எந்தவொரு முஸ்லிம் தலைவரும் தெரிந்துக் கொண்டே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கமாட்டார்கள்
'சலகுன' நிகழ்ச்சியில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவிடும் வகையில் நீங்களும் ஏனைய அமைச்சர்களும் பதவி விலகினீர்கள். அதேவேளை இது சம்பந்தமாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் நீங்கள் அங்கத்துவம் வகிக்கின்றீர்கள். இது ஒன்றுக்கொன்று முரணானதாகத் தெரியவில்லையா?
உயிர்த்த ஞாயிறு சம்பவம் சம்பந்தமாக விசாரணை நடாத்துவது எமது செயற்பாடல்ல. மாறாக இது எவ்வாறு நடந்தது, இந்த விடயத்தில் எங்கே தவறு நடந்தது என்பதை ஆராய்வதே இதன் முக்கிய நோக்கம். அதன்மூலம் எதிர்காலத்தில் நிகழக்கூடிய அபாயங்களைத் தவிர்ப்பதே எதிர்பார்க்கப்படுகிறது. அதைவிடுத்து குற்றவாளி யாரென்று காட்டிக்கொடுப்பதோ அல்லது அதுபற்றி விமர்சிப்பதோ விசாரணையின் நோக்கம் கிடையாது. இப்படியான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அதற்கு முன்னர் எடுக்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிப்பதே அவசியமாக உள்ளது.
நீங்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளாது விட்டால் நன்றாக இருக்குமென்று தோன்றவில்லையா?
பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக்குழுவை அமைப்பது சம்பிரதாயமானதொரு விடயம். கட்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து சபாநாயகரினால் குழு அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவர். குறித்த தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டுமென பிரேரித்த இரு கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் உள்வாங்கப்படவில்லை. இதனடிப்படையில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இந்த தெரிவுக்குழுவை காலத்தின் தேவைகருதி நியமனம் செய்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தோடு பேசப்படும் சிலரும் உங்களுடன் சேர்ந்து பதவி விலகியுள்ள நிலையில், அவர்களை தெரிவுக்குழுவில் விசாரிக்க நேரிடும்போது உங்கள் நிலைமை என்னவாக இருக்கும்?
எமது மனச்சாட்சிக்கேற்ப நடந்து கொள்வோம். இதில் கட்சி அரசியல் பார்க்கமாட்டோம். சிலர் அவ்வாறு நினைக்கலாம். நான் இதற்கு முன்னரும் ஐந்தாறு தெரிவுக்குழுக்களில் உறுப்பினராக இருந்துள்ளேன். ஆனால், இந்த தெரிவுக்குழு கொஞ்சம் வித்தியாசமானதுதான். எனது 25 வருட அரசியல் அனுபவத்தில் இரண்டு முறைகள்தான் எதிர்க்கட்சி இல்லாத நிலையில் இருந்துள்ளேன். ஸ்ரீயானி பண்டாரநாயக்கவை உயர் நீதிமன்ற நீதியரசர் விசாரிக்கும்போது எதிர்கட்சியில் இருந்த ஐ.தே.க. அந்த தெரிவுக்குழுவை புறக்கணித்தது. தற்போதைய தெரிவுக்குழு அமைக்கப்படவேண்டும் என்று பிரேரித்த இரண்டு முக்கிய கட்சிகளும் இம்முறை இந்த தெரிவுக்குழுவை புறக்கணித்துள்ளன. நான் ஆரம்பத்திலும் சொன்னதுபோல இப்போதும் அதே தீர்மானத்திலேயே இருக்கிறேன்.
றிஷாத் பதியுதீன் சம்பந்தமாக தெரிவுக்குழு விசாரணை நடத்தக்கூடாது. தெரிவுக்குழுவை நியமிக்க முன்னரே சபாநாயகரிடமும் இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்தேன். எதிர்க்கட்சி தெரிவுக்குழுவை புறக்கணிப்பதற்கான முக்கிய காரணம் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான கருத்துகளே என்பது வெளிப்படையாகத் தெரியும். இந்நிலையில் நாம் எந்த தீர்மானத்தை எடுத்தாலும், அவர்களின் முடிவு அரசியல் மட்டத்தில் இருக்கலாம். சிலவேளை இந்த விசாரணைகளில் தமது குற்றங்களும் வெளிப்பட வாய்ப்புண்டு என்று நினைப்பதால் மறக்காமலிருக்கும் நிலையிலுள்ளார்கள் என்றும் நினைக்க இடமுண்டு.
எதிர்பார்ப்புகள் எப்படியிருப்பினும் தெரிவுக்குழு பற்றிய நம்பகத்தன்மைக்கு பங்கம் ஏற்படக்கூடாது. ஸ்ரீயானி பண்டாரநாயக்காவின் விடயத்தில் இது நடந்தது. அப்போது எதிரணியிலிருந்த ஐ.தே.க. இதுபற்றி விமர்சித்து குற்றம்சாட்டியது. அதேபோன்று இந்த சம்பவத்திலும் நடக்கக்கூடாது என்பதே எனது குறிக்கோள். அதுபோன்று இங்கே நடந்தால், நிச்சயம் நான் தெரிவுக்குழுவிலிருந்து விலகி நிற்பேன். கட்டாயமாக ஒரு பிரதிவாதம் ஏற்படும். எனது நடுநிலைமையை பற்றிய சந்தேகம் தோன்றலாம்.
ஹிஸ்புல்லாஹ்வை விசாரிக்கும்போதும் உள்ளூராட்சி செயலாளரை விசாரிக்கும்போதும் நீங்கள் நடந்து கொண்ட விதங்கள் உங்களது நடுநிலைமை பற்றிய சந்தேகத்தை தோற்றுவிக்கிறதே?
தொலைக்காட்சி விமர்சனங்களை பார்த்தேன். ஹிஸ்புல்லாஹ் விபரங்களை சொல்லும்போது அவற்றை நான் அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்தேன். சில இடங்களில் இடைக்கிடையே அவர் எமது பக்கத்துக்கு பந்தை குறிவைப்பதும் தெரிந்தது.
நான் அவரிடம் ஒரேயொரு கேள்விதான் கேட்டேன். குண்டுதாரி ஸஹ்ரான் ஏதேனும் ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்தாரா அல்லது குறிப்பிட்ட ஒரு கட்சியின் ஆதரவாளராக இருந்தாரா என்று. அதற்கவர் இல்லையென்று சொன்னார். அத்தோடு எனக்கிருந்த பிரச்சினை முடிந்தது. அதன்பின்னர் நான் அவரிடம் எதுவும் கேட்கப் போகவில்லை. அவர் உணர்ச்சிவசப்பட்டு குழப்பமடைந்த நிலையில் தன்மீதான குற்றச்சாட்டுகளை வேறொரு பக்கத்துக்கு திசைதிருப்ப முயற்சித்தது தெரிந்தது.
