ஷாபி டாக்டர், இன்று இலங்கையில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த ஒரு மாதமாக நாட்டின் பிரதான பேசு பொருள்களில் தவிர்க்கமுடியாத ஒரு பெயராக அது மாறியிருக்கின்றது. காரணம், ஒரு கருத்தடை நாடகம், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டு. குற்றச்சாட்டைவிட, கருத்தடை நாடகத்தின் பெயரால் சாட்சிகள் இன்றியே இன்று ஷாபி டாக்டர் குற்றவாளியாக்கப்பட்டுவிட்டார். இது ஒரு பயங்கரமான நிலைமை.
எப்போதும் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் செய்து நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் அவர் சந்தேக நபராக அறிவிக்கப்படுவதும், பின்னர் மேலதிக விசாரணைகளில் அல்லது வழக்கு விசாரணைகளில் சாட்சிகளின் அடிப்படையில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதுமே நியாயமான அல்லது சட்டத்தின் ஆட்சி இடம்பெறும் ஒரு நாட்டின் வழமையாக இருக்க முடியும். எனினும், ஷாபி டாக்டரின் விவகாரத்தில், அவர் சாட்சிகளின்றி குற்றவாளியாக முழுத் தேசத்துக்கும் அறிவிக்கப்பட்ட பின்னரேயே, அவருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
ஷாபி டாக்டருக்கு எதிராக தற்போது நியாயமாகவோ அநியாயமாகவோ இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒன்று, வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை. மற்றையது, சிங்களப் பெண்களுக்கு சட்டவிரோதமாகக் கருத்தடை செய்தமை.
இந்தக் கட்டுரை எழுதப்படும் இறுதி நிமிடம் வரையிலும் அந்த இரு விடயங்கள் தொடர்பிலும் ஷாபி டாக்டருக்கு எதிராக எந்தவொரு சாட்சியும், விசாரணையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான், ஷாபி டாக்டரை மையப்படுத்தி இடம்பெறும் நாடகத்தின் உண்மை நிலைமையை பறைசாற்றும் சாட்சி.
நாடகத்தின் டீசர்
கடந்த மார்ச் 23 ஆம் திகதி வெளியான திவயின தேசிய பத்திரிகையின் பிரதான தலைப்பு செய்தியானது, “சிசேரியன் சத்திர சிகிச்சைகளின் பின்னர் தெளஹீத் ஜமாஅத் டாக்டரால் சிங்கள பெளத்த தாய்மார் 4000 பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு” என வெளியாகியிருந்தது. இதுவே இந்த நாடகத்தின் உத்தியோகபூர்வ டீசராக அமைந்தது. உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்த போதும் அவ்வதிகாரியின் பெயர் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
எனினும், அந்த செய்தி வெளியானபோதும், இலங்கையில் எந்தவொரு பொலிஸ் நிலையத்தினாலும், சிறப்பு விசாரணையாளர்களினாலும் அவ்வாறு ஒரு விடயம் குறித்து எந்த விசாரணைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதை அன்றைய தினமே பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர ஆகியோர் உறுதி செய்தனர்.
இவ்வாறிருக்கையில் தான் திவயின செய்தியை உறுதி செய்வது போல அன்று மாலை ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர் சன்ன ஜயசுமன, ஷாபி டாக்டரின் புகைப்படத்தை பிரசுரித்து தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில், திவயின செய்தி சொல்லும் டாக்டர் இவர்தான் எனும் மாயையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் மீள செய்தி வெளியிட்ட திவயின பத்திரிகை, தனது செய்தியை உறுதிசெய்ய குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டாரவையும் மேற்கோள்காட்டி அறிக்கையிட்டிருந்தது. இந்நிலையில் இந்தச் செய்தி பிரச்சினையாக நாடளாவிய ரீதியில் இனவாத சாயலுடன் தீயாய் பரவியது.
செய்தி குறித்த விசாரணை
இந்நிலையில் திவயின பத்திரிகை செய்தி தொடர்பில், அந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் சி.ஐ.டி. ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி கடந்த மார்ச் 25 ஆம் திகதி குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளரையும், அப்பத்திரிகையின் ஆசிரியரையும் விசாரித்து சி.ஐ.டி. வாக்குமூலம் பெற்றதுடன், செய்தியை வெளியிட்ட உயர் பொலிஸ் அதிகாரி யார் என்பதையும் வெளிப்படுத்திக்கொண்டது. அதன்படி குருநாகல் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத்தையும் சி.ஐ.டி. விசாரித்துள்ளது.
