‘ஊடகங்கள் எங்களை கொன்றுவிட்டன!’

டாக்டர் ஷாபியின் மனைவி டாக்டர் இமாரா

0 784

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லை யில் சிறு­நீ­ரக பிரி­விற்­கான வைத்­தி­ய­ராக வைத்­தியர் இமாரா ஷாபி கட­மை­யாற்­று­கிறார். 23.05.2019 அன்று வழ­மை­யான நாள் ஒன்றைப் போலவே அவ­ருக்கும் இருந்­தது. அவரும் அவ­ரு­டைய கண­வரும் நேர காலத்­துடன் எழுந்து அந்த நாளைப் பற்­றியும் தமது பிள்­ளைகள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டி­னார்கள். அதி­காலை 5 மணி­ய­ளவில் வழ­மை­போல வைத்­தியர் ஷாபி தொழு­கைக்­காக அரு­கி­லுள்ள பள்­ளிக்கும் சென்று வந்­துள்ளார். வைத்­தி­யர்­க­ளான இமாரா ஷாபி மற்றும் செய்கு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி ஆகியோர் ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தில் மாண­வர்­க­ளாக அறி­மு­க­மாகிக் கொண்­ட­வர்­க­ளாவர்.
ஒரு சில மணி நேரங்­களில் நடக்கும் சம்­ப­வங்கள் வாழ்க்­கையை எந்­த­ளவு நெருக்­க­டிக்­குள்­ளாக்கும் என்­பதை வைத்­தியர் இமாரா இப்­போது நினைத்துப் பார்க்­கிறார்.

குரு­ணா­கலில் தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த வைத்­தியர் ஒருவர் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை செய்­த­தாக சிங்­கள செய்­தித்தாள் ஒன்று தனது பத்­தி­ரி­கையின் முன்­பக்­கத்தில் தலைப்புச் செய்­தி­யாக வெளி­யிட்­டி­ருந்­தது. அதே தினத்தின் பகல் வேளையில் குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் தலைமை நிர்­வா­கி­யான ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வு­ரை­யாளர் அந்த செய்­தி­யுடன் வைத்­தியர் ஷாபியை சம்­பந்­தப்­ப­டுத்தி பேஸ்­புக்கில் பதி­விட்டார்.

அதே நாளில் பொலிஸ் பேச்­சாளர் எஸ்.பி. ருவன் குண­சே­கர அந்தப் பத்­தி­ரி­கையில் வெளி­வந்த செய்­தியை முற்­றாக மறுத்­த­துடன் இது போன்ற முறைப்­பா­டுகள் எதுவும் பொலி­ஸா­ருக்கு கிடைத்­த­தில்லை எனவும் தெரி­வித்தார். குறித்த செய்­தியை அவர் மறுத்­தது தொடர்­பா­கவும் தற்­போது விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன.

இந்த சம்­ப­வங்கள் நடந்த அடுத்த தினம் வைத்­தியர் ஷாபி குற்­றத்­த­டுப்பு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார். வைத்­தியர் ஷாபி பாரி­ய­ளவில் சொத்­துக்­களை சேக­ரித்து வைத்­தி­ருப்­ப­தாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரி­விக்­கப்­பட்­டது. தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்­புடன் தொடர்பு வைத்­தி­ருந்­தமை மற்றும் தாய்­மார்­க­ளுக்கு கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை செய்­தமை போன்ற குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்ட போதிலும் எந்த ஒரு தாயாலும் அதை உறுதி செய்ய முடி­யாமல் உள்­ளது. கைது செய்­யப்­பட்ட வைத்­தியர் குற்­றத்­த­டுப்புப் பிரி­வினால் தடுத்து வைக்­கப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டார். குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் இது தொடர்­பான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

வைத்­தியர் ஷாபி­யு­டைய சத்­தி­ர­சி­கிச்சைக் குழுவில் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் மருத்­துவ பீடத்தின் மகப்­பேற்று மற்றும் பெண்­ணோ­யியல் பிரிவின் பிர­தம விரி­வு­ரை­யாளர் ஹேமந்த சேனா­நா­யக்க இருக்­கிறார். இவர் இலங்கை மகப்­பேற்று மற்றும் பெண்­ணோ­யியல் கல்­லூ­ரியின் முன்னாள் தலை­வரும் ஆவார். இந்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு எதி­ராக கருத்துத் தெரி­வித்த அவர், இது வெறுக்­கத்­தக்­கது என்றும் மருத்­துவ ரீதி­யாக சாத்­தி­ய­மில்­லா­ததும் ஆகும் என தெரி­வித்தார்.

