ஏ.ஜே.எம்.நிழாம்
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி வெளியான ராவய பத்திரிகையில் எஸ்.நந்தலால் என்பவர் குர்ஆனில் பழைய, புதிய என இருவகைகள் உள்ளனவா எனக் கேட்டிருந்தார். அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பைக் கொடுத்த பிறகுதான் அது நந்தலாலின் கைகளுக்கும் பார்வைக்கும் வந்திருக்கிறது.
குர்ஆனிலுள்ள கருத்துகளை சிங்களமொழியில் வெளியிட்டால் சிங்கள மக்களின் இஸ்லாத்தின் மீதான சந்தேகங்கள் நிவர்த்தியாகும் எனும் நன்னோக்கிலேயே ஜம்இய்யத்துல் உலமா இதைச்செய்திருக்கலாம். எனினும் இதில் சில விடயங்கள் அவதானிக்கப்படவில்லை.
* -நல்ல காரியத்தையும் பிழையான நேரத்தில் செய்யக்கூடாது.
* அறவே இஸ்லாத்தைத் தெரியாதோரிடம் நேரடியான மொழிபெயர்ப்பை வழங்காமல் தெளிவான முன்விளக்கங்களை இணைத்து வழங்கியிருக்க வேண்டும்.
* தெளிவான விளக்கங்கள் இல்லாவிட்டால் இஸ்லாத்தைத் தவறாகப் பரப்புரை செய்வோருக்கு அவை உறுதியான அனுகூலமாகிவிடும்.
* இதுவரை அவர்கள் ஆங்கிலம் மூலம்தான் சில கருத்துக்களைக் கண்டுபிடித்து இஸ்லாத்துக்கு எதிராக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது சிங்கள மொழியிலேயே நேரடி மொழிபெயர்ப்பு கிடைத்திருப்பதால் அவர்களின் செயற்பாடு மேலும் வியாபிக்க அதிக வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இது பற்றி நான் முன்பே ஒரு கட்டுரையில் தெளிவுபடுத்தியிருந்தேன்.
நந்தலால் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். மே மாதம் 12 ஆம் திகதி இம்தியாஸ் பாக்கீர் மாக்காருடன் நிகழ்ந்த கலந்துரையாடலின் அடிப்படையில் அவர் இஸ்லாம் என்பது சமாதானமே எனக்கூறியிருந்ததால் நான் 19 ஆம் திகதி ராவயவுக்கு குர்ஆனில் இருப்பதும் அப்படியா? என்னும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். இதிலிருந்த குழப்பம் என்னவென்றால் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கூறியுள்ளபடி இஸ்லாம் என்பது சமாதானமாயின் அத்தௌபா என்னும் 9 ஆம் அத்தியாயத்தின் 5 ஆம் வசனத்திலும் அதே அத்தியாயத்தின் 29 ஆம் வசனத்திலும் ஆங்கிலத்தில் Slay (கொல்) என்றிருக்கையில் சிங்கள மொழிபெயர்ப் பில் அந்த அர்த்தம் இல்லையே. அதனால்தான் முஸ்லிம் பயங்கரவாதிகள் ‘கொல்’ என்பதைத் தமது கோஷமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்.
சிங்கள மொழிபெயர்ப்பில் சில வார்த்தைகள் இல்லை. அதாவது, ஆங்கிலத்துக்குப் பொருத்தமற்ற வார்த்தைகள் சிங்களத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஆக ஆங்கிலச் சொல்லே அரபுச்சொல்லுக்குச் சரியாக இருக்கிறது எனவும் குறிப்பிடுகிறார். இதன்படி கொல் என்னும் சொல்லை சிங்களமொழியில் இருட்டடிப்பு செய்திருப்ப தாகவே அவர் கூறுகிறார் என்பது புரிகிறது.
தனது கட்டுரைக்கு ஜூன்மாதம் 2 ஆம் திகதி இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தக்க விளக்கம் தரவில்லை. ஆங்கிலச் சொல்லோடு தமிழ்ச்சொல் ஒத்துப்போகையில் சிங்களச்சொல் எப்படி வித்தியாசப்பட்டது எனவும் நந்தலால் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரிடம் வினவியிருக்கிறார். இனி அந்த இரண்டு வசனங்களையும் அவதானிப்போம்.
