸ்லிமல்லாதோர் தூய்மையான எண்ணத்துடன் குர்ஆனை வாசித்தால் அதில் அவர்கள் எந்தவிதமான கோணலையும் காணமாட்டார்கள். உலகில் பல அறிஞர்கள், விஞ்ஞானிகள் அவ்வாறு வாசித்ததால் சுய விருப்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற பல சம்பவங்கள் உண்டு.
அவ்வாறு இஸ்லாத்தைத் தழுவியவர்களில் மேற்குலக நாட்டைச் சேர்ந்த டாக்டர் மர்மடியூக் பிக்தால் என்ற ஓர் அறிஞர் குறிப்பிடத்தக்கவராவார். அவர் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்ல அரபு மொழியை ஆழமாகக் கற்று அதன் பின் அல்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்தார்.
09.05 வசனத்தின் படி முஸ்லிம் முஸ்லிமல்லாதோரை கொலை செய்ய வேண்டுமென்று கோணலாக விளங்குவோர் அல்குர்ஆன் கூறும் மற்றுமொரு விடயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மரண தண்டனைக்குரிய எந்தக் குற்றத்தையும் புரியாத ஒருவரை ஒருவன் கொலை செய்தால் அக்கொலையானது உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் கொலை செய்ததற்குச் சமனாகும் என்று குர்ஆன் (05:32) வசனத்தில் கூறுகின்றது.
இவ்வசனத்தில் உயிரென்று குறிப்பிடும்போது முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் என்ற எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை. இங்கு பொதுவாக உயிர் என்றுதான் கூறப்படுகிறது.
ஓர் உயிராயினும் காரணமின்றிக் கொல்லக்கூடாது என்று குர்ஆன் கூறும்போது சங்கையான மாதங்கள் கழிந்துவிட்டால் இணைவைப்போரைக் கொல்லுங்கள் என்ற வசனத்தை முஸ்லிமல்லாத அனைவரையும் கொலை செய்யுங்கள் என்று எவ்வாறு விளங்க முடியும் ?
காரணத்தோடு கொலை செய்ய முடியும் என்ற அடிப்படையில் உடன்படிக்கையை முறித்து மீண்டும் போரை ஆரம்பிப்பார்களானால் அவர்களை கொல்லுங்கள், சிறைப் பிடியுங்கள், முற்றுகையிடுங்கள் என்பதே 09.05ஆம் வசனத்தின் விளக்கமாகும்.
ஒரு சமுதாயத்தின் மீது வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் பின்பற்றும் வேதத்தையே பிழையாகத் திரித்துக் கூற முற்படுவது மிகப்பெரிய விஷமத்தனமாகும். பல சமயத்தவர்கள் மத்தியில் சமய நடைமுறைகளில் வித்தியாசம் இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம். இதன் மூலம் மக்களும் முன்னேறுவார்கள். நாடும் முன்னேறும். அச்சம் நீங்கிய அமைதியான சமுதாயமொன்றைக் காணமுடியும்.
-விடிவெள்ளி