அதை விடுத்து வேறு கேள்விகளுக்கு போகவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஹிஸ்புல்லாஹ் கூறியபடி, முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எல்லா கட்சிக்காரர்களும் சஹ்ரானின் உதவியை தேடிச் சென்றார்கள் என்று பயப்படுகிறீர்களா?
இல்லை. அதில் பயப்படுவதற்கு எந்தக் காரணமுமில்லை. ஆனால், ஒரு விடயத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். இந்த ஸஹ்ரான் எல்லாக் கட்சிகளுடனும் ஒப்பந்தங்கள் செய்தார். தேர்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது இஸ்லாம் மார்க்கத்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கதைக்கத் தொடங்கினார். இதைப்பற்றி நான் அறிந்தபோது, அவர் சொல்வதுபோல அரசியல் செய்ய நம்மால் முடியாது என்று சொன்னேன். நாம் எமது கட்சிக் கீதத்தை இசைப்போம். மேடை போடுவோம். அவற்றையெல்லாம் எம்மால் செய்யாதிருக்க முடியாது. ஏனைய கட்சிகள் செய்பவற்றை நாமும் நிச்சயம் செய்தாக வேண்டும் என்று சொன்னேன்.
அவ்வாறெனில் நீங்கள் வெளிப்படையாக அவரது வேண்டுகோளை புறக்கணித்திருக்கலாமே. உங்கள் பிரதிநிதி அவரோடு இருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் சஹ்ரானின் வாக்குகள் விழுந்தன என்று ஹிஸ்புல்லா சொல்கின்றாரே?
எப்படி அவ்வாறு சொல்ல முடியும். மக்கள் இரகசியமான முறையில் வாக்களிக்கின்றனர். யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்று யாராலும் சொல்லமுடியுமா? எல்லோருடனும் ஒப்பந்தம்செய்த குண்டுதாரியோ அவரது ஆதரவாளர்களோ இந்தக் கட்சிக்குத்தான் வாக்களித்தார்கள் என்று எப்படிச் சொல்வது? அடுத்ததாக பயங்கரவாதிகள் எனப்படுவோர் எமக்கு வாக்களித்தார்கள் என்பதால் நாமும் பயங்கரவாதிகள் ஆகுவதில்லை. இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தும் பின்னொரு காலத்திலே நடந்துள்ளன. இவர் பயங்கரவாதி என்பது தெளிவானது இப்பொழுதுதான். அப்போது இல்லையே. எனவே, இதுதொடர்பில் நாம் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை.
காத்தான்குடி நகரசபை தலைவர் உட்பட பலதும் சஹ்ரானின் நடவடிக்கைகளின் தோற்றம் பற்றி பல இடங்களில் பலவாறாக முறைப்பாடு சொல்கின்றார்கள். 2015ஆம் ஆண்டிலிருந்தே இதுதொடர்பில் நீங்கள் அக்கறை கொள்ளவில்லையா? பயங்கரவாதத்தை நோக்கிய பயணம் என்று விளங்கவில்லையா? கட்சிகளை தன்னிடம் வருமாறு அவர் ஆதாரத்துடன் அழைத்திருக்கிறார். இது சரியாகப்பட்டதா?
இல்லை. காத்தான்குடி நகர சபைத் தலைவர் முறைப்பாடு செய்தது பின்னால் வந்த காலத்தில்தான். சொல்லப்பட்ட காலத்தில் சஹ்ரானின் தீவிரம் பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும், அவருக்கென்று ஒரு வாக்குவங்கி இருந்தது. தேர்தல் வெற்றிக்கு அது அவசியம். அதனை நோக்கமாகக் கொண்டே அரசியல் கட்சி பிரதிநிதிகள் அவரை நாடிச் சென்றிருக்கலாம்.
தீவிரவாதிகள் எனப்படுவோரில் பல பிரிவுகள் உள்ளன. இவர்கள் அதில் கடைசிப் பிரிவினர். தாம் சொல்வதே சரி. அதை பிழையென யாரும் சொன்னால், அவர்களை எதிரிகளாக விமர்சிப்பார்கள். இந்த மாதிரியான நிலைமைகளில் நாம் சுதாகரித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், தாம் விரும்புவதை செய்யாதோரை கொலை செய்யவேண்டும் என்ற பயங்கரவாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது மாதிரியான ஒரு நிலையைக் கண்டால் நாம் விலகியிருப்பதே புத்திசாலித்தனம்.
இந்த நிலைக்கு சஹ்ரான் வருவதற்கு சில காலங்கள் சென்றன. அந்த குறிப்பிட்ட காலத்தில்தான் அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கலகங்கள், அடிதடி சம்பவங்கள் நிகழ்ந்தன. பொலிஸ் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நீல அறிக்கையும் (Blue Notice), பின்னர் சர்வதேச மட்டத்தில் சிவப்பு அறிக்கையும் (Red Notice) எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2017இல் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 2019இல் குண்டுத்தாக்குதல் இடம்பெறுகின்றது. இந்த நீண்டதொரு காலத்தில் உங்களது சமூகத்தை பாதுகாப்பதற்காக, இவர்களுக்கெதிரான நடவடிக்கை பற்றி நீங்கள் கருத்திற் கொள்ளவில்லையா? ஒரு அமைச்சராக இருந்த நிலையில் நீங்கள் இதில் கூடுதலான அக்கறை செலுத்தவேண்டியது அவசியமல்லவா?
ஆம். நிச்சயமாக. நான் விசேடமாக இதுபற்றி விளித்துக் கொண்டது மாவனல்லை புத்தர் சிலை உடைப்பின் பின்னர்தான். நானும் அமைச்சர் கபீர் ஹாசிமும் இதுபற்றி பலமுறை கலந்துரையாடினோம். அமைச்சரவையில் இரண்டு மூன்று தடவைகள் இதுபற்றி காரசாரமாக அறிவித்தோம். பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் ஜனாதிபதியிடமும் இதுகுறித்து பேசினோம். இந்தக் குழுவைப் பற்றி எமக்கு ஒரு பீதியுண்டு. முஸ்லிம்களை பலிக்கடாவாக்கி, நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்த திட்டமிடுகின்றார்கள் என்பதையும் அறிவுறுத்தினோம்.