ஆகவே, சிறப்புள்ள மாதங்கள் கழிந்து விட்டால் இணைவைத்திருப்போரைக் காணும் இடமெல்லாம் கொல்லுங்கள், இன்னும் அவர்களைப் பிடியுங்கள், அவர்களை முற்றுகையும் இடுங்கள்– ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்காருங்கள். அவர்கள் தாம் செய்த பாவங்களுக்காக வருந்தி அதிலிருந்தும் விலகி (விசுவாசித்து) தொழுது சக்காத்தையும் வழங்கினால் அவர்கள் வழியில் (அவர்களை) விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். மிகவும் கிருபையாளன். (அல்குர்ஆன்–9=5)
விசுவாசிகளே! வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்காமலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்காமலும் இந்த உண்மை மார்க்கத்தை ஏற்காமலும் இருக்கின்றனரே அத்தகையோரை இழிவுற்றோராக அவர்கள் (தமது) கையால் ஜிஸ்யா என்னும் வரியைக் கொடுக்கும் வரை நீங்கள் அவர்களோடு யுத்தம் புரியுங்கள். (அல்குர்ஆன் 9–-29)
ஏற்கனவே ஜமா அதே இஸ்லாமியும் கூட குர்ஆனை சிங்கள மொழியில் வெளியிட்டிருக்கிறது. ஜம்இய்யத்துல் உலமாவின் சிங்கள குர்ஆன் மொழிபெயர்ப்பு அண்மையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இது முதலாவது சிங்களக் குர்ஆன் மொழிபெயர்ப்பு அல்ல. 1995 ஆம் ஆண்டிலேயே பி.ஜெய்னுலாப்தீன் தமிழில் மொழிபெயர்த்த சிங்கள மொழியாக்கம் மகிந்த ராஜபக் ஷ, கோதாபய ராஜபக் ஷ, உதய கம்மன்பில, விமல் வீரவங்ச ஆகியோரிடம் வழங்கப்பட்டிருந்ததாக அசாத் ஸாலி பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சி வழங்கியபோது குறிப்பிட்டிருந்தார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் கொல்லுங்கள், ஜிஸ்யாவரி அறவிடுங்கள் எனும் சொற்களுக்குத் தெளிவான விளக்கங்களை சிங்கள மொழியில் வழங்காமலேயே அதைச்செய்திருக்கிறார்கள்.
ஆக, எவர்களிடம் இவ்வாறு விளக்கங்களின்றி சிங்கள மொழியில் வழங்கக்கூடாதோ, அவர்களிடமே கிடைத்திருக்கிறது. காரணம், முஸ்லிம் அல்லாதவர்களிடம் தகுந்த விளக்கத்துடனேயே குர்ஆன் வசனங்கள் முன்வைக்கப்படவேண்டும். தற்போதும் கூட அதைப்பேணாமலேயே ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்பாடு நிகழ்ந்திருக்கிறது. நாட்டின் பேரினவாத சூழலால் கொல்லுங்கள் என்னும் வார்த்தையைத் தவிர்த்து அதற்கென மென்மையான வார்த்தையை சிங்கள மொழியில் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது.
சமாளிக்கும் நோக்கத்தில் இவ்விதம் நிகழ்ந்திருக்கலாம் என்பதும் புரிகிறது. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனில் எந்த வார்த்தையையும் மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. உலகமொழிகளில் அப்படியே இருக்க சிங்கள மொழியில் மட்டும் மாற்றப்பட்டது. இணக்கப்பாட்டில் முரண்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்னும் நோக்கில் என்பதும் தெளிவாகிறது. இங்கு இரண்டு விடயங்களில் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன என்றே நான் கூறுவேன்.
* ‘‘குர்ஆன் பயபக்திவான்களுக்கே வழிகாட்டும்” என அதன் ஆரம்பத்திலேயே அது கூறியிருப்பதால் அதன் நேரடி மொழிபெயர்ப்பை முஸ்லிமல்லாதோரிடம் கொடுத்து விடாது, தெளிவான விளக்கங்கள் மூலம் உள்ளங்களைப் பக்குவப்படுத்திய பிறகே வழங்க வேண்டும்.
