அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாஸா மர்ம நபர்களால் தோண்டியெடுப்பு
கலேவெல- பல்லேவெல பிரதேசத்தில் சம்பவம்
முஸ்லிம் பொது மயானத்தில் அண்மையில் அடக்கம் செய்யப் பட்டிருந்த ஜனாஸா ஒன்று சில மர்ம நபர்களால் தோண்டி யெடுக்கப்பட்டு மற்றுமொரு இடத்தில் கைவிடப்பட்டிருந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் அதிகாலை கலேவெல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல்லேவெல என்ற கிராமத்தில் இடம் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முஸ்லிம் பொது மயானத்தைச் சுற்றி முட்கம்பிப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பிரதான நுழைவாயிலும் பூட்டுப் போடப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில், மயானத்தின் பின்புறமாக பாதுகாப்பு முட்கம்பி வேலியின் கம்பிகளைத் துண்டித்து மர்ம நபர்கள் உட்பிரவேசித்து, ஜனாஸா அடக்கப்பட்டிருந்த மூன்று குழிகளைத் தோண்டியிருப்பதுடன் அவற்றில் மிக அண்மையில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குழியிலிருந்த ஓர் ஆணின் ஜனாஸாவே இவ்வாறு வெளியில் எடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளன.
இதேவேளை, குறித்த மயானத்திற்கு சமீபமாகக் காணப்பட்ட அடுத்தடுத்த தோட்டங்களில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது தோண்டியெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜனாஸாவை அங்கிருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் இருந்த முருங்கைத் தோட்டம் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டனர்.
ஜனாஸாவிற்கு அணிவிக்கப்பட்டிருந்த வெண்ணிற கபன் ஆடையின் பகுதிகள் அருகில் ஓடிக் கொண்டிருந்த சிற்றோடையில் மிதந்த வண்ணமிருந்தன.
இச்சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் தெரியாத நிலையில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
-Vidivelli