கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டமும் குறித்த கோரிக்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டமும் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளன.
கிழக்கு மாகாணத்தில் பின்னிப் பிணைந்து வாழும் தமிழ் முஸ்லிம் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் பிராந்தியத்தில் பதற்ற நிலை ஒன்றைத் தோற்றுவிக்க முனைந்ததை மறுப்பதற்கில்லை. இதற்கு குறித்த போராட்டத்தில் தேசிய ரீதியாக செல்வாக்குச் செலுத்தும் இனவாத, மதவாத பெளத்த பிக்குகள் சிலர் பங்கேற்றமையும் அங்கு வெளியிட்ட கருத்துக்களுமே காரணமாகும்.
இந்தப் போராட்டம் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதில் பிரதான பாத்திரமேற்றவர் கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் ஆவார். மேலும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் மற்றும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோர் கல்முனைக்கு விஜயம் செய்திருந்தனர். இந்த பௌத்த பிக்குகளின் விஜயம் அப் பகுதி முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்திருந்தது.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கம் தீர்வொன்றை வழங்க உத்தேசித்திருப்பதாக அமைச்சு மட்டத்திலிருந்து உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டதையடுத்து, அதற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலமானது கடந்த 30 வருடங்களாக இயங்கி வருகின்ற நிலையில் அதனை தரமுயர்த்துவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு வெளியிடவில்லை. எனினும் தரமுயர்த்தும்போது மேற்கொள்ளப்படவுள்ள எல்லை மீள்நிர்ணயத்தில் கல்முனை மாநகரிலுள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மை வர்த்தக நிலையங்களைக் கொண்டுள்ள பிரதான நகரப் பகுதி குறித்த வடக்கு தமிழ் உப பிரதேச செயலக எல்லைக்குள் உள்ளடக்கப்படுவதையே முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.
அந்த வகையில் இதில் முன்வைக்கப்படும் இரு தரப்பு நியாயங்களையும் கருத்திற் கொண்டு தீர்வொன்றை எட்டிக் கொள்வது கடினமானதொன்றல்ல. எனினும் அவ்வாறான தீர்வை எட்டுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். மாறாக இதில் வெளிப் பிரதேச சக்திகளும் இந்தப் பிரச்சினையின் பின்னணியை எந்தவகையிலும் புரிந்து கொள்ளாத இனவாத சக்திகளும் மூக்கை நுழைப்பது ஆரோக்கியமானதல்ல.
நாட்டில் இன்று பௌத்த பிக்குகள் களத்தில் இறங்கினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம், அரசாங்கத்தையே ஆட்டங்காணச் செய்யலாம் என்ற ஜனநாயக விரோத நிலை ஒன்று தோற்றம் பெற்றுள்ளது. இந்த நிலைமை சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களுக்கே பாரிய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை மறந்துவிடக் கூடாது. அந்த வகையில் இரு சிறுபான்மை சமூகமும் இக் காலப்பகுதியில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமக்கிடையிலான வேறுபாடுகளை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். இந்த முரண்பாடுகளுக்குள் இனவாத சக்திகள் மூக்கை நுழைத்து குளிர்காய இடமளிக்கக் கூடாது.
-Vidivelli