* குர்ஆன் இறக்கப்பட்ட காலகட்டத்தையும் அதற்குரிய காரணங்களையும் அதன் சொற்களுக்குரிய யதார்த்தமான தெளிவுகளையும் முன்வைக்கவேண்டும். காரணம் அறிவுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ உள்ளத்தில் ஆழமாகப்பதிந்திருக்கும் ஒரு விடயத்தை எடுத்த எடுப்பில் மாற்றி விடுவதென்பது எளிதல்ல.
* தலைமுறை தலைமுறையாக இருந்துவரும் நம்பிக்கைகள் பிறப்பு ரீதியில் அமைவதால் பாரம்பரிய நம்பிக்கைகளே ஆளுமை செலுத்தும்.
* எவனும் தனக்குத் தெரியாத விடயத்தையும் தெளிவு கிடைக்காத விடயத்தையும் எதிர்க்கவே செய்வான். இது அவனது குற்றமல்ல இயல்பு. ஏற்கனவே தவறான விபரங்களோடு விளங்கிக்கொண்டவன் அதிலிருந்து உடனடியாக மாறமாட்டான்.
* தவறான நோக்கத்தைக் கொண்டோர் குர்ஆன் மொழிபெயர்ப்பு மூலம் அதைத் தனது வழிகேட்டுக்குப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். நபி (ஸல்), பிறப்பதற்கு முன்பு கஃபாவுக்குள் 360 சிலைகள் இருந்தன. ஆகப் பெரியது ஹுபல்– அதற்கு அடுத்த அந்தஸ்தில் லாத்மனாத் உஸ்ஸா என மூன்று சிலைகள் இருந்தன. அங்கு வாழ்ந்த குறைஷிகள் தினசரி ஒரு சிலை வீதம் வணங்கி வந்தார்கள். எனினும் அல்லாஹ்வையும் கூட இறைவனாக அவர்கள் ஏற்றுத்தான் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் என்பதிலிருந்து இது தெளிவாகின்றது.
எனினும், அவர்கள் அல்லாஹ்வை மட்டும் இறைவனாகக் கொள்ளாமல் சிலைகளையும் அவனுக்கு இணைக் கடவுள்களாக ஆக்கிக்கொண்டார்கள். முதலில் ஹுப்லே அக்பர் ஹுபலே (மிகப்பெரியது) எனக் குறைஷியர் சொல்லியதை மாற்றி அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என முதற் சுற்றில் ஆரம்பித்த நபி(ஸல்) பிறகு லாஇலாஹ இல்லல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்னும் வார்த்தையை முன்னிலைப்படுத்தி னார்கள். பிறகு அல்லாஹு அஹத் (அல்லாஹ் ஒருவன்) என்னும் சொல்லையும் லாஷரிகலஹு (அவனுக்கு இணையில்லை) என்னும் சொல்லையும் ஊன்றினார்கள்.
இதன் மூலம் 360 சிலைகளுக்கும் கடவுள் அந்தஸ்து வழங்கப்படுவதைத் தடுத்தார்கள். அப்போது குறைஷிகள் அல்லாஹ்வையும் இறைவனாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனினும் அல்லாஹ்வோடு சிலைகளையும் இணைத்தே வழிபட்டு வந்தார்கள். ஷிர்க் (இணைவைப்பு) என்பதற்கான அர்த்தம் இதுவேயாகும்.
இதை மாற்றி நபி(ஸல்) அல்லாஹ் ஒருவனே இறைவன். அவனுக்கு இணையாக சிலைகளை ஆக்காதீர்கள் எனக் கூறினார்கள். அப்போது குறைஷிகள் இறை கொள்கை விடயத்தில் ஒரு சமரசத்தீர்வுக்கு வருமாறு நபி(ஸல்) அவர்களை அழைத்தார்கள். அதாவது, ஆறு மாதங்கள் நாமும் அல்லாஹ்வையே வணங்குகிறோம். அதற்குப் பகரமாக நீங்கள் ஆறு மாதங்கள் சிலைகளை வணங்கவேண்டும் என்றார்கள். இதன் மூலமும் கூட குறைஷிகள் அல்லாஹ்வையும் இறைவனாக ஏற்றுக் கொண்டிருந்தது தெளிவாகிறது. இது பற்றி குர்ஆன் குறிப்பிடுகையில் பின்வருமாறு தெரிவிக்கிறது.