மாவனல்லை புத்தர் சிலை உடைப்புதான் அனைவரின் கவனத்தையும் திரும்பச் செய்தது. அதன்பின் வணாத்தவில்லு பகுதியில் ஆயுதம், வெடிபொருட்கள் சிக்கின. மாவனல்லை மற்றும் வணாத்தவில்லு சம்பவங்களில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை விடுதலை செய்வதற்காக அரசியல் சக்திகள் முயற்சி செய்ததாக அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார். நீங்கள் இருவரும் இதுபற்றி பேசியதாக குறிப்பிட்டீர்கள். அப்படியானால் இந்தப் பின்னணியில் செயற்பட்ட அந்த அரசியல் சக்தி யார்? பலவந்தப்படுத்தியது யார்? ஏன் அதற்கான விசாரணை இடையில் நிறுத்தப்பட்டது?
அதைப் பற்றி குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியும். நமது தெரிவுக்குழு விசாரணைகளின்போது, இது சம்பந்தமான விசாரணைகளை தெளிவுபடுத்திக்கொள்ளல் அவசியம். அதிலிருக்கின்ற ஒரு உயரதிகாரியோடு நான் கதைத்தேன். அப்போது அவர் வேறொரு விடயம் சம்பந்தமாக சொன்னார். இவர்கள் பாரியதொரு அழிவை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டோம்.
இவற்றை ஆராய்வதற்கு 50 குழுக்கள் நாடுமுழுவதும் நியமிக்கப்பட்டன. யார் இதில் இருக்கின்றார்கள்? எவ்வாறான வகுப்புகளுக்கு செல்கின்றார்கள்? இவர்கள் தமது வகுப்புகளில் சொல்லும் விடயங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்தோம். இவர்கள் மார்க்கத்தின் போர்வையில் வேறொரு நாசகார செயல்களுக்கு துணைபோனார்கள். அப்படியானால் அதனால் அவர்களை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். சஹ்ரான் என்ற பெயரையோ இவர்தான் என்று யாரையும் சுட்டிக்காட்டவில்லை. மாவனல்லை இப்றாகீம் மௌலவியின் பிள்ளைகள் இரண்டு பேர் பற்றித்தான் கதைத்தார். அவர்களின் மகன்கள் கம்பளையில் சப்பாத்துக் கடையில் வைத்து சிக்கினர்.
இவர்களுக்கொரு அரசியல்வாதி அடைக்கலம் கொடுத்ததாக சொல்லப்படுகிறதே?
அதுபற்றி எனக்குத் தெரியாது. அதுபற்றி அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், ஒரு சம்பவம் நடந்தது. வணாத்தவில்லு சம்பவத்தின்போது தெரியாத்தனமாக அந்த இடத்துக்குச் சென்ற ஒரு பாடசாலை மாணவர் கைதான விடயம் சொல்லப்பட்டது. அதுபற்றி பல வேண்டுகோள்கள் கிடைத்ததாகவும் அதுபற்றி நான்றாக விசாரித்துப் பார்த்தபின், அவர் தற்செயலாக வந்தவர் என்பது நிரூபிக்கப்பட்டதால் அந்த மாணவனை விடுதலை செய்ததாகவும் அந்த அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.
வணாத்தவில்லு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியைக் கொண்டே மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸாரை சுட்டுக் கொன்றதாக பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. ஆனால், அது விடுதலைப் புலிகளினால் செய்யப்பட்டதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இது விசாரணையை திசைதிருப்புவதற்கான செயற்பாடாக நீங்கள் நினைக்கவில்லையா?
வவுணதீவில் கொலை நடைபெறுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் செயற்பாடுகள் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதால், அதனோடு இந்த சம்பவத்தை பிணைத்து பொலிஸார் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்களோ தெரியாது. நினைவேந்தல் நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சென்ற பொலிஸ் படையுடன் கைகலப்புகள் நடந்த பின்னணியில், இது அவர்களால் நடந்திருக்கலாம் என்று பொலிஸார் நினைத்திருப்பார்களோ என்னவோ. யாருக்கும் பிழை நேருவது சகஜம்தான்.
இந்தப் பயங்கரவாத செயல்களோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த அரசியல்வாதியும் பாதுகாப்பு வழங்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூறமுடியுமா?
எந்தவொரு முஸ்லிம் தலைவரும் தெரிந்துகொண்டே, தனது சமூகத்துக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை. அதுதான் எனது நிலைப்பாடு. நான் குறித்த முஸ்லிம் தலைவர்கள் பற்றி அறிந்து வைத்துக்கொண்டுதான் சொன்னேன். ஆனால், அதற்காக நான் எந்த உறுதிப்பாட்டையும் வழங்க முடியாது. குற்றம் செய்தவர்தான் என்று விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், நிச்சயம் நாம் அதனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
அவர்களது அரசியல் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருக்கலாம். சிலர் தேவையற்ற விடயங்களைப் பேசியே மாட்டிக்கொள்வர்கள். அவ்வாறு இருக்க முடியும். யாரும் தெரிந்துகொண்டே பயங்கரவாதத்துக்கோ அல்லது பயங்கரவாதியாக மாறப்போவதை பார்த்துக்கொண்டே அதற்கு உதவியாகவா போவார்கள் என்று நான் நம்பவில்லை.
குற்றம்சாட்டப்பட்ட ஒருவரையும் சேர்த்துக்கொண்டு எல்லா அமைச்சர்களும் பதவிவிலகி, அந்த குற்றவாளியை விசாரிப்பதற்கு இருந்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்ததன் மூலம் நீங்களும் பயங்கரவாதத்துக்கு துணைபோயுள்ளீர்கள் என்று நான் சொல்கின்றேன்?
நீங்கள் யாரையும் எப்படி அவ்வாறு குற்றவாளி என்று சுட்டிக்காட்ட முடியும்? ரதன தேரரின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து ஞானசார தேரர் விடுத்த 12 மணிகெடு காரணமாக நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான மாபெரும் அழிவு ஏற்படபோவதையும் அதன் மூலமாக நாடே பற்றி எரியப்போகும் பயங்கரத்தை தடுப்பதற்காகவே நாம் அந்த முடிவை ஒருங்கிணைந்து எடுத்தோம். அவசரகால சட்டம் அமுலில் இருக்கும்போதே இந்தப் பயங்கர நிலைமையை தடுக்கும் ஒரு தேவைப்பாடு அரசுக்கு இல்லை என்ற தோற்றத்தை கண்ணுற்றோம். சிறியதொரு குழுவின் செயலுக்கு முழு முஸ்லிம் சமுதாயமும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படுவது போன்ற ஒரு அபாய நிலை இருந்தது.