கடந்த மூன்று வார­கா­ல­மாக குரு­ணா­கலில் பதற்­ற­மான ஒரு சூழ்­நி­லையே காணப்­ப­டு­கி­றது. வைத்­தியர் இமா­ராவும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அவ­ரது கணவர் ஷாபியும் குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் நோயா­ளிகள் மத்­தியில் செல்­வாக்கு பெற்­ற­வர்­க­ளாவர்.

ஆனால் இன்று இந்தக் குடும்பம் தமது வீட்­டுக்குக் கூட செல்ல முடி­யாமல் நாடோ­டி­க­ளாக தத்­த­ளிக்­கின்­றனர். வைத்­தியர் இமா­ரா­வுக்கு தற்­போது வேலைக்கு செல்ல முடி­யாமல் உள்­ளது. அவ­ரு­டைய 15,13 மற்றும் 10 வய­து­டைய பிள்­ளைகள் மூவரும் பாது­காப்பு கார­ணங்கள் கருதி பாட­சா­லைக்கும் செல்­வ­தில்லை.

“அக­திகள் போல நாங்கள் வீட்டை விட்டு வெளி­யேறி இருக்­கிறோம். ஏனென்றால் ஒரு­போதும் வீடு எங்­க­ளுக்கு பாது­காப்­பான இட­மாக இருக்­கப்­போ­வ­தில்லை” என வைத்­தியர் இமாரா ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்தார். இலங்­கை­யி­லுள்ள மிகக் கடு­மை­யான சட்­ட­மொன்றின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்ள தனது கண­வரை வெளியில் எடுக்க சகல முயற்­சி­க­ளையும் இமாரா செய்து வரு­கிறார்.

ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வு­ரை­யாளர் சன்ன ஜய­சு­மன பேஸ்­புக்கில் தனது கணவர் ஷாபி பற்றி பதி­விட்­டதைத் தொடர்ந்து இமாரா இது பற்றி தனது கண­வ­ருடன் கலந்­து­ரை­யா­டினார். அனை­வ­ருக்கும் வேக­மாக பரவும் வகையில் அந்­தப்­ப­திவு வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தது. தனது நண்பி ஒரு­வரின் மூலம் அந்தப் பதிவைப் பார்த்து வைத்­தியர் இமாரா வருத்­த­ம­டைந்த போதும் வைத்­தியர் ஷாபி அதைப் பெரி­தாக அலட்­டிக்­கொள்­ள­வில்லை. “இந்த பேஸ்புக் பதிவு என்னை ஒன்றும் செய்து விடாது. ஏனென்றால் இதில் உண்­மை­யில்லை” என ஷாபி தெரி­வித்­த­தாக வைத்­தியர் இமாரா தெரி­வித்தார்.

ஒரே ஒரு நாளில் அந்­தப்­ப­திவு நூற்­றுக்­க­ணக்­கான மக்­களால் பார்­வை­யி­டப்­பட்­டது. அந்­தப்­ப­தி­வுக்கு இடப்­பட்­டி­ருந்த கருத்­துக்கள் வைத்­தியர் இமா­ராவை மன­த­ளவில் பாதிக்கச் செய்­தது. வைத்­தியர் ஷாபியை சபித்தும், அவரை நாய் என்று அழைத்தும், அவரை தாக்க வேண்டும்/ கொல்ல வேண்டும் என்றும் அவ­ரு­டைய குழந்­தை­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்தும் கருத்­துக்கள் பதி­வி­டப்­பட்­டி­ருந்­தன.