குருநாகல் பொலிஸாரின் அவசர கைது
கடந்த மே 25 ஆம் திகதியன்று ஷாபி டாக்டர் அவரது வீட்டில் வைத்து குருநாகல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் பேச்சாளரின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் அவர், வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு தொடர்பில் பொலிஸாருக்கு கைது செய்யலாமா?
எவ்வாறாயினும் பொதுவாக சொத்துக் குவிப்பு அல்லது வருமானத்தை மீறிய சொத்து சேர்த்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவே விசாரணைகளை முன்னெடுக்க முடியும். எனினும், குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத் தனக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றார். எவ்வாறாயினும் பொலிசாருக்கு கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் அதுகுறித்து விசாரிக்க முடியுமான அதிகாரம் உள்ளதால் அதனை மையப்படுத்தி இதனை ஆரம்பித்திருக்கலாமெனக் கொண்டாலும் முறைப்பாடுகளின்றி இவ்வாறான விசாரணையொன்றை ஆரம்பித்ததும், அதனுடன் சேர்த்து கருத்தடை கதை ஒன்றினை பரப்பியதும் பாரிய சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.
கைதின் பின்னணியில் உள்ள
பரகசியமான இரகசியம்
இந்த ஷாபி டாக்டரின் கைதின் பின்னணி தொடர்பில் குருநாகலில் ஒரு பரகசியமான இரகசியம் உலா வருகின்றது. அதாவது, குருநாகல் நகரில் ஒரு கட்டிடத்தை கொள்வனவு செய்வது குறித்த போட்டியே இந்தக் கைதின் பின்னணியெனக் கூறபப்டுகின்றது. ஷாபி டாக்டருக்கும், குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத்தின் வகுப்புத்தோழனான குருநாகல் வர்த்தக சங்கத்தின் ஒருவருக்குமிடையில் இந்தப் போட்டி இருந்துள்ளது. இறுதியில் ஷாபி டாக்டர் அந்த கட்டிடத்தைக் கொள்வனவு செய்ததையடுத்து, வர்த்தக சங்க உறுப்பினர் தனது நண்பனான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத் ஊடாக காய் நகர்த்தியதாக அந்தப் பரகசியமான இரகசியம் சொல்கிறது.
குருநாகல் நகரில் ரியோ பார் எனும் குறித்த கட்டிடம் விற்பனைக்காக 2015 ஆம் ஆண்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் ஒருவரின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான இந்தக் கட்டிடத்தின் விலை அல்லது பெறுமதி 130 மில்லியன் அல்லது 13 கோடி ரூபாவாகும்.
அவ்வாறாயினும் அதனை ஷாபி டாக்டர் தனித்துக் கொள்வனவு செய்யவில்லை எனவும் சாஜித், ரவூஸ்தீன் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகிய மேலும் மூவருடன் இணைந்தே அதனை கொள்வனவு செய்ததாகவும் கூறப்படுகின்றது. அந்தக் கட்டிடத்தை கொள்வனவு செய்ய முதலில் 6 கோடி ரூபா ஆரம்பமாக செலுத்தப்பட்டுள்ளதுடன், எஞ்சிய தொகையை 6 மாதங்களுக்குள் குத்தகை அடிப்படையில் செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அடிப்படை பணத்தொகையான 6 கோடி ரூபாவை செலுத்த அக்கட்டிடத்தை இணைந்து கொள்வனவு செய்த அனைவரும் தலா ஒன்றரைக் கோடி ரூபா வீதம் முதலிட்டுள்ளனர். அதன்படி ஷாபி டாக்டரும் அக்கட்டிடத்துக்கு செலவழித்துள்ள தொகை ஒன்றரைக் கோடி ரூபாவே.