இந்த சிலைகள் அல்லாஹ்விடம் எம்மை நெருக்கமாக்கி வைக்கும் என்பதால் தான் இவற்றையும் வணங்குகிறோம். எமக்கு இது எமது மூதாதையர் மூலம் பரம்பரை பரம்பரையாக வந்த வழிபாடு என்பதால் மாற்றமுடியாது என்றார்கள். இப்படி அவர்கள் கூறியபோதும் அல்லாஹ்வை விடவும் சிலைகளின் அந்தஸ்தைக் கூட்டியே வந்திருக்கிறார்கள்.
கடற் பயணத்தின்போது கப்பலில் தத்தளிக்கையில் உதவிக்கு அல்லாஹ்வை அழைத்து தப்பி வந்த பின் நன்றி மறந்தவர்களாகி சிலைகளை வணங்குவதாகவும் அல்லாஹ் கூறுகிறான். அதுபோல் பெண் குழந்தை பிறந்தால் அல்லாஹ்வுக்கு எனவும் ஆண் குழந்தை பிறந்தால் சிலைக் கடவுளுக்கு என அவர்கள் குறிப்பிடுவதாகவும் அல்லாஹ் கூறுகிறான்.
ஆக அல்லாஹ்வுக்கு இணையாக சிலைகளையும் வைப்பதையே ஷிர்க் என்னும் இணைவைப்பு என அல்லாஹ் குறிப்பிடுகிறான். குர்ஆன் கட்டளையாக எதையும் விடுக்கவில்லை கோரிக்கையாக வேண்டுகிறது. லா இக்ராஹ் பித்தீன்(மார்க்கத்தில் பலவந்தம் இல்லை) என்னும் வசனம் இதற்கு சிறந்த ஆதாரமாகும். அதன்படி குப்ர் என்னும் சொல்லுக்கு நிராகரிப்பு என்னும் அர்த்தத்தை யன்றி ஏற்றுக்கொள்ளாமை என்றே அர்த்தங்கொள்ள வேண்டும். இத்தகையோரை மார்மடியூக் பிக்தால் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்.
* இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொண்டு முஸ்லிம்களோடு நல்லுறவாக வாழுவோர்.
* இத்தகைய தன்மைகள் இல்லாதிருப்பினும் முஸ்லிம்களோடு பகையின்றி வாழுவோர்.
* முஸ்லிம்களோடு பகை இருப்பினும் இடையூறு செய்யாதோர்.
* மார்க்கத்தில் வித்தியாசம் இருப்பினும் நட்போடு நெருங்கி வாழ்வோர். இனி சூரதுத் தெளபாவின் 5 ஆம் 29 ஆம் வசனத்தைப் பாருங்கள். இவற்றில் முதல் வசனம் இணைவைப்போரையும், இரண்டாம் வசனம் வேதக்காரர்களையும் விளிக்கிறது. இணைவைப்பு ஷிர்க் என்றே அரபியில் கூறப்படும்.
அல்லாஹ்வோடு இன்னொன்றையும் சம இறைவனாகக் கொள்வதே இணைவைப்பாகும். அல்லாஹ்வை நிராகரித்து வேறொன்றை வணங்குபவன் இணைவைப்பவனல்ல. காரணம் அல்லாஹ்வை வணங்காமல் அவன் முற்று முழுதாக அல்லாஹ் அல்லாததையே வணங்குகிறான். எனவே இவன் இணைவைக்கவில்லை. நேரடியாக சிலையையே வணங்குகிறான்.
அந்த வகையில் இவனது சுய உரிமையில் இஸ்லாம் தலையிடாது. வணங்குவதில் உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு எனது மார்க்கம் எனும் வசனமும் மார்க்கத்தில் பலவந்தமில்லை எனும் வசனமும், இதையே குறிப்பிடுகின்றன. அல்லாஹ்வுக்குச் சமமாக சிலையை வணங்குவோர் விடயத்திலும்கூட அவர்களில் எல்லோரையும் 9–5 ஆம் வசனம் குறிப்பிடவில்லை. அவர்களில் இஸ்லாத்தை அழித்தொழிக்க ஆயுதபாணிகளாய் களத்தில் மோதுவோரையே குறிக்கிறது.