நீங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து மொத்தமாக விலகியதன் மூலம்தானே முழு சமூகத்தையும் குற்றவாளிகளாக பார்க்கும் நிலைமை ஏற்பட்டது?
சந்திக்கு சந்தி கறுப்புக் கொடிகளோடும் தடிகளோடும் பொலன்னறுவை முதல் அக்குறணை வரை கோஷங்கள் கொடுத்தவாறே கடைகளை மூடச்சொல்லி பலாத்காரம் செய்து நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக வருவதை அறிந்தோம். இவையனைத்தும் நடப்பது அவசரகாலச் சட்டம் இருக்கும்போது. அரசு அதனை தடைசெய்ய எந்தவொரு முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. நாம் நிர்க்கதியானோம். அப்போது எமக்கு வேறு வழி தெரியவில்லை.
இதற்கெல்லாம் அடிப்படை மூன்று பேரின் இராஜினாமாக்களின் அழுத்தம் அல்லவா? விசாரணைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட மூன்று பேரும் இராஜினாமா செய்யுங்கள் என்றுதானே நீங்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக எல்லோரும் இராஜினாமா செய்தது சரியா? உங்களின் இந்த ஒருமித்த முடிவு காரணமாக வேறு பிரச்சினைகளை தலையில் போட்டுக்கொண்டீர்கள் என்று நினைக்கவில்லையா?
இதன் பின்னணியில் நடந்த விடயங்கள் பற்றி உங்களுக்குத் தெரியாது. நாட்டுக்குத் தெரியாது. அதுபற்றி நான் விளக்க வேண்டும். இந்த சம்பவம் நடந்தது திங்கட்கிழமை. அதற்கு முந்திய இரவு கபீர் ஹாசீம் என்னை தொலைபேசியில் அழைத்து நீண்ட உரையாடலின் பின்னர் தற்போது நாட்டில் பாரிய குழப்பம் ஏற்படும் நிலையுள்ளதாகவும் என்ன செய்வோம் என்றும் கேட்டார்.
இராஜினாமாக்களை கேட்டுத்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுபற்றி நீங்கள் பிரதமரோடு கலந்து ஒரு முடிவு எடுக்கலாமே என்றேன். அவர் பிரதமரோடு கதைப்பதாகவும் அவர் பாதுகாப்பு பற்றி வழங்கிய உறுதிப்பாட்டில் நாட்டின் நிலைமைகளை பார்க்கும்போது திருப்தி கொள்ள முடியாது என்றும் கூறினார்.
றிஷாத் பதியுதீன் பற்றி குறிப்பிட்டபோது என்னால் இராஜினாமா செய்யுமாறு அவரிடம் சொல்லமுடியாது. வேண்டுமானால் நீங்கள் அவரிடம் பேசிப்பாருங்கள் என்று குறிப்பிட்டதாகவும் சொன்னார். அதன் பிரகாரம் றிஷாதிடம் பேசினேன். தன்னால் இராஜினாமா செய்ய முடியாது என்று அவர் உறுதியாக சொல்லிவிட்டார் என்றும் சொன்னார். நான் ஒக்டோபர் மாதம் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக வழங்கிய பங்களிப்புக்காக என்னை பழிவாங்கும் நோக்கமாக எதிர்க்கட்சியினர் செய்யும் சதி முயற்சிதான் இது. என்னை அவர்களின் பலிக்கடாவாக்க வேண்டாம் என்று அவர் சொன்னதாகச் சொன்னார்கள். அவர் இராஜினாமாவுக்கு தயாரில்லை என்றால், அவர் சொல்லும் காரணத்திலும் ஒரு நியாயம் இருப்பதாக தெரிந்தது.
நான் மற்றும் றிசாத் எல்லோரும் மக்காவுக்கு சென்று அரசைப் பாதுகாத்தது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படியானால் இந்த விடயங்களும் ஒக்டோபர் விடயத்தோடு முடிச்சுப் போடப்படுவதால் வேறு வழியில்லாமல் இந்த முடிவுக்கு வந்தோம். இது ஒரு பக்கம். அடுத்த பக்கம் பார்த்தால் அடுத்தநாள் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டிருந்தால், நாட்டில் களியாட்டம் நடக்கும் என்று ஞானசார தேரர் கூறியிருந்த நிலைமை என்னவாகிருக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எஸ்.பி. திஸாநாயக்க கூறும் இந்த காணொலியை பாருங்கள். றிஷாத் பதியுதீனை சுத்தப்படுத்துவதற்காக ரணிலின் ஏற்பாட்டில் சகல முஸ்லிம் அமைச்சர்களையும் பதவி விலகச் செய்து முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்தியுள்ளதாக உங்கள் மீது குற்றம்சுமத்துகிறாரே?
எஸ்.பி. மிகவும் சூட்டோடு கதைத்ததை நான் கண்டேன். அவ்வாறு ஆவேசப்பட வேண்டிய தேவை எனக்கில்லை. இங்கே ஓர் அரசியல் கோணம் இருப்பது தெளிவாகப் புரியும் விடயம். கனவு ஆவேசத்தோடு பேசுவதை விட்டுவிட்டு யதார்த்தத்தையும் பேச வேண்டும். ரணிலின் தேவைக்கு நம்மை கொண்டு செய்வித்ததாக சொல்வது முழுப் பொய்யாகும்.
நாம் மக்களின் பாதுகாப்பை விசேடமாகக் கொண்டு ஓர் அடையாளம் செய்தியையே இதன்மூலம் வழங்கியுள்ளோம். நாட்டுக்கும் இதனால் சர்வதேச மட்டத்தில் ஒரு பாரிய அபகீர்த்தியும் ஏற்படலாம். அத்தோடு நாம் இவ்வாறு செய்திருக்காவிட்டால் ஏதும் பாரிய விபரீதம் நடந்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஏற்படும் இழப்பு மற்றும் கொடுமைகள் காரணமாக அந்த சமூகத்திலிருக்கும் இளைஞர்கள் கொதித்தெழுந்து போராடத் தொடங்கினால் என்ன நடக்கும்?
எமது அரசியல் தலைமைகள் என்ன செய்தார்கள். எமக்கு கொடுமை நடக்கும்போது அரசில் அமைச்சர்களாக இருந்து எம்மை பாதுகாக்க தவறிவிட்டார்கள் என்று கொதித்துப் போவார்கள். நாங்கள் அடிக்கடி அடிபடவும், இவர்கள் சுகவாழ்க்கை வாழ்வதுமா என்று கேள்வி கேட்பார்கள். இவர்களால் இனி பயனில்லை, வேறு வழி பார்ப்போம் என்று வேறு திசையில் போய்விட்டால் அது எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தோம். அப்படி நடக்காமல் செய்வதும் எமது முக்கிய குறிக்கோளாக இருந்தது. அது மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது.
குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர்த்து, நீங்களும் கபீர் சிங்கள மக்களிடம் சென்று, வாழும் எல்லோருக்கும் மத்தியில் பகிரங்கமாக கதைத்து விபரித்திருந்தால் இந்தப் பிரச்சினை இப்படி வளர்ந்திருக்காதல்லவா? நீங்கள் ஒன்றாக இணைந்ததன் காரணமாகத்தான் இந்த குற்றச்சாட்டுகள் உங்களுக்கும் வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது?
எஸ்.பி.யின் கம்பீரத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். அவர் ஹாய் ஹூய் என்று ஆவேசப்பட்டதால் யாரும் குழம்பிக்கொள்ள தேவையில்லை. எமக்கென சில கொள்கைகள் உள்ளன. அவ்வாறு பழி சுமத்தும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை. எமது கொள்கைகளை யாரும் விமர்சிக்கலாம். அதில் பிரச்சினைகள் இல்லை. நாம் நன்றாக ஆராய்ந்து எடுத்த முடிவு நாட்டின் நலனுக்காகவும் சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் எடுக்கப்பட்ட முடிவுகளாகும்.
நீங்கள் எடுத்த இந்த முடிவு சரியானதுதான் என்று நினைக்கின்றீர்களா?
மிகச்சரியான முடிவு என்றே நம்புகிறேன். இந்த நாட்டில் ஏற்பட்ட குழப்பமான நிலையை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த இந்த முடிவு காரணமாக இருந்துள்ளது. தற்போது அமைதி நிலைமை சமூகத்துக்குள் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் வேறு திசைகளில் மாறிப் போவதை தவிர்த்துக் கொண்டோம். எமது தலைவர்களை நம்பலாம் என்ற ஒரு மனப்பான்மையை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். இவை வெற்றிக்கும் மேலாக, நாட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய அழிவை தவிர்த்துக்கொள்ள ஏதுவாக அமைந்தது.
இது இப்படியே தொடருமானால் இனங்களுக்கிடையே ஒரு விரிசலும் தூரமாக்கலும் ஏற்படும் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். இதைத்தான் மகாநாயக்க தேரர்களும் சங்க சபையினரும் சொன்னார்கள். அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை என்று இப்போது சொல்லிக்கொள்பவர்களும் இருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களும் இராஜினாமா செய்வதன் மூலம் அந்த செயற்பாட்டில் ஒரு தாக்கம் இருப்பதாக அவர்கள் குறிப்பிடுவதிலும் நியாயம் உள்ளதை ஒப்புக்கொள்கிறோம்.
நாமும் அதைத்தான் சொல்கிறோம். பயங்கரவாதத்துக்கு துணைபோனதாக சிலருக்கு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. நீங்கள் அதில் சேரவில்லை. சாதாரண முஸ்லிம் மக்களும் சேரவில்லை. அவர்களோடு நீங்கள் அனைவரும் சேர்ந்ததன் மூலம்தான் இந்த நிலைமை தோன்றியது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
உணர்ச்சிவசப்பட்டு பார்த்தால் அந்த முடிவுக்கு வரவேண்டியேற்படும். ஆனால், அறிவுபூர்வமாக இதை நாம் யோசித்துப் பார்த்தால் நான் சொல்லும் யதார்த்த நிலையை புரிந்துகொள்ளலாம். நானும் கபீரும், சிரேஷ்ட அரசியல்வாதி பௌசியும் இந்த சம்பாஷணையில் இருந்தோம். அவர் சொல்லும் விடயங்களை நாம் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்த தீர்மானமே இது.
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஒன்று சேர்த்து பயங்கரவாதத்துக்கு எதிராக நீங்கள் மற்றும் கபீர் ஹாசீம் போன்றவர்கள் வெளியே வந்து குரல் கொடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது அல்லவா? இராஜினாமா செய்வதை விட அது பிரயோசனமாக இருந்திருக்குமே? நீங்கள் குரல் கொடுத்தது போதாதல்லவா?
இந்த சம்பவத்துக்கு முன்னரும் சம்பவம் நடந்த பின்னரும் எம்மாலான அனைத்து உதவிகளையும் முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில்தான் குருநாகல், ஹெட்டிபொல, கினியம போன்ற இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. முழுநாடும் பரவிய வன்முறைகள் கடைசியாக மினுவாங்கொடையில் வந்து நின்றது. மக்கள் தாக்கப்படும்போதும் உடமைகள் அழிக்கப்படும்போதும் பரிதாபமான நிலைக்கு அவர்கள் தள்ளப்படும்போது நாட்டில் பாதுகாப்புக்கும் சமாதானத்துக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் கண்டும் காணாமல் செயலற்று இருக்கும்போது முஸ்லிம் மக்கள் யாரையும் நம்பாத நிலைக்கு ஆளாகினர்.
முக்கியமாக அவசரகாலச் சட்டமும் ஊரடங்கும் இருக்கும் நிலையில்கூட இவ்வாறு நடப்பதை மக்கள் நம்பமுடியாமல் இருந்தனர். அத்துரலிய ரதன தேரரின் உண்ணாவிரதம் என்பது அவசரகாலச் சட்ட நியதிகள்படி அனுமதிக்க முடியாத செயலாகும். இதன் முடிவு பாரியதொரு அழிவை ஏற்படுத்தவே என்பதை எல்லோரும் ஏற்கனவே உணர்ந்தினர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் உடனடித் தீர்வுகள் எடுத்தாக வேண்டும். இனங்களுக்கிடையே பிரிவினைவாதத்தை தூண்டும், வெறுப்பூட்டும் பேச்சுகள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவை ஒன்றையும் கண்டும் காணாததுபோல இருந்ததொரு சூழலில் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும். நாங்கள் அதனைத் தடுத்துக் கொண்டோம்.
அத்துரலிய ரதன தேரர் உண்ணாவிரதம் இருந்தது இராஜினாமா கோரித்தான். ஆளுநர் இருவரும் இராஜினாமா செய்ததும் அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால், அதன் பின்னரும் நீங்கள் இராஜினாமாவில் தங்கியிருந்தது றிஷாத் பதியுதீனை பாதுகாப்பதற்குத்தானே?
நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஞானசார தேரர் ஊர்வலமாக வந்து கொண்டிருக்கும் நிலையைத் தடுப்பதற்காக ஏதேனும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். சம்பந்தப்பட்டோரை அடிக்கடி விளித்துக் கொண்டும் இருந்தோம்.
