கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டமும் அதற்கெதிராக முஸ்லிம்களினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டமும் நேற்று ஞாயிறு நண்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர், இந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு கூடிய விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துரெலிய ரதன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞான சார தேரர் போன்றோராலும் அரச தரப்பினராலும் வழங்கப்பட்ட உத்தரவாதங்களை ஏற்றுக்கொண்டே தமது உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்படுவதாக ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தனதுரையில் தெரிவித்தார்.
எமது கோரிக்கையில் நாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்போம் எனவும் குறித்த காலப்பகுதியினுள் தமிழ் செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால் எமது போராட்டம் மீண்டும் மிகப்பெரியளவில் வெடிக்கும் எனவும் அவர் சூளுரைத்தார்.
தமிழர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதனால் தாம் ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறைவு செய்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
இணக்கமான தீர்வு எட்டப்படும் வரை நாம் விழிப்பாக இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். இறுதியாக துஆப் பிரார்த்தனையுடன் சத்தியாக்கிரகம் நிறைவுக்கு வந்தது.
முஸ்லிம் தரப்பின் விசேட கூட்டம்
இதேவேளை, கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரத்தை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தேசியப் பிரச்சினையாக கொண்டு செல்வதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அனைத்து துறையினரையும் உள்ளடக்கியதாக பரந்துபட்ட பொறிமுறையொன்றை வகுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஊடாக கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலக உருவாக்கத்தின்போது கல்முனை முஸ்லிம்களின் பிரதான பொருளாதார வளங்களான மாநகர பஸார், பொதுச் சந்தை, வயல் காணிகள் மற்றும் குடியிருப்புகள் என்பன அவர்களுக்குத் தெரியாமலேயே தமிழ் கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உள்வாங்கப்பட்டு பெரும் அநீதியிழைக்கப்பட்டிருப்பதை ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட அரசாங்க உயர் மட்டத்தினருக்கும் சிங்கள, பௌத்த தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் மிதவாத தமிழ் தலைமைகளுக்கும் எடுத்து விளக்கி, உணர்த்துவது முக்கிய இலக்காக அமையவுள்ளதாக இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.உமர் அலி, ஏ.ஆர்.அமீர், ஏ.சி.ஏ.சத்தார், அப்துல் மனாப், எம்.எம்.நிசார், கல்முனை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக், பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஏ.பி.ஜமால்தீன், செயலாளர் ஏ.எல்.கபீர், முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஸீர் உட்பட கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, கல்முனைத் தொகுதியிலுள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களையும் சேர்ந்த பள்ளிவாசல்கள், இளைஞர் மற்றும் விளையாட்டுக் கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், வர்த்தக, விவசாய, மீனவர் சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், துறைசார் நிபுணர்கள் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம் ஒன்று நேற்று ஞாயிறு மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
-Vidivelli