அதன்பின்னர் குருநாகல் வர்த்தக சங்கத்தை சேர்ந்த தரப்பு எனக் கூறப்படும் ஒரு சாரார் அந்தக் கட்டிடத்தை தமக்கு விற்பனை செய்யக் கட்டிட உரிமையாளருடன் பேசியுள்ளனர். அது தொடர்பில் கட்டிட உரிமையாளர் டாக்டர் ஷாபி தரப்புடன் பேசிய போது, ஷாபி தரப்பினர் தாம் செலுத்திய அடிப்படை தொகையான 6 கோடி ரூபாவையும் அதற்கு மேலதிகமாக இன்னுமொரு கோடி ரூபாவையும் செலுத்துமாறும் அதன்பின்னர் ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் அதற்கு விருப்பம் தெரிவிக்காமையால் ஏற்கனவே ஷாபி டாக்டர் தரப்பின் ஒப்பந்தத்தின் பிரகாரம் அந்தக் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தை மையப்படுத்தியே ஷாபி டாக்டருக்கு எதிரான சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கருத்தடை கதை வந்த பின்னணி என்ன?
கடந்த 2017 ஆம் ஆண்டு குருநாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகத் தற்போதைய பணிப்பாளரே கடமையாற்றியுள்ளார். அப்போது அவ்வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர் மற்றொருவரிடம் ஷாபி வைத்தியருக்கு எதிராக சட்டவிரோத கருத்தடை தொடர்பில் வதந்தியொன்றினை கதைத்துள்ளார். இதனை தனது நற்பெயருக்கு களங்கமேற்பட்டதாகக் கூறி, ஷாபி வைத்தியர் அதுகுறித்து விசாரிக்குமாறு அப்போதைய பிரதிப் பணிப்பாளரிடம் முறையிட்டுள்ளார். எனினும், அது தொடர்பில் விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை. பின்னர் அப்பெண் வைத்தியரும் பிரதிப் பணிப்பாளரும் குருநாகலிலிருந்து இடமாற்றம் பெற்று சென்றிருந்தனர்.
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதன்
மற்றொரு பின்னணி
இதேவேளை ஷாபி டாக்டரும் அவரது மனைவியும் குருநாகல் வைத்தியசாலையிலேயே சேவையாற்றினர். இவ்வாறு இருக்கும் நிலையில் ஷாபி டாக்டரின் மனைவிக்கு இடமாற்றமொன்று வழங்கப்பட்டிருந்தது. அதனை மையப்படுத்தி, அப்போதைய பிரதிப் பணிப்பாளரும் தற்போதைய பணிப்பாளருமான வைத்தியருடன் ஷாபி டாக்டருக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பின்னர் ஷாபி டாக்டரின் மனைவி இடமாற்றம் பெற்று சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட குருநாகல் வைத்தியசாலைக்குள்ளிருக்கும் தனிப்பட்ட முரண்பாடுகள் மற்றும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் பின்னணியில் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகின்றது.
இந்தப் பின்னணியிலேயே, பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத்தே திவயின பத்திரிகைக்கு கருத்தடை செய்தியை வெளியிட குறித்த ஊடகவியலாளருக்கு தகவல் கொடுத்தவர் என்று கூறப்படுகின்றது. இந்த விடயம் குறித்து தற்போது ஷாபி டக்டர் தொடர்பில் விசாரிக்கும் சி.ஐ.டி. குழு அவதானம் செலுத்தியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயமே.
ஷாபி டாக்டரை சி.ஐ.டி. பொறுப்பேற்ற பின்னணி
மேற்சொன்ன பரகசியமான இரகசியம் பொலிஸ் திணைக்களத்துக்குள் பரவலாகப் பேசப்பட்ட விடயமாகும். எனவே, ஷாபி டாக்டரைக் கைது செய்த குருநாகல் பொலிசார், பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத்தின் ஆலோசனைகளுக்கமையவே ஒவ்வொரு நகர்வுகளையும் செய்திருந்தனர். குறிப்பாக கைது செய்த பொலிஸ் குழு, ஷாபி டாக்டருக்கு எதிராகக் குற்றஞ்சாட்ட எந்த ஓர் ஆதாரத்தையும் கையில் வைத்திருக்கவில்லை.
குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத் முன்னெடுக்கும் குறித்த விசாரணை முறைமை நியாயமற்றது என்பது எதிர்காலத்தில் பொலிசாருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை அவதானித்த பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, ஷாபி டாக்டரை பொறுப்பேற்று விசாரிக்குமாறு சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனையடுத்தே சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கமைய, சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ். திசேராவின் கீழ் அந்தப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவுக்கு குறித்த விடயம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்தே குருநாகலுக்கு சென்ற விஷேட சி.ஐ.டி. குழு ஷாபி டாக்டரை பொறுப்பேற்று கொழும்புக்கு அழைத்துவந்து விசாரணைகளை ஆரம்பித்தது.
டாக்டருக்கு எதிரான முறைப்பாடுகள்
எவ்வாறாயினும் ஷாபி டாக்டர் கைது செய்யப்பட்டதையடுத்து, ஏற்கனவே ஊடகங்கள் ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் கருத்தடை விவகாரக் குற்றவாளியாகவே சித்திரிக்கப்பட்டிருந்ததால் அதுகுறித்த விசாரணைகளுக்கு சி.ஐ.டி.க்கு முறைப்பாடுகள் தேவைப்பட்டன. அதனால் அப்படி எவரேனும் சட்டவிரோத கருத்தடைக்குள்ளாக்கப்பட்டிருப்பின் முறைப்பாடளிக்குமாறு அவரைக் கைது செய்த பின்னரேயே பொலிசார் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில் பொலிஸ் நிலையங்கள், குருநாகல், கலேவல மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளுக்கென நேற்று முன்தினம் மாலை வரை 1015 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.
விசாரணையின் தற்போதைய நிலைமை
ஷாபி டாக்டர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை குறித்த விசாரணைப் பிரிவு முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில், நேற்று மாலைவரை டாக்டருக்கு எதிராக குற்றம் சுமத்த எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்றே நான்காம் மாடியின் உள்ளக தகவல்கள் எமக்கு வெளிப்படுத்தின.
குறிப்பாக சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை குறித்த வைத்தியருக்கு எதிரான அடிப்படை குற்றச்சாட்டு தொடர்பில்கூட நேற்று முன்தினம் மாலை வரை, அக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
வைத்தியர் ஷாபிக்கு எதிராகக் கூறப்படும் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பிலான விடயம் தொடர்பில் சி.ஐ.டி. குழு 758 வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. அதில் சட்டவிரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் வைத்தியருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்த தாய்மார்களில் 601 பேரிடமும், பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர்கள் 7 பேரிடமும், ஷாபி வைத்தியரின் தரத்துக்கு சமனான தரத்தை உடைய குருநாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் ஒருவரிடமும், குழந்தைகள் தொடர்பிலான 6 வைத்தியர்களிடமும், சிசேரியன் வைத்தியர்களுக்கு உதவி வைத்தியர்களாகக் கடமையாற்றும் 11 வைத்தியர்களிடமும், உணர்விழக்கச் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் 10 வைத்தியர்களிடமும் பதிவு செய்த வாக்குமூலங்களும் உள்ளடங்குகின்றன.
இதனைவிட, சிசேரியன் சிகிச்சைகளின்போது குறைந்தது இரு தாதியர்கள் அந்நடவடிக்கைகளில் பங்கேற்கும் நிலையில், அவ்வாறு அந்த சிகிச்சைகளில் பங்கேற்ற பிரதான தாதி ஒருவர் உள்ளிட்ட 70 தாதியர்களிடமும், 18 உதவியாளர்களிடமும் பலோபியன் உறுப்புகள் தொடர்பிலான வைத்தியர் ஒருவரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் முக்கியமான 31 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
ஷாபி டாக்டருக்கு எதிரான குற்றச்சாட்டு
ஷாபி டாக்டர் குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பிரசவம் தொடர்பிலான சிரேஷ்ட வைத்தியர்களில் ஒருவர். அவர் முன்னெடுக்கும் சிசேரியன் சத்திர சிகிச்சைகளின்போது அவருக்கு மேல் அவரை மேற்பார்வை செய்ய வைத்திய நிபுணர் ஒருவரும், அவருடன் சக வைத்தியர்கள் குறைந்தபட்சம் இருவரும் தாதியர்களும் இருப்பர். அவ்வாறான சூழலில் ஷாபி டாக்டர், பெண்களின் கர்ப்பப் பையை அண்மித்துள்ள பலோபியன் குழாயில் முடிச்சுப்போட்டு இந்தக் கருத்தடையை அல்லது மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவதாகவே குற்றம் சுமத்தப்படுகின்றது. எனினும், இத்தனை பேர் சேர்ந்து செய்யும் சத்திர சிகிச்சையின் இடையே ஷாபி டாக்டருக்கு மட்டும் அதனை எப்படி செய்ய முடியும் என்பதே பிரதான கேள்வி.