இல்லை. ஆளுநர்களின் இராஜினாமாவோடு கண்டி, கெட்டம்பே ஊர்வலம் நின்றது. உண்ணாவிரதம் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர்தானே நீங்கள் அனைவரும் ஒன்றாக இராஜினாமா செய்தீர்கள்?
ஊர்வலம் நின்றது என்று நீங்கள் சொன்னாலும், அந்த நேரத்தில் சந்திக்கு சந்தி மக்கள் குழப்பம் விளைவிக்க தயாராகவே இருந்தனர். இதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உங்கள் இராஜினாமாக்களோடு அவர்கள் கலைந்து சென்றார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்கள் கலைந்துபோனது உண்ணாவிரதம் முடிந்து போனதால்…?
புலிகளின் யுத்தம் முடிந்த கையோடு அடிப்படைவாதிகளைக் கொண்டு வேறொரு குழப்பத்துக்கான வித்துகள் தூவப்பட்டுக் கொண்டிருந்ததை நாம் கவனித்தோம். இது நீங்கள் நினைப்பதுக்கு மேலான பிரச்சினையல்ல.
றிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தால் அரசு குழம்பப்போகின்றது. அதற்கு முன்னர் இதை தடை செய்ய வேண்டும் என்று உங்களுக்கு அரசின் மேல்மட்டத்திலிருந்து செய்தி வந்ததா?
இல்லை. நாம் அப்படி யாரையும் பாதுகாக்கத் தேவையில்லை. இந்த அறியாப் படங்களை நாமும் பார்த்துக் கொண்டிருப்பதால் குற்றங்களுக்கு எதிராக ஒரு விசாரணை வேண்டும் என்பதையே நாமும் கேட்டோம். ஒரு நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாடினால் அவரைப் பற்றி ஒரு குற்றப் பத்திரிகையோடு பொலிஸ் தலைமையகத்துக்கு செல்லாது கமெராக்களோடு வருவார்கள். அங்கிருந்து வெளியே வந்ததும், நாம் இன்னாருவருக்கெதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம் என்று ஊடகங்களுக்கு செல்வார்கள்.
குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கின்றது. எதை சொல்கின்றார்கள், சாட்சியம் உள்ளதா என்று ஒன்றும் தெரியாது. ஆனால், குறித்த நபரை குற்றவாளியாக்கி விடுவார்கள். இந்த விடயத்திலும் சம்பவம் நடைபெறும்வரை எவருமே யாருக்கும் விரோதமாக பொலிஸ் தலைமையகத்துக்கு செல்லவில்லை. சம்பவம் நடந்ததும் எல்லோரும் போகின்றார்கள்.
குண்டுதாரிகள் ஒருவருக்குச் சொந்தமான தொழிற்சாலை வெல்லம்பிட்டிய பகுதியிலுள்ளது. அவருக்கு பாவிக்கப்பட்ட தோட்டாக்கள் வழங்கப்படுகின்றன. வெடிபொருள் கிடைக்கின்றது. அடுத்து எந்தரமுல்ல பகுதியில் குண்டுதாரிகள் மறைந்திருந்த வீடு பற்றிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதாகிறார். அவர் குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவரின் சகா என்று சொல்லப்பட்டது. இவை உறுதியளிக்கப்பட்ட சாட்சியங்கள் இல்லையா? நீங்கள் இதற்காக குரல் கொடுக்கவில்லையே?
வெல்லம்பிட்டிய சம்பவம் பற்றி வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். 9 பேர் விடுவிக்கப்பட்டார்கள் என்றும் சொன்னீர்கள். ஆம். பொலிஸார் செயற்பட வேண்டிய ஒரு முறையுள்ளது. இதுபோன்ற விபரீதமான சம்பவங்களின்போது அவர்கள் சட்ட ஆணையாளரின் ஆலோசனைக்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். நீதிமன்றத்துக்கு சரியான முறையில் சட்டப் பிரிவுகளை சொல்லி குற்றவாளிகளை முன்னிலைப்படுத்தக்கூடிய அனுபவமுள்ள பொலிஸார் எல்லா பொலிஸ் நிலையங்களிலும் இருக்கமாட்டார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் காரணம் அரசின் மெத்தன போக்கல்லவா? குறித்த நேரத்தில் சரியான நடவடிக்கைகளை அரசு எடுத்திருந்தால், களியாட்டம் நடக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காதல்லவா? உங்களுக்கு இராஜினாமா செய்யவோ, களியாட்டம் நடத்தவோ தேவையிருக்காதல்லவா?
எல்லா இடத்திலும் குறைபாடுகள் இருந்தன. அதை ஒப்புக்கொள்ள வேண்டும். பொலிஸ்மா அதிபர் பலவந்தமாக விடுமுறையில் அனுப்பப்பட்டதும் புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி கொடுத்த விளக்கங்களும் தெரிந்ததுதானே. ஒரு மெத்தனமான போக்கையே கடைப்பிடித்திருந்தார்கள் என்பதற்கான சாதகம் உள்ளது. ‘மிக மெத்தனமாக’ என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் எதை செயற்படுத்த வேண்டுமோ அது நடைபெறவில்லை. தெரிவுக்குழுவில் மேலும் பல விபரங்களைப் பெறலாம். குறைபாடுகளை அப்போது நிவர்த்திசெய்து கொள்ளலாம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அதிகாரிக்கும் பொறுப்புக்கூறலும், பொறுப்பேற்றலும் இருந்துள்ளன. மேலிருந்து கீழே வரை சில மெத்தனப் போக்கு இருந்துள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
யுத்தத்தின் பின்னரான சமாதான சூழலும் ‘ரெடியாக இரு’ என்றிருந்த புலனாய்வுத்துறையை ‘ஓய்வாக இரு’ என்ற நிலைக்கு மாற்றியதோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. இப்போதெல்லாம் முடிந்துவிட்ட நிலை. ஒருவருக்கொருவர் கைநீட்டி குற்றம் சாட்டுவதை நிறுத்திக்கொண்டு எங்கே தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து அதற்கான சிறந்த தீர்வுகளை எடுப்பதே சாலச்சிறந்தது என நம்புகின்றேன்.
தெரிவுக்குழுவில் கைநீட்டி குற்றம் சாட்டப்படுவதுபோல இருக்கின்றதே?
நான் என்றால் அதை எதிர்க்கிறேன். நான் ஊடகங்களுக்கு எதிரானவன் அல்ல. சுடச்சுட செய்திகளை அவர்கள் தேடிக் கொள்கிறார்கள். இந்த தெரிவுக்குழு விசாரணைகளை ஊடகங்களுக்கு திறக்கக் கூடாதென்று நான் ஆரம்பத்திலேயே கூறினேன்.
