சில மத தலைவர்களின் அறிவிப்புகள் வன்முறையை தூண்டுபவை
கண்டனம் வெளியிட்டது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் கவலை தெரிவிப்பு
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் தொடர்பில் கவலையடைகின்றேன். சில மதத்தலைவர்களின் அண்மைய அறிவிப்புக்கள் வன்முறையைத் தூண்டுபவையாக உள்ளன. இதுதொடர்பில் ஆராயப்பட வேண்டியுள்ளதென்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பயங்கரவாத தடுப்பு செயற்பாடுகள் தேவைப்படுவன ஆயினும், அவசரகாலச்சட்டம் குறுகியகால எல்லையைக் கொண்டதாக இருக்க வேண்டும். சமூகத்தலைவர்கள் ஒன்றிணைந்து அனைத்து வகையான வன்முறை மற்றும் பாகுபாட்டை களைய அதனது ஆணிவேரைக் கண்டறிந்து அரசியல் மற்றும் மத ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 41 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் கூடியுள்ள நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மிச்செலி பசலெட் இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையில் பதற்றத்திற்கு மேலும் தூபமிட்டுள்ளதென அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் முக்கிய மனித உரிமைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையில் பற்றாக்குறை காணப்படுகின்றது. இது பாதுகாப்பு படைகளின் செயற்பாட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி நாட்டு மக்கள் அனைவரின் பாதுகாப்பை பலவீனப்படுத்திவிடும்.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் தொடர்பில் கவலையடைகின்றேன். சில மதத்தலைவர்களின் அண்மைய அறிவிப்புக்கள் வன்முறையைத் தூண்டுபவையாக உள்ளன. இது தொடர்பில் ஆராயப்பட வேண்டியுள்ளது.
பயங்கரவாத தடுப்பு செயற்பாடுகள் தேவைப்படுவன ஆயினும் அவசரகாலச்சட்டம் குறுகிய கால எல்லையைக் கொண்டதாக இருக்க வேண்டும். சமூகத்தலைவர்கள் ஒன்றிணைந்து அனைத்து வகையான வன்முறை மற்றும் பாகுபாட்டை களைய அதனது ஆணிவேரைக் கண்டறிந்து அரசியல் மற்றும் மத ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பாராட்டத்தக்க துணிச்சலான பங்களிப்பிற்கு எனது ஆதரவைத் தெரிவிக்கின்றேன். மத சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான தாக்குதல்கள் நம்மனைவர் மீதான தாக்குதல்களாகும் . மதக்கோட்பாடுகளில் மனித பெறுமதி மற்றும் மனித பிணைப்பு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகையான வன்முறை சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக ஆரம்பித்து நமது முழு சமூகத்தையும் சூழ்ந்துவிடும் என்பதை வரலாறு எமக்கு கூறுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
-Vidivelli