“அந்­தக்­க­ருத்­துக்­களை பார்த்து விட்டு பொலிஸில் முறைப்­பாடு ஒன்றை செய்வோம் என்று எனது கண­வ­ரிடம் சொன்னேன்” என வைத்­தியர் இமாரா தெரி­வித்தார். ஆனால் அவ்­வாறு செய்­வ­தற்கு முன்­னரே அவர் கைது செய்­யப்­பட்டு விட்டார். அவ­ரு­டைய வீட்­டிலும் தேடுதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. ஒரு மடிக்­க­ணினி, ஒரு கணினி மற்றும் பல ஆவ­ணங்கள் கொண்டு செல்­லப்­பட்­டன.

குறித்த பத்­தி­ரிகை செய்­திக்கு முன்­னரும் பொலிஸார் வைத்­தியர் ஷாபியை தொடர்பு கொண்­டார்கள். மே மாதத்தில் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக வேண்டி வீட்­டுக்கும் அவ­ரது மருத்­துவ நிலை­யத்­துக்கும் பொலிஸார் சென்­றது மாத்­தி­ர­மன்றி அவ­ரது அர­சியல் தொடர்­புகள் பற்­றியும் வின­வி­யுள்­ளனர்.

2015 ஆம் ஆண்டின் மத்­திய பகு­தியில் தனது அர­சியல் செயற்­பா­டு­களில் இருந்து வைத்­தியர் ஷாபி முற்­று­மு­ழு­தாக விலகிக் கொண்டார். பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் கீழ் ரிஷாட் பதி­யு­தீ­னுடன் இணைந்து போட்­டி­யிட்­டதில் 54000 வாக்­கு­களை ஷாபி பெற்றார். இவர் தேர்­த­லுக்­காக ஒரே­யொரு மாதம் தான் பிர­சாரம் செய்தார். வெற்­றி­ய­டைந்­த­வர்­களின் பட்­டி­யலில் அவர் எட்­டா­வது இடத்தை பிடித்­தி­ருந்­த­போ­திலும் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­பட அந்த இடம்­போ­து­மா­ன­தாக இருக்­க­வில்லை.

அதன் பிறகு வைத்­தியர் ஷாபி அர­சி­யலை விடுத்து வைத்­தி­ய­சாலை கட­மை­க­ளுக்குத் திரும்­பினார். குறித்த பத்­தி­ரிகை செய்­திக்கு முன்னர் வைத்­தியர் ஷாபி ஒரு ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வியில் தான் இன­வா­தத்­துக்கும் அடிப்­படை வாதத்­துக்கும் எதி­ரா­னவர் என்று தெரி­வித்­தி­ருந்தார். அதே செவ்­வியில் இது­வரை தான் 8000 சிசே­ரியன் சத்­தி­ர­சி­கிச்­சை­களை மேற்­கொண்­டுள்ள தக­வ­லையும் வெளிப்­ப­டுத்­தினார். அவர் இவ்­வாறு தெரி­வித்­தது 4000 தாய்­மார்­களுக்கு கருத்­தடை செய்தார் என பரப்பி விட இல­கு­வாக அமைந்­தது.

என்­ன­வாக இருந்த போதிலும் அவர் சொத்­துக்­கு­விப்பு வழக்­கி­லேயே கைது செய்­யப்­பட்டார். ஆனால் அவர் தாய்­மார்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்­த­தா­லேயே கைது செய்­யப்­பட்டார் என போலி­யான செய்தி ஒன்று காட்­டுத்தீ போல பர­வி­விட்­டது.

குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையில் நிலவும் பதற்ற சூழ்­நி­லையை ஊட­கங்கள் மேலும் பூதாகரமாக்கின. சிலர் வைத்­தியர் ஷாபியை உடன் விசாரிக்க கோரினர். வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக முறைப்­பாடு செய்ய தாய்­மார்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

இந்த வார முடிவில் கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டுகள் ஆயி­ரத்தை அண்­மித்­தது. குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சாலை, கலே­வ­ல–­மா­வட்ட வைத்­தி­ய­சாலை மற்றும் தம்­புள்­ள–­தள வைத்­தி­ய­சாலை என்­ப­வற்­றி­லேயே முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டன. இவை அனைத்தும் வைத்­தியர் ஷாபி பணி­பு­ரிந்த வைத்­தி­ய­சா­லை­க­ளாகும். பெரும்­பா­லான தாய்­மார்கள் தமது சிசே­ரியன் சிகிச்­சைக்குப் பின்னர் தமது முதுகுத் தண்­டிலும் வயிற்­றிலும் பல­மான வலி ஏற்­பட்­டுள்­ள­தையே முறைப்­பா­டாக அளித்­துள்­ள­தாக முறைப்­பா­டு­களை பதிவு செய்யும் அலு­வ­ல­கர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

குரு­ணா­கலின் தம்­பிட்­டிய பிர­தே­சத்தில் வசிக்கும் சமில புஷ்­ப­கு­மாரி என்ற 32 வய­தான பெண் தனது 9 மாத மக­னுடன் குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லைக்கு கடந்த வாரம் சென்று முறைப்­பாடு ஒன்றை பதிவு செய்­துள்ளார். தொலைக்­காட்­சியில் வைத்­தியர் ஷாபி தொடர்­பான செய்­தியை பார்த்த பின்னர் அந்தப் பெண்­ணு­டைய உற­வி­னர்கள் முறைப்­பாடு ஒன்றைப் பதிவு செய்­யு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இவரும் இப்­போது முதுகு வலியால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். இவ­ரு­டைய முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டது.

சந்­திம குமாரி என்ற 27 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தாய் குரு­ணா­கலின் மது­ர­கொட பிர­தே­சத்தில் வசிக்­கிறார். இவர் 2014 ஆம் ஆண்டில் ஒரு மகளை பெற்­றெ­டுத்த பின்னர் பல­முறை கருத்­த­ரிப்­ப­தற்கு முயற்சி செய்­த­போதும் அவரால் முடி­யாமல் போனது. இவர் முன்­வைத்த முறைப்­பாடும் பதிவு செய்­யப்­பட்­டது. மேற்­கு­றிப்­பிட்ட 2 தாய்­மார்­களும் வைத்­தியர் ஷாபியின் சத்­தி­ர­சி­கிச்சை குழு­வினால் சிசே­ரியன் செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

தாய்­மார்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக வைத்­தியர் ஷாபி­யினால் கருத்­தடை செய்­யப்­பட்­டுள்­ளதா இல்­லையா என்­பதை தாய்­மார்­களை விஞ்­ஞான பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வ­தன்­மூலம் இல­கு­வாக தெரிந்­து­கொள்ள முடியும். பாதிக்­கப்­பட்ட தாய்­மார்கள் உட்­பட அவர்­க­ளது கண­வன்­மார்­க­ளையும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த வேண்டும். அந்த பரி­சோ­த­னை­க­ளுடன் வைத்­தி­ய­சாலை ஆவ­ணங்­க­ளையும் பரீட்­சிப்­பதன் மூலம் இந்த முறைப்­பா­டு­களின் உண்­மைத்­தன்­மையைக் கண்­ட­றி­யலாம். ஆனால் அதற்கு தயக்கம் காட்­டு­கி­றார்கள்.

“பரி­சோ­த­னை­களால் பக்­க­வி­ளை­வுகள் ஏற்­பட வாய்ப்பு உள்­ளதால் அவர்கள் அதற்கு தயக்கம் காட்­டு­கி­றார்கள்” என குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் அர­சாங்க மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கத்தின் செய­லா­ள­ரான வைத்­தியர் இந்­திக்க ரத்­நா­யக்க தெரி­வித்தார். தற்­போ­தைய பரி­சோ­தனை முறை­களின் படி எக்ஸ்—ரே மூல­மா­கவும் பலோப்­பியன் குழா­யினை நிற­மூட்­டு­வதன் மூல­மா­கவும் தாய்­மார்­களை பரி­சோ­திக்க முடியும் என இந்­திக்க தெரி­வித்தார். தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லையில் பெண்கள் முறைப்­பாடு செய்த வண்­ண­மே­யுள்­ளனர்.