இது பௌத்த நாடு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
ஆம். இது பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும், பல்லின சமூகத்தவர்கள் வாழும் நாடு.
(ஹிஸ்புல்லாஹ்வின் காணொளியைக் காட்டி) இவருடைய பேச்சைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
அவரது பேச்சில் ஓரிடத்தில் மாத்திரம்தான் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார். அதைப்பற்றி என்னிடம் சிறு விமர்சனம் உண்டு. அவர் அதற்காக வேறொரு அர்த்தத்தையும் சொன்னார். தெரிவுக்குழுவுக்கு வந்திருந்தபோது, நாம் இங்கேதான் சிறுபான்மை உலகளவில் பெரும்பான்மை. எனவே, பயப்படத் தேவையில்லை என்று அவர் சொன்னதை இங்கே வாழும் பெரும்பான்மை மக்கள் வேறொரு அர்த்தத்தில் பார்க்கக்கூடிய வாய்ப்புள்ளது. உலகளாவிய உதவியைப் பெற்று இலங்கையில் பிரச்சினையை உருவாக்கப் போகின்றார்களா என்ற சந்தேகம் பெரும்பான்மைக்கு ஏற்படலாம்.
முஸ்லிம் என்பது மதமா அல்லது இனமா?
இஸ்லாம் என்பது மதம். அதைப் பின்பற்றுவோர் முஸ்லிம்கள்.
ஈராக்கில் இருப்பவர் ஈராக் இனத்தவர். அரேபியாவில் அரேபிய இனத்தவர். இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம் இனம் என்று சொல்லப்படுகிறதே?
தமிழ்பேசும் மக்களுக்கிடையே இருப்பதால் தம்மை தமிழரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியே தனித்துவமான உரிமைகளைப் பெறலாம். தனித்துவமான ஓர் இனமாக அரசியல்ரீதியாகவும் வகைப்படுத்தப்பட்டார்கள். இனம் என்பது மத ரீதியாகவும் ஏற்படலாம், மொழி ரீதியாகவும் ஏற்படலாம்.
நீங்கள் தெரிவுக்குழுவில் இருக்கிறீர்கள். அங்கு ஹிஸ்புல்லாஹ்வின் கிழக்கு பல்கலைக்கழகம் பற்றியும் கேள்வியெழுப்பப்பட்டது. 3.9 பில்லியன் ரூபா பணம் நேரடியாக தனிநபர் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. இலங்கையில் நாணய பரிமாற்ற சட்டத்தின் கீழ் அவ்வாறு செய்ய இயலுமா?
முதலீட்டுக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கணக்கு மூலமாக வரலாம்.
மத்திய வங்கியின் அனுமதி பெறாமல் அவ்வாறு வரலாமா?
சாதாரணமாக ஒரு வர்த்தக வங்கியில், கணக்கு திறக்கும்போது மத்திய வங்கியின் அனுமதியின் பேரில்தான் அது திறக்கப்படும். சியரா கணக்கு என்று ஒன்றுள்ளது. அதன் மூலமும் வரலாம்.
இதுதான் சியரா கணக்கு மூலமாக இல்லையே. அவ்வாறு அங்கே சொல்லப்படவில்லையே. அவர் சொல்கிறார் அதுபற்றி தெரியாது என்று. நீங்கள் அவரைப் பாதுகாக்கின்றீர்களா?
சட்டம் மீறப்பட்டுள்ளதால் அவர் அதற்காக பொறுப்புக்கூற வேண்டும்.
அத்துரலிய ரதன தேரரின் உண்ணாவிரதம் சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்சினையில் நேரடியாக பதில் வழங்கும் நீங்கள் இந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலை தருகின்றீர்கள் இல்லையே?
இல்லை. இது பணப்பரிமாற்றம் அல்லது நாட்டுக்குள் பணம் வருவிக்கப்படும் முறை. இது வர்த்தக வங்கி பொறுப்புக்கூற வேண்டிய விடயம். இதுபோன்ற ஒரு கணக்குக்கு பாரிய தொகை வைப்புச் செய்யப்படும்போது, பணப்பரிமாற்றம் பற்றி புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களுக்குள் உட்பட்டுத்தான் ஒரு வர்த்தக வங்கி ஒரு கணக்கை திறக்கவேண்டும். கணக்கு வைத்திருப்பவர் மட்டுமல்ல, வர்த்தக வங்கியும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
மகன் சொல்கிறார், இது நன்கொடை என்று. தந்தை ஹிஸ்புல்லா சொல்கிறார் கடன் என்று. இதில் எது உண்மை?
தெரிவுக்குழுவில் அவர் கடன் என்றுதான் குறிப்பிட்டார். நன்கொடை பின்னர் கடனாக மாற்றப்பட்டதா என்று தெரியாது. கடன் என்றால் அதற்கு வட்டி கொடுப்பதில்லை. ஆனால், தமது வருமானத்தில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தப்படி அது கடனாக மாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
சட்டத்துக்கு முரணாக ஒரு அரச காணியை பாவிக்கமுடியுமா?
அரச காணிகளை சட்டத்துக்கு முரணாக யாரும் பாவிக்கமுடியாது.
8 ஏக்கர் காணி அவரால் சட்டத்துக்குப் புறம்பாக பாவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதே?
அது உண்மையானால் அதுபற்றி கருமமாற்ற முடியும்.
சட்டம் சரியாக அமுல்படுத்தப்படுவதில்லை. நிதிச்சட்டத்தை மீறுவது தண்டனைக்கு உட்பட்டதுதானே? அதற்கு பிணை இல்லையல்லவா?
அப்படி மீறப்பட்டிருந்தால், குற்றப்பத்திரத்தை சமர்ப்பிக்கப்பட்டு செயற்படலாம்.
இவை பற்றி எல்லாம் பேசப்படுகிறது, நடவடிக்கை எடுக்க குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட வேண்டுமா? அரசு இதுபற்றி தேடக்கூடாதா?
அரசு இப்போது தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டிற்கு உயர்கல்விக்காக ஒரு முதலீடு வருவதென்பது தவறில்லை என்பது எனது கருத்து. அது ஒரு உயர்கல்வி நிறுவனம். பல்கலைக்கழகமாக்கப்படும் அல்லது வேறு உயர்கல்வி நிறுவனமாக்கப்படும்.
ஆனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி பெறப்படவில்லை. தனியார் பல்கலைக்கழகம் பற்றிய மசோதா உள்ளது. அந்த அனுமதியும் பெறப்படவில்லை அல்லவா?
