சிங்களத்தில்: சிசிர குமார பண்டார,
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
ஆதிகாலத்திலிருந்தே இலங்கை சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்து வந்த எழில் மிகு தீவாகும். பிற்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தோரும் இங்கு குடியேறி, இந்நாட்டின் பிரஜைகளானார்கள். அவ்வாறு வந்து குடியேறிய ஒரு இனக்குழுமமாகவே இந்நாட்டு முஸ்லிம்களும் திகழுகிறார்கள்.
ஆனாலும் இதர இனங்களை விடவும் முஸ்லிம்களிடம் விசேட தன்மையொன்று காணப்படுகிறது. அதாவது அவர்களுள் ஒரு சிலரது பரம்பரைப் பெயர்கள் சிங்களப் பரம்பரைப் பெயர்களோடு இணைந்ததாகவுள்ளமையே இவ்வாறு சிறப்பிடம் பெறுகிறது. அக்குறண முஹம்திரம்லாகே கெதர அபூபக்கர், உடரட்ட ராஜகீய வீமகஹகொட்டுவ வைத்தியரத்ன முதியான்ஸேலாகே, ராஜகீய வைத்திய பூவெலிக்கட வைத்தியரத்ன முதியான்ஸேலாகே, பூவெல்ல குருனெஹேலா கெதர, பெஹெத் கே வளவ்வ, யஹலதென்ன நய்தலாகெதர–மம்மட்டி தம்பி, வடதெனிய கங்கானம்லா கெதர போன்ற பெயர்களை உதாரணங்களாகக் காட்டலாம். இன்றும் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் இத்தகைய சிங்களப் பரம்பரைப் பெயர்களுடன் அழைக்கப்படும் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கண்டி மாவட்டத்திலேயே காணப்படுகிறார்கள்.
கலாநிதி லோனா தேவராஜா எழுதிய, ‘‘இலங்கையில் முஸ்லிம்கள்’’ என்ற நூலில், “ஆட்சியாளர்களின் அனுசரணையோடு இலங்கையில் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் நாட்டின் உட்பிரதேசங்களில் வாழ்வதற்கு சில காலங்கள் எடுத்தன” என்று குறிப்பிடுகிறார்.
போர்த்துக்கீசரின் வருகையைத் தொடர்ந்தே கரையோரங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் பிரவேசிக்க ஆரம்பித்தனர்.
லோனா தேவராஜாவின் நூலில் இதுவிடயமாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
“மாத்தறையில் இடம்பெற்ற முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு காரணமாக அபாயத்தை எதிர்நோக்கிய முஸ்லிம்கள், கண்டிக்கு இடம்பெயர்ந்தனர். தந்தை மாயாதுன்னையைப் போன்றே, 1635 முதல் 1687 சீதாவாக்க ராஜதானியை ஆண்ட ராஜசிங்க மன்னனும் தம் பிரதேசங்களில் முஸ்லிம்களைக் குடியேற்றினான். மேலும் எதிரிகளுடன் போராடுவதற்காக பலம் வாய்ந்த அராபிய வீரர்கள் மூவரையும் தம்முடன் அமர்த்திக் கொண்டான். யுத்தம் வெற்றி கொண்டதன் பின்னர் அம்மூவரையும் இங்கு தங்கியிருக்கும் படி தாராள மனம் படைத்த மன்னன் கேட்டுக் கொண்டான். மலையக மங்கைகளைத் தமக்கு மணமுடித்துத் தரும்படி குறித்த அராபிய வீரர்கள் மூவரும் மனந்திறந்து கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற மன்னன் அதற்கான வாய்ப்புகளையும் திறந்து கொடுத்தான். அரச அனுசரணையோடு இடம்பெறும் கண்டிபெரஹராவில் கலந்துகொண்டிருந்த இளம் கன்னியர் மூவரையும் அராபிய வீரர்கள் கரம் பற்றி அரச மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மறைத்து வைத்திருந்த அக்குமரிகளின் பெற்றோர் இது குறித்து அரசனிடம் முறையிட்டனர். உங்கள் பிள்ளைகளை அரபிகளுக்கு மணமுடித்துக் கொடுங்கள் என்று மன்னனும் அன்புக் கட்டளை வழங்கினார். அவர்களும் அதற்கிணங்கினர். மணமுடித்த அராபிய தம்பதிகள் மூன்றும் அக்குறணையில் குடியமர்ந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஊடகவியலாளர்களாகிய நாம் கண்டிக்குச் சென்று சிங்களப் பரம்பரையில் வந்த பலரையும் சந்தித்து அவர்கள் குறித்த விபரங்களைப் பெற்றோம். அந்த வகையில் பெற்ற தகவல்கள் வருமாறு.