இதற்­கி­டையில் இந்த விட­யங்கள் தொடர்­பான ஆய்­வொன்­றினை மேற்­கொள்ள சுகா­தார அமைச்­சினால் மே 28 ஆம் திகதி குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. சுகா­தார அமைச்சின் செயற்­பா­டு­களை நம்ப முடி­யாது என வைத்­தி­ய­சாலை சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் கேட்­கப்­பட்­டி­ருந்­ததன் படி சுகா­தார அமைச்சின் இயக்­குனர் வைத்­தியர் அனில் சம­ர­நா­யக்­கவின் தலை­மையில் குறித்த குழு நிய­மிக்­கப்­பட்­டது.

சுகா­தார அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட இந்தக் குழு­வினால் வைத்­தி­ய­சா­லையை அணுக முடி­ய­வில்லை. வைத்­தி­ய­சா­லையின் இயக்­குனர் வைத்­தியர் சரத் வீர­பண்­டார சுகா­தார அமைச்­சுக்கு அனுப்­பிய கடி­தத்தில் “உங்­க­ளு­டைய உதவி எங்­க­ளுக்கு தேவை­யில்லை” என தெரி­வித்­தி­ருந்தார். “இந்த விடயம் தொடர்பில் தலை­யிட ஜனா­தி­ப­தி­யினால் சிறந்த குழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும். நாங்கள் இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியை மாத்­தி­ரமே நம்­பி­யுள்ளோம்” என வைத்­தியர் இந்­திக்க ரத்­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

தற்­போது தனது வீட்டை விட்டு வெளி­யே­றி­யுள்ள வைத்­தியர் இமாரா தனது பிள்­ளை­களை பார்த்துக் கொள்­வ­தற்கு கஷ்­டப்­ப­டு­கிறார். தனது கண­வ­னுக்கு நீதி கிடைக்க வேண்டும் என போரா­டு­கிறார். இடம்­பெறும் ஆய்­வுகள் மூலம் நீதியைத் தவிர வேறெ­தையும் எதிர்­பார்க்­க­வில்லை.

“அவர் விடு­விக்­கப்­ப­டு­வது மாத்­திரம் எனக்குப் போதாது விசா­ர­ணை­களின் மூலம் அவர் நிரபராதி என நிரூ­பிக்­கப்­பட வேண்டும்.” என இமாரா தெரி­வித்தார். அந்த பத்­தி­ரிகை செய்தி வந்த கணத்­தி­லி­ருந்தே இமாரா மன­த­ளவில் பாதிக்­கப்­பட்டு விட்டார். அவ­ரு­டைய மூத்த மகள் தந்­தை­யுடன் மிகவும் நெருக்­க­மாக இருப்­பதால் அவரும் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ளார். அவர் உளவள ஆலோசனைக்கு அனுப்­பப்­பட்­டுள்ளார். தனது மக­ளு­டைய துய­ரத்­தையும் சேர்த்து தன்னால் தாங்க முடி­யாது என்­பதால் அவரை பாட்டி வீட்­டுக்கு அனுப்பி வைக்க இமாரா முடிவு செய்­துள்ளார்.

தனது தந்தை கைது செய்­யப்­பட்­டது முதல் இது­வரை அந்தப் பிள்­ளைகள் பாட­சா­லைக்குச் செல்­ல­வில்லை. அவர்கள் குரு­ணா­க­லி­லுள்ள பிர­பல பௌத்த பாட­சா­லை­க­ளி­லேயே கல்வி கற்­கி­றார்கள். மகளின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஸ்தம்­பி­த­ம­டை­யக்­கூ­டாது என்­ப­தற்­காக அவரை தனியார் வகுப்­பு­க­ளுக்கு அனுப்ப இமாரா முடிவு செய்­துள்ளார். ஒரு சில ஆசி­ரி­யர்கள் அவ­ருக்கு தனிப்­பட்ட முறையில் வகுப்­புக்­களை நடாத்த முன்­வந்­துள்­ளனர். அவர் அடுத்த வருடம் க.பொ.த சாதா­ரணப் பரீட்சை எழு­த­வுள்ள மாணவி ஆவார்.