அரச சார்பற்ற தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் வழங்கும் அனுமதிக்கான ஒரு நடைமுறையுள்ளது. நான் சிறிது காலம்தான் இதற்கான அமைச்சராக இருந்திருக்கிறேன். அந்தக் காலத்திற்குள் சில விடயங்களைத் தெரிந்து கொண்டேன் “ஸ்கா” எனும் தரப்படுத்தும் சபை மூலமாக ஒவ்வொரு பாடத்திட்டத்தைப் பற்றியும் பரீட்சித்துப் பார்க்க நிபுணர்கள் நியமிக்கப்படுவர். கற்கை நெறிகளுக்கான பௌதீக வளங்கள் உள்ளனவா, அவற்றுக்கான விரிவுரையாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனரா என்பதை சபை கவனிக்கும்.
நீங்கள் அன்று தெரிவுக்குழுவில் இருந்தீர்கள். ஆனால் பெரிதாக கேள்விகள் கேட்கவில்லைதானே. அங்கே தெளிவாக குறிப்பிடப்பட்ட விடயங்களில் தவறுகள் நடந்திருப்பதற்கான சாட்சியங்கள் தெளிவாக தெரிந்தன. இதற்கான சட்ட செயற்பாடு உடனடியாக எடுக்கப்பட வேண்டுமா இல்லையா? இதற்கு உங்களிடம் இருந்து நேரடி பதில் வேண்டும்.
சட்டம் ஒழுங்காக செயற்பட வேண்டும். அதில் விவாதம் இல்லை. நான் கண்டது இதுதான், நான் உண்மையையே பேச வேண்டும். கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவரிடம் ஒரு பதில் இருந்தது. ஆனால் அவர் கூறிய பதில்களினால் பிழை நடந்திருப்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் வங்கிக் கணக்கு விபரங்களை எல்லாம் காட்டினார். கணக்குக்கு வந்த பணம் செலவுகளுக்கான விபரங்களையும் காட்டினார்.
மேலதிகமாக 8 ஏக்கர் சரி என்றா சொல்கிறீர்கள் ?
8 ஏக்கர் பற்றி அங்கே குறிப்பிடப்படவில்லையே.
இல்லை குறிப்பிடப்பட்டது. அவருக்கு கொடுக்கப்பட்டது 35 ஏக்கர் மகாவலி காணியிலிருந்து 65 ஏக்கர். அவர் அதை ரிஸவேசன் என்கிறார். ஆசு மாரசிங்க சொன்னார் அது ரிஸவேசன் இல்லை என்று. உங்களுக்கு அது கேட்கவில்லையா ?
இவை எல்லாம் நடந்திருப்பது சென்ற அரசாங்கத்தின் காலத்தில். டலஸ் அழகப்பெரும வந்து அதை திறந்து வைத்தார். அவர் சென்ற அரசாங்கத்திலிருந்து காணியை எடுத்தது எதற்காகவென்று தெரிந்திருக்க வேண்டுமல்லவா?
அது எதற்காக கட்டப்படுவது என்று சொல்லப்பட்டது? தொழில்நுட்ப பயிற்சிக்கு என்றும் இலவசமாக கல்வி கற்கும் நிறுவனம் என்றும்தான் சொல்லி இருக்கிறார்கள். அதனால்தான் 35 ஏக்கர் கொடுக்கப்பட்டது இது பற்றி நீங்கள் கொஞ்சம் தேடிப்பார்ப்பது நல்லதில்லையா ?
தேடிப்பார்க்க முடியும். தொழில்நுட்பப் பயிற்சிக்கென்று ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தாலும் பின்னர் நாம் அதை பல்கலைக்கழகமாக மாற்றுவோம் என்று சிந்தித்திருந்தால் அதில் பிழையில்லையே. அதற்காக முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் உள்ளனர். நன்கொடையாக வழங்கவோ கடனாக வழங்கவோ அதற்குத் தேவையான ஒரு நிறுவனத்தையோ நிறுவி செயற்படலாம் என்று தீர்மானித்ததில் தவறு காண முடியாது.
அவரை குற்றவாளியாகப் பார்க்கின்றீர்களா ?
ஆங்கிலத்தில் Stereo Typing (ஸ்ரிரியோ ரைபிங்) என்பார்கள். முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் அவர் செய்வது எல்லாம் தவறு என்று ஒரேயடியாக தீர்மானம் மேற்கொள்வது தவறாகும்
இவை எல்லாம் தெரிவுக்குழுவில் அத்தாட்சிகளோடு சொல்லப்பட்ட விடயங்கள். வங்கி தவறு செய்திருந்தால் வங்கிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் சிறு குழந்தை இல்லையே. சட்டத்திற்குப் புறம்பாக உங்கள் கணக்கில் ஒரு வங்கி பணத்தை வைப்பிலிட்டால் நீங்கள் அதை ஒப்புக்கொள்வீர்களா?
அவர் அன்று காட்டிய விபரங்களை பார்த்தபோது சட்டப்படிதான் பணம் கணக்குக்கு வரவு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வெளிநாட்டிலிருந்து இந்நாட்டு வங்கி கணக்குக்கு பணம் வருவது மற்றும் தெரிந்து கொண்டு தவறான பணபரிமாற்றல் சட்டம், பயங்கரவாதத்திற்கு உதவும் வகையில் பணப்பரிமாற்றம் சம்பந்தமான சட்ட திட்டங்கள் வர்த்தக வங்கிக்கு நன்றாக தெரியும். சந்தேகம் இருந்தால் உடனடியாக மத்திய வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அது நடந்ததா, இல்லையா? அதேபோன்று சந்தேகம் ஏற்பட்டதா இல்லையா? இதெற்கெல்லாம் வர்த்தக வங்கியும் பொறுப்புக்கு கூற வேண்டும்
அவர் சொன்ன பதில்தான் தெரியாது என்பது
அவரது வங்கி இலங்கை வங்கி என்று எண்ணுகிறேன். அந்த வங்கி இது பற்றி அவரிடம் விளக்கம் கேட்டிருக்காத பட்சத்தில் இது போன்ற ஒரு பாரிய தொகைப் பணம் வந்திருந்த ஒரு சமயத்தில் அதுவும் ஒரு அரசாங்க வங்கி கேட்டிருந்திருக்க வேண்டும். அது முதலீட்டுக்காக வந்திருந்தால் பிரச்சினைகள் குறைவுதான். ஒரு முஸ்லிம் என்றில்லாமல் இருந்தாலும் கூட நான் யாரையும் நேரடியாகக் குற்றவாளி என்று சொல்ல மாட்டேன் குற்றங்கள் சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட்டால்தானே குற்றவாளி எனக்கூற முடியும்.