எவ்வாறாயினும் இதுவரை சி.ஐ.டி.க்கு வாக்குமூலமளித்துள்ள பல பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள், அவ்வாறான கருத்தடை சிசேரியன் ஒன்றினை ஒருவர் தனித்து செய்ய சாத்தியமே இல்லை என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் வாக்குமூலமளித்துள்ள 70 தாதியர்களும் தங்களை மீறி தனித்து வைத்தியர் ஷாபியால் அவ்வாறான சட்டவிரோத செயற்பாட்டை முன்னெடுக்க முடியாதெனவும், தாம் கடமையிலிருந்தபோது அவரால் எந்த சட்டவிரோதமான செயல்களும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் வாக்கு மூலமளித்துள்ளதாக நான்காம் மாடித் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் முறைப்பாடளித்துள்ள பெண்களை விசேட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அவர்கள் சட்டவிரோத கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சி.ஐ.டி. தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான நீதிமன்ற அனுமதியினையும் பெற்றுக்கொண்டுள்ளது. இந் நிலையில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் கீழான விஷேட குழுவொன்று முன்னிலையில் இவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தக்குழுவில் இரு பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் உள்ளடங்குகின்றனர்.
இந்த விடயத்தில் முறைப்பாடளித்துள்ள பெண்கள் பலர், திவயின பத்திரிகை செய்தியை அடுத்து ஏற்பட்ட சந்தேகத்தின் கீழேயே முறைப்பாடளித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், அந்தப் பெண்கள் அனைவரும் கொழும்பு காசல் மற்றும் டி சொய்ஸா பெண்கள் மருத்துவமனையில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். இதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலருக்கு நீதிமன்றம் கட்டளையும் பிறப்பித்துள்ளது.
குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிரான உத்தரவு
இந்நிலையில் டாக்டர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பின்னணியில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் தற்போதைய பணிப்பாளரின் பங்களிப்பும் இருக்கலாம் என்பது அவரது நடவடிக்கைகள் ஊடாக தெள்ளத்தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, திவயின பத்திரிகை செய்தியை அடுத்து குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களை கூட்டி அங்கு முன்வைத்த கருத்துக்கள், ஷாபி வைத்தியருடன் தனிப்பட்ட முரண்பாடுகளை மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமென்ற பரவலான சந்தேகங்கள் உள்ளன.
இந்நிலையில் குறித்த பணிப்பாளர் சி.ஐ.டி.யின் விசாரணைகளை புறக்கணித்த நிலையில், அவருக்கு எதிராக சி.ஐ.டி. நீதிமன்றம் உத்தரவைப் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த விசாரணைகளுக்கு அவர் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குருநாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குள்ள சிக்கல்
இந்நிலையில் ஷாபி டாக்டர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சி.ஐ.டி. விரிவான விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில் எதிர்வரும் வாரம் குருநாகல் நீதிவான் நீதிமன்றுக்கு விரிவான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.
ஷாபி டாக்டர் சட்டவிரோத கருக்கலைப்பு நடவடிக்கையிலோ, சொத்துக் குவிப்பிலோ ஈடுபட்டிருப்பின் அவர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும், பொய்யாகப் புனையப்பட்ட அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவரை மட்டும் இலக்குவைத்து இடம்பெறும் பழிவாங்கல்களுக்கு இடமளிக்க முடியாது.
பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவரின் தகவல் பிரகாரம், ஷாபி டாக்டர் தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளில் மருத்துவ சோதனைகள் மிக முக்கியமான திருப்பமாக அமையுமாம். அந்த சோதனைகளில் ஷாபி டாக்டர் தவறிழைக்கவில்லை என்பது தெரியவந்தால், குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலைமை உருவாகுமென அந்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டுகின்றார்.
குறிப்பாக முறைப்பாடொன்றுகூட இருக்காத நிலையில் ஒரு விடயத்தை ஊடகம் வாயிலாக பிரசாரம் செய்து, இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவித்தமை தொடர்பில