“நாங்கள் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வா­னதும் வைத்­தி­யர்­க­ளா­னதும் இல­கு­வாக நடந்த ஒன்­றல்ல. நாங்கள் இரு­வ­ருமே புலமைப் பரிசில் பெற்­றுதான் பல்­க­லை­க­ழகம் சென்றோம். நான் எனது நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும்.” என இமாரா தெரி­வித்தார்.

அர­சாங்க மருத்­துவ அதி­கா­ரிகள் அமைப்பின் அங்­கத்­த­வ­ராக வைத்­தியர் ஷாபி இருந்தாலும் அந்த அமைப்பின் உதவி பெரிதளவில் கிடைக்கவில்லை. மருத்­துவ அதி­கா­ரிகள் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கத் தயங்­கு­கி­றார்கள். சில காலத்­துக்கு முன்னர் வைத்­தியர் ஷாபி­யுடன் பணி புரிந்த பெண் வைத்­தியர் ஒருவர் ஷாபி ஒரு சிறந்த வைத்­தியர் என சமூக வலைத்­தளம் ஒன்றில் பதி­விட்­டி­ருந்தார்.

வைத்­தியர் ஷாபி­யுடன் பணி புரிந்த தனது பெயரை வெளி­யி­டாத பெண்நோயியல் வைத்­தியர் ஒருவர் தெரி­வித்­த­தன்­படி மகப்­பேற்று சிகிச்­சையின் போது ஒரு குழுவே செயற்­படும். அந்தக் குழுவில் தலை­மை­ய­தி­காரி, அவ­ருக்கு துணை­யாக ஒரு அதி­காரி, வி.ஓ.ஜி ஒருவர், உப­க­ர­ணங்கள் பரி­மாற ஒரு தாதி, வெளிச் சென்­று­வர ஒரு தாதி, ஒரு ஆலோ­சகர் அல்­லது வைத்­தியர் உட்­பட மேல­திக பணி­யா­ளர்­களும் இருப்­பார்கள்.

“வைத்­தியர் ஷாபி சட்­ட­வி­ரோ­த­மாக கருத்­தடை செய்தார் என்ற செய்தி வெறுக்­கத்­தக்க ஒன்­றாகும். அத்­தனை மருத்­துவ அதி­கா­ரி­களின் பார்­வைக்குப் படாமல் அந்த தவறை செய்­தி­ருந்தால் கூட 4000 வரை வந்­தி­ருக்­கவே முடி­யாது” என அந்த பெண்­ணோ­யியல் வைத்­தியர் தெரி­வித்தார்.

பெண்கள் கருத்­தடை செய்­யப்­பட்­டுள்­ளார்­களா இல்­லையா என்­பதை நிரூ­பிக்க விரி­வான விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட வேண்டும் என தெரி­வித்த அவர் “தாய்­மார்­க­ளிடம் இருந்து முறை­ப்பா­டு­கள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. பலர் தாம் இரண்­டா­வது முறை கருத்­த­ரிக்­க­வில்லை என்றே கூறி­யி­ருக்­கி­றார்கள். பொது மக்கள் தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்­டதன் விளைவே இது­வாகும்.” என்றார். ஆண்­க­ளு­டைய பக்­கத்­திலும் பரி­சோ­திக்­கப்­பட வேண்டும். பெண்­களை பொறுத்­த­வ­ரையில் பலோப்­பியன் குழாய் தடைப்­பட்­டி­ருக்­கி­றதா இல்­லையா என்­பதை பரி­சோ­திப்­பதன் மூலம் இனங்­கா­ணலாம்.

“தொற்­றுகள் அல்­லது இதர மருத்­துவ கார­ணங்­க­ளாலும் பலோப்­பியன் குழாய் தடைப்­ப­டலாம்.” என குறித்த வைத்­தியர் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.
வைத்­தியர் ஷாபியை திடீ­ரென கைது செய்­த­தற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. வைத்­தியர் ஷாபிக்கு ஆத­ர­வாக வாதிடும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா இது­பற்றி தெரி­விக்­கையில் இந்த வழக்கு முழுக்க முழுக்க ஊகங்களை அடிப்படையாகக் கொண்டது. கைது செய்­யப்­பட்ட பின்னர் முறைப்­பா­டு­க­ளுக்கு அழைப்பு விடுப்­பது கைதை நியா­யப்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளது. என்றார்.