எனவே யுத்த களத்தில் அழிக்க வருவோரைக் கொல்லுங்கள் எனும் சொல் யதார்த்தமான கருத்தேயாகும். இது யுத்த சூழலுக்கு இசைந்த நிலைப்பாடாகும். ஜக்துலூ (கொல்லுங்கள்) என்னும் சொல் கூறப்பட்ட சூழலே இங்கு அவதானிக்கத் தக்கதாகும். யுத்த மற்ற சூழலில் இது கூறப்பட்டது எனக்கூறப்படுவது சுத்த அபத்தமாகும்.
ஆயுதமுனையில் அழித்தொழிக்க வருவோரை அரவணைத்து முத்தமிடுமாறு எந்த தர்மம் கூறுகிறது. சாதாரண காலகட்டத்தில் எமர்ஜன்சிலோ மாஷல்லோ கோட் மாஷல் என்றெல்லாம் உண்டா இல்லையே. எனவே, யுத்த களத்தில் கொல்லவருவோரைக் கொலை செய்யுமாறு கூறப்பட்டிருப்பதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரைக் குர்ஆன் கொல்லச் சொல்கிறது எனக்கூறலாமா?
யூத, கிறிஸ்தவராயினும் கூட அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கி இந்த உண்மை மார்க்கத்தை ஏற்றிருப்போர் மேன்மை பெற்றோராவர். இதற்கு மாறாக அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்காது (அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்காது இந்த மார்க்கத்தை ஏற்காதும் இருப்போரே இழிவானோராவர்– காரணம் இத்தகையோர் தமக்கு வேதங்கள் கிடைத்தும்கூட அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கவில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கவில்லை. இந்த உண்மை மார்க்கத்தையும் ஏற்கவில்லை. என்றாலும் கூடப்பரவாயில்லை. நிர்வாகக் கட்டுக்குள் இவர்களும் இருக்கட்டும் ஜிஸ்யா வரியைப்பெற்று இணைத்துக் கொள்ளுங்கள். அதை அவர்கள் தர மறுத்து யுத்தம் புரிந்தால் நீங்களும் புரியுங்கள் என்பது யதார்த்தமான கருத்தேயாகும். தற்காப்பு முனையிலேனும் யுத்தத்தில் கொலை வியப்பானதல்ல.
இக்கருத்தையே அடிப்படை ஆதாரமாக வைத்துக்கொண்டு முஸ்லிமல்லாதாரைக் கொல்ல குர்ஆன் முஸ்லிம்களுக்கு ஆணையிடுகிறது என வாதிடுவது படுமுட்டாள் தனம் அல்லவா? சாதாரண சூழலையும் யுத்த சூழலையும் பிரித்துப்பார்க்க வேண்டும். அமைதியாக வாழுவோரிடமும்கூட யுத்தம் வலிந்து திணிக்கப்படுமாயின் தற்காப்பு யுத்தத்தையேனும் புரியாதிருக்க வழியுண்டா? இதற்கான வழிமுறையாகவே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன.
*. ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்காருங்கள்.
*. அவர்களை முற்றுகை இடுங்கள்
*. அவர்களைப் பிடியுங்கள்
* காணும் இடமெல்லாம் கொன்று விடுங்கள்.
மேற்படி கருத்துக்களிலிருந்து 9 ஆம் அத்தியாயத்தின் 5 ஆம் வசனம் யுத்த காலத்தில் இறங்கியிருப்பது நன்றாகவே தெளிவாகிறது. 29 ஆம் வசனத்தில் வேதம் வழங்கப்பட்டோர் ஜிஸ்யா வழங்கிவிட்டால் விட்டுவிடுங்கள் எனும் கருத்திலிருந்தும் இவை யுத்த காலத்தில் நிகழ்ந்திருப்பவை என்பது மேலும் உறுதியாகிறது.
எனவே 9 ஆம் அத்தியாயத்தின் 5 ஆம் 29 ஆம் வசனங்களை எடுத்துக்காட்டி இஸ்லாம் சமாதானத்தை வலியுறுத்தும் மார்க்கமல்ல என நிறுவ முற்படுவது பிழையான எடுகோளாகும். அந்த வகையில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டது முற்றிலும் சரியானதே என நந்தலாலிடம் கூறிக்கொள்கிறேன்.