இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட கத்தார் அமீர் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் இஸ்லாபாத்தை வந்தடைந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் மற்றும் கத்தார் அமீர் செய்க் தமீம் பின் ஹமாட் அல் தானி ஆகியோருக்கிடையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வர்த்தகத்தையும் குறிப்படத்தக்களவு அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும், விவசாயம் மற்றும் உணவுத்துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் , சக்திவளத்துறை, விமானப் போக்குவரத்து, கடல்வழிப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உற்பத்தி ஆகிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் இணக்கம் கண்டனர்.
பிராந்திய நிலைமைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் சமாதான முன்னெடுப்புக்களுக்கு வசதியேற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையேயும் வர்த்தக முதலீடு தொடர்பிலும், சுற்றுலா மற்றும் நிதியியல் நுட்பச் செயற்பாடுகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பிலும் பாகிஸ்தான் –- கத்தார் இணை செயற்குழுவொன்றை அமைப்பதற்கான மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைள் கைச்சாத்திடப்பட்டன.
இம்ரான் கானின் அழைப்பின் பேரிலேயே அல்-தானி இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்.
உயர்மட்ட தூதுக்குழுவினருடன் இஸ்லாமாபாத்தில் உள்ள நூர் கான் விமான தளத்தினை வந்தடைந்த கத்தார் அமீருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இம்ரான் கான் மற்றும் அவரது அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர்களால் கத்தார் அமீர் வரவேற்கப்பட்டார்.
இந்த விஜயம் இரு தரப்பு உறவுகளையும் பலப்படுத்துவதற்கு உதவுவதோடு டோகாவுக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையே பங்காண்மை அடிப்படையிலான பிணைப்பினை உருவாக்கும் என பாகிஸ்தானுக்கான கத்தார் தூதுவர் சகார் பின் முபாரக் அல் மன்சூரி தெரிவித்தார்.
சக்திவளம் மற்றும் பொருளாதாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் அண்மைய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக நடவடிக்கைகளின் அளவை அதிகரிப்பதற்கு கராச்சிக்கும் டோஹாவுக்கும் இடையே நேரடி கடல் போக்குவரத்து பாதையினை உருவாக்குவது மேலும் உதவும் எனவும் காணொலி மூலம் வெளியிட்ட அறிக்கையில் சகார் தெரிவித்தார்.
-Vidivelli