குருநாகல் போதனா வைத்தியசாலையில் 4000 சிங்கள தாய்மார்களுக்கு கருத்தடைக்கான அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தியை முதன் முதலில் வெளியிட்ட சிங்கள ஊடகம் ஒன்று நெருக்கடியை எதிர்நோக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.மேற்படி விடயம் தொடர்பாக குற்றவியல் விசாரணைத் திணைக்களம், எதிர்வரும் 27 ஆம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையைத் தொடர்ந்தே சம்பந்தப்பட்ட ஊடகம் வெளியிட்ட முன்பக்க செய்தி தொடர்பாக நெருக்கடியைச் சந்திக்க இருப்பதாக மற்றொரு சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
டாக்டர் ஷாபியினால் மேற்கொள்ளப்பட்டதாகச் சுமத்தப்படும் மேற்படி விடயம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரினால் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய மேற்கொண்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தயாரிக்கப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில் டாக்டர் ஷாபி அத்தகைய குற்றச் செயல் ஒன்றில் ஈடுபட்டதாக இதுவரையும் நிரூபிக்கப்படவில்லையென்றும் அதற்கமையவே குறித்த பத்திரிகை நெருக்கடியை எதிர்நோக்கவுள்ளதாக அந்த பத்திரிகைச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பத்திரிகை வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்தே பிக்கு ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் சுமார் 1500 பொலிஸார் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த நேர்ந்ததாகவும் அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் பதவியை இராஜினாமாச் செய்ய நேர்ந்ததாகவும் நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல் ஒன்று உருவாகும் நிலை ஏற்பட்டதாகவும் இக்காரணிகளை முன்வைத்தே மேற்படி விடயம் குறித்து நீதிமன்றம் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும் இப்பத்திரிகைச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த ஊடக நிறுவனத்திற்கும் அதனை எழுதிய ஊடகவியலாளருக்கும் எதிராக ஐ.ஸீ.ஸீ.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்புள்ளதாகவும் அறிய வந்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த செய்தியை வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மேற்படி முறைப்பாட்டின் கீழ் வழக்குத் தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. குறித்த ஊடகவியலாளர், மேற்படி பிரதி பொலிஸ்மா அதிபரே தனக்கு இது விடயமான தகவல்களைத் தந்ததாக ஊடகவியலாளர் குற்றவியல் திணைக்களத்தின் விசாரணையின் போது தெரிவித்துள்ளதாகவும் தெரியவருவதாக அந்த சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
-Vidivelli