தென்னே வளவ்வே ஐதுருஸ் மொஹம்மட் நிஜாம்தீன்
(வயது – 63)
நாம் இப்போது கண்டியில் வசித்து வருகின்ற போதும் எமது பாட்டன்– பாட்டி தெல்தொட்ட கொனம் கொட கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். எமது முதல் தலைமுறை மஹமு நெய்னா. அவரது சகோதரர்கள், பாத்த ஹேவாஹெட்ட தெல்தொட்ட( கரகஸ்கட) பட்டியகம, பல்லேகம, உடகம, உடதெனிய ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர். அவர்கள் உடஹ, பல்லேஹா, மெத ஆகிய பல வளவுகளுக்குச் சொந்தக்காரர்களாகவும் இருந்தனர்.
மஹமு நெய்னா சிறந்த வைத்தியராகவும் திறமை வாய்ந்த கட்டடக் கலைஞராகவும் திகழ்ந்துள்ளார். பாற்கடல் கடைவதற்குரிய ஆலோசனைகளைக் கூட அரசனுக்கு வழங்கியதாகவும் கேள்விப் பட்டுள்ளோம். அதற்கான நன்றிக்கடனாக கொனம்கொடப் பகுதியில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கள மன்னனுடனான சண்டையில் போர்த்துக் கீசருக்கு எதிராக முஸ்லிம்கள் செயற்பட்டதால் குறித்த காணிகளிலிருந்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அதனால் அவர்களில் பெரும்பாலானோர் மாத்தளை மற்றும் கண்டியை அண்மித்த அக்குறணை, மடவளை, உடுநுவர, கலகெதர, மடிகே ஆகிய பகுதிகளில் குடியேறினர். அத்துடன் மஹமு நெய்னா அரசனின் பிரதான வைத்தியராக பணிபுரிந்ததாகவும் அறிகிறோம். எமது காணி உறுதிகளிலும் ‘தென்னே வளவ்வே’ என்ற சிங்கள பரம்பரை நாமமே பதியப்பட்டுள்ளது.
இக்குடும்பத்தில் ஐந்தாவது பரம்பரையில் பிறந்தவர்தான் நான். ஆறு சகோதர சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் நான் நான்காவதாகப் பிறந்துள்ளேன். எனது மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை. எமக்கு நான்கு பிள்ளைகள். பிற்காலத்தில் நாம் வர்த்தகத் தொழிலில் ஈடுபடலானோம். எனது குடும்பத்தில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்க எனக்கு வாய்ப்பேற்பட்டது. நான் எனது ஆரம்பக்கல்வியை கபடாகம விகாரையில் பெற்றேன். அங்கு புத்ததர்மத்தையும் பின்னர் இஸ்லாமிய கல்வியையும் கற்றுக் கொண்டேன்.
கல்வியை முடித்த பின்னர் சுமார் 20 ஆண்டுகளாக தோட்டத்துறை தொடர்பான ஆலோசகராகப் பணியாற்றினேன். பின்னர் அப்போது நிதியமைச்சராகவிருந்த கலாநிதி சரத் அமுனுகமவின் பாராளுமன்ற விவகார செயலாளர், முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் முஸ்லிம் கல்வித்துறைச் செயலாளர், வெளிநாட்டு தொழில் அபிவிருத்தி அமைச்சரின் மக்கள் தொடர்பு செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளேன். தற்போது ஓய்வு நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
இது எங்கள் நாடு. சிங்கள மக்களைப் பகைத்துக்கொண்டு இந்நாட்டில் செயற்பட இயலாது. நாம் சிங்கள பரம்பரை நாமம் பூண்ட மக்கள். பௌத்த மக்களே இங்கு பெரும்பான்மை. சிங்களப் பெரும்பான்மையினர் எங்கள் உறவினர், எமது நண்பர்கள். லொக்கு பண்டா என்பவர் எனது நெருங்கிய தோழர். எங்கள் பிள்ளைகள் இன்று சிங்கள மொழிமூலம் கற்றிருந்தால் இன்றுள்ள பிரச்சினைகள் தோன்றியிருக்காது.
கல்கெட்டியகே பாத்திமா சிஹானாஅப்துல் ரஹீம் (வயது – 42)
என்னைப் போன்றே எனது கணவருக்கும் சிங்களப் பரம்பரைப் பெயரே உள்ளது. அராவே கெதர மொஹொம்மட் காலித் என்பதே அவரது முழுப்பெயர். நான் கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். பாடசாலை அதிபர் விடுதியில் தற்போது இருந்து வருகிறேன். எனது தாயாரின் பெயரிலும் சிங்கள பரம்பரை வாசகமே உள்ளது. பட்டான விதானலாகே பரீதா உம்மா. எமது பெற்றோரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களாவர். எனக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். நான் சிங்கள மொழி மூலம் பயின்றுள்ளேன். எமக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். நான் பிறந்த ஊர் தெல்தொட்ட.
அரேபியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வர்த்தக நோக்கில் இங்கு வந்து குடியேறியவர்களே இங்குள்ள முஸ்லிம் பரம்பரையினராகும். அரேபியாவிலிருந்து இங்கு வந்த முஸ்லிம்கள் இறுதியில் கண்டியில் குடியமர்ந்துள்ளனர். அதனாலேயே சிங்கள பரம்பரைப் பெயரால் அழைக்கப்படுகின்றனர். அராபிய வர்த்தகர்கள் சிங்கள மன்னர்களுக்கு நிறைய உதவிகள் புரிந்துள்ளனர்.
இங்குள்ள சிங்களப் பெண்களை மணமுடித்து, சந்ததிகளுக்கு அவர்களது பரம்பரைப் பெயரையே சூட்டும்படி நிபந்தனை விதித்தே செனரத் மன்னன் அராபிய வர்த்தகர்களுக்கு இங்கு வசிக்க இடமளித்துள்ளதாக எனது தந்தை சொல்லக் கேட்டிருக்கின்றேன். சிங்கள பௌத்த வம்ச, குலப் பெண்மணிகளையே அராபிய வியாபாரிகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். அந்த வழித்தோன்றல்களே நாம். எமது தாய், தந்தையர்களின் ஆரம்ப வழித்தோன்றல்கள் கிராமத்தலைவர்களாக கடமையாற்றியுள்ளார்கள். எமது அயலவர்கள் சிங்களவர்கள். பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கையிலும் நண்பர், நண்பிகள் சிங்களவர்களே. நிர்வாக சேவையில் பயின்றதும் சிங்கள மொழிமூலமே. எனக்கு சிங்களம், முஸ்லிம் என்பதில் வேற்றுமையே தென்படுவதில்லை.
அநேகமாக மதத்தை தனிப்பட்ட ஒன்றாகவே நான் கணிக்கிறேன். அடுத்தவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய ஒன்றாக மதம் அமைவதில்லை. எனது தனிப்பட்ட கருத்து, எதிர்காலத்தில் இதே போன்றதொரு பிரச்சினைக்கு வழிவகுக்க காரணமாக அமையுமானால், முஸ்லிம்களில் ஒரு பகுதி ஒரு பக்கத்துக்குள் வரையறுக்கப்பட்டுவிடும்.
எமது சமயத்தில் முகத்தை மறைப்பதற்கோ கறுப்பு ஆடை அணியும் படியோ எங்கும் குறிப்பிடப்பட்டில்லை. இது குறித்த எனது நிலைப்பாடு என்னவென்றால், நாம் அணியும் உடை பெரும்பான்மை இனத்தவர் களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அவர்களால் அதனைச் சகித்துக்கொள்ள முடியவில்லையென்றால் அது குறித்து விருப்பமில்லையென்றால், எமது எல்லைக்குள் இருந்து கொண்டு அதனை சீர்செய்து கொள்வதில் தவறில்லை. கறுப்பு அபாயாவை உடுக்காது நிறங்களிலான அழகிய ஆடைகளை அணியலாம். முகத்தை மறைப்பதற்கு நான் பூரண எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன். நீண்டகாலங்களுக்கு முன்பிருந்தே இத்தகைய சட்டங்கள் கொண்டு வந்திருக்கவேண்டும். முகத்தை மூடியதாலேயே மற்றவர்கள் சந்தேகிக்கும் நிலை உருவானது. கறுப்பாடை அணிந்து தம்மை வேறுபடுத்திக்காட்டி பாதையில் செல்லும்போது இவர்கள் எம்மை விட்டும் தூரமாகிறார்கள் என்று சிங்கள மக்கள் எடை போடுகிறார்கள். பெரும்பான்மை இனங்கள் விரும்பாத ஆடையை அணிந்து அவர்களை விட்டும் தூரமாவதைவிடுத்து, அவர்கள் ஏற்கும் விதத்திலான ஆடைகளை அணிவதே ஏற்றமாகும்.
வைத்தியரத்ன முதியான்ஸேலாகே சுலைமா லெப்பே மொகம்மட் தாஸீம் (வயது – 68)
எனது குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஆறு பேர் உள்ளனர். அவர்களுள் நான் நான்காம் இடத்தில் இருக்கிறேன். நாம் வைத்திய பரம்பரையில் வந்தவர்கள் என்ற போதிலும் தற்போது எம்மில் எவரும் வைத்தியர்களாக இல்லை. இப்போது நாம் ஏழாவது பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கண்டி பூவெலிக்கடையிலிருந்தே எமது பரம்பரை ஆரம்பமாகிறது. அன்று பணம் எதுவும் பெறாமலேயே வைத்தியத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.
