மத்ரஸாக்களில் கற்பிக்கப்படும் கற்கை நெறிகள், மற்றும் அடிப்படைவாத மத போதனைகள் தொடர்பிலும் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.
பொருத்தமற்ற மத கருத்துக்களைப் போதிப்பதன் காரணமாகவே இளம் தலைமுறையினர் அடிப்படைவாதிகளாக மாற்றமடைகின்றனர்.
எனவே, மத்ரஸாக்களை முழுமையாக அரசுடைமையாக்குவதே அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்குமென மஹிந்த தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்ரஸா பாடசாலைகளில் பொருத்தமற்ற கற்கை நெறிகளே கற்பிக்கப்படுகின்றன. இலவச கல்வியினை வழங்கும் நாட்டில் இவ்வாறான பாடசாலைகள் இயங்குவது தேவையற்றது. இப்பாடசாலைகளில் மதக் கொள்கைகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. ஒரு குற்றத்தினை செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது எமது பொது சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்ரஸா பாடசாலைகளில் இவ்வாறான குற்றங்களுக்கான தண்டனைகளும் மிக கொடூரமான முறையில் கற்பிக்கப்படுகின்றது.
அரபு நாடுகளில் குற்றங்களுக்கு கிடைக்கப் பெறும் தண்டனைகளை எமது நாட்டின் மாணவர்களுக்குப் போதிப்பதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது. மாறாக அடிப்படைவாதமே தோற்றம் பெறும். பயங்கரவாதி சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலை தொடர்ந்து அடிப்படைவாதத்தை கற்பிக்கும் பாடசாலைகள் தொடர்பில் அரசாங்க தரப்பில் ஒரு மாத காலத்திற்கு மாத்திரம் பேசப்பட்டது. தற்போது இவ்விடயம் தொடர்பில் எவரும் அக்கறை செலுத்துவதில்லை
நாட்டுக்குப் பொருத்தமற்ற விடயங்களை அடிப்படைவாதமாகப் போதிக்கும் பாடசாலைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தாவிடின் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும். மத்ரஸா பாடசாலைகளில் மாணவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்பாடசாலைகளின் பாடத் திட்டங்கள் தொடர்பில் ஆராய உரிய குழுவினர் நியமிக்கப்படுதல் அவசியம். விரைவான தீர்வினை பெறாவிடின் மேலும் பல சஹ்ரான் போன்ற தற்கொலை குண்டுதாரிகள் உருவாகி விடுவார்கள்.
மத்ரஸா பாடசாலைகளை முழுமையாக அரசுடைமையாக்குதல் அவசியம். இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி கிடைக்கப்பெற வேண்டும். அடிப்படைவாத பாடசாலைகளை முழுமையாக இல்லாதொழித்தால் மாத்திரமே இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். அரசாங்கத்தில் இது முடியாவிடின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவுள்ள எமது அரசாங்கத்தில் நிச்சயம் மத்ரஸா பாடசாலைகள் நிபந்தனையற்ற விதத்தில் முழுமையாக அரசுடைமையாக்கப்படும் என்றார்.
-Vidivelli