“ஊட­கங்­களும் சமூக வலைத்­த­ளங்­களும் வைத்­தியர் ஷாபிக்கு எதி­ரா­கவே செயற்­ப­டு­கின்­றன. நீதி­மன்­றத்தின் பி (B) அறிக்­கையின் படி வைத்­தியர் ஷாபிக்கு எந்தப் பிரச்­சி­னையும் ஏற்­ப­ட­வில்லை. இது அவர் அதி­க­மான சொத்­துக்­களை பதுக்கி வைத்­துள்ளார் என கிளப்பி விட்­ட­வர்­களின் வேலை­யா­கத்தான் இருக்கும்” என ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார். குரு­ணாகல் பொலிஸ் டி.ஐ.ஜி வசந்த கித்­சிரி ஜயலத் என்­ப­வரே இந்த கைதுக்கு தலைமை தாங்­கி­யுள்ளார். குரு­ணாகல் மேயருக்கும் மற்றுமொரு ஊடகத்துக்கும் இதில் தொடர்பிருக்கிறது என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டி.ஐ.ஜி ஜயலத் அவருடைய சுயவிருப்பிலேயே பொலிஸ் பேச்சாள ருக்கு அறிவிக்காமல் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கியுள்ளார். இதனால் சமூக வன்முறைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. டி.ஐ.ஜி யினுடைய மனைவி குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர் ஷாபியுடன் இணைந்து பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுகள் குறித்த பத்­தி­ரிகை செய்­தியில் இருந்தே தொடங்­கி­யது. சர்ச்­சைக்­கு­ரிய அந்தக் கட்­டு­ரையை பிர­சு­ரித்த பத்­தி­ரி­கையின் தலைமை ஆசி­ரியர் பொலிஸ் மற்றும் வைத்தியசாலையைச் சேர்ந்த அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்ள விரும்­பாத சில­ரா­லேயே குறித்த கட்­டு­ரைக்கு தக­வல்கள் கிடைத்­த­தாக தெரி­வித்தார்.

வைத்­தியர் ஷாபியின் மனைவி இமா­ராவின் இர­வுகள் தூக்­க­மின்றி கழி­கின்­றன “எனக்கு தூங்­கவோ சாப்­பி­டவோ முடி­ய­வில்லை. இது எங்­க­ளது குழந்­தை­களை வெகு­வாக பாதித்­துள்­ளது” என இமாரா தெரி­வித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலில் நூற்­றுக்­க­ணக்­கான உயிர்கள் பலி­யான போது நாட்­டுக்­காக இமாரா துக்­கப்­பட்டார். “பயங்­க­ர­வா­திகள் முஸ்லிம் சமூ­கத்தை முழு­மை­யாக நாச­மாக்கி விட்­டார்கள். நாம் அனை­வரும் இலங்­கை­யர்கள் நாங்கள் ஒற்­று­மை­யாக வாழ்­கிறோம்” என அவர் தெரி­விக்­கிறார். இமாரா அவ­ரது நிலை­மையை இவ்­வாறு தெரி­விக்­கிறார்.

“எதிர்­கா­லத்தில் எனது குடும்­பத்­திற்கு என்ன நடக்கும் என்றே தெரி­ய­வில்லை. எனது கணவர் அப்­பாவி என நிரூ­பிக்­கப்­பட்டால் கூட எங்­களால் பழைய நிலைமைக்கு திரும்ப முடியுமா என்று தெரியவில்லை. ஊடகங்கள் எங்களை கொன்று விட்டன.”

ஆங்கிலத்தில் : ஆன்யா விபுலசேன

தமிழில் : எம்.ஏ.எம். அஹ்ஸன்

நன்றி : சன்டே ஒப்சேவர்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.