பின்னர் அங்கிருந்து ஹந்தஸ்ஸ, வல்அரம்ப, எலதத்த என்ற பகுதிக்கு வந்துள்ளார்கள். அப்போது மலைநாட்டு சிறைக்கைதியாக இருந்த ரொபர்ட் நொக்ஸும் இப்பிரதேசத்தில்தான் இருந்துள்ளார்.
எமது பாட்டன் பாட்டிகளுடன் இவரும் கதைத்து உறவாடியதாக எமது தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். எமது பாட்டனார்கள் தலைப்பாகை அணிந்தார்கள். அதற்குப் புறம்பாக வெள்ளை நிறத்திலான சட்டையும் சாரமும் அணிந்துள்ளனர். பெண்கள் சாரி அணிந்து அதன் நுனிப்பகுதியால் தலையை மூடி முக்காடு இட்டுக்கொள்வார்கள். இன்றிருப்பது போன்று முகத்தை மறைக்கவில்லை.
எமது ஆரம்ப வீடு கிராமத்திலே பிரசித்திபெற்ற ஒரு வீடாகவே விளங்கியது. சிங்கள, முஸ்லிம் உட்பட அனைவரும் இங்கு வந்து உறவாடுவார்கள். எல்லோரும் மருந்து வகைகளையும் இங்கு தேடிப் பெற்றுக்கொள்ளும் ஒரு சூழ்நிலை காணப்பட்டது. மிகவும் இரம்மியமானதொரு காலமாகவே அக்கால கட்டத்தை வர்ணிக்கலாம்.
குருகொட முஹம்திரம்லாகே அஷ்ஷெய்க் முஹம்மது சமான் உல் தீன் (வயது – 52)
ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் புதல்வி அரசகுமாரி மெனிகா நோய்வாய்ப்பட்டிருந்தார். அரசவை வைத்தியர்களால் அந்நோயைக் குணப்படுத்த இயலாது போனது. அப்போது வெளியிலிருந்து வைத்தியர் ஒருவரை நாடி தேடியபோது வியாபாரத்திற்காக இங்கு வந்து தங்கியிருந்த அராபிய வைத்தியம் தெரிந்த ஒருவர் அரச குமாரிக்கு வைத்தியம் பார்க்க முன்வந்தார். அவரது சிகிச்சையால் சில தினங்களிலே அரசகுமாரி சுகமடைந்தாள். அத்துடன் அந்த அராபிய வைத்தியர் மீது இவள் ஈர்க்கப்பட்டாள். இதனைப் புரிந்து கொண்ட மன்னன் சம்பிரதாய பூர்வமாக இருவருக்குமான திருமணத்தை நடத்தி வைத்தார். இத்தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு தர்மஜீவ பண்டார என பெயர் சூட்டினர். தர்மஜீவ பண்டாரவிலிருந்தே குருகொட மற்றும் அலவத்து கொட முஹாந்திரம் போன்ற முஸ்லிம் பரம்பரைகள் தோற்றம் பெற்றுள்ளன.
இரண்டாம் இராஜசிங்க மன்னன் காலத்தில் போர்த்துக்கீசருடனான சண்டை நடந்தது. அப்போது தர்மஜீவ பண்டாரவின் பரம்பரையில் வந்தவர்களே இராஜசிங்கனுடன் இணைந்து போர்த்துக்கீசரை எதிர்த்துப் போரிட்டனர். இதன் விளைவாக இராஜசிங்கன் வெற்றிவாகை சூடினான். இதற்குப் பிரதியீடாக குருகொட, அலவத்து கொட ஆகிய பகுதிகளின் அரச நிலங்கள் இவர்களுக்கு அன்பளிக்கப்பட்டு இக்குடும்பங்களைக் குடியேறச் செய்தான். இதனாலேயே முஹாம்திரம்லாகே என்ற நாமத்திற்கு முன் மேற்படி இரு ஊர்களின் பெயர்களும் இணைத்து பரம்பரைப் பெயர்களாக விளிக்கப்பட்டு வருகின்றன.
இன்று மேற்படி காணிச் சொந்தக்காரர்களாக இருந்து வியாபாரத்திலும் ஈடுபட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு சிங்கள பரம்பரை நாமம் கொண்டழைக்கப்படும் ஆயிரம் அளவிலான குடும்பங்கள் அக்குறணையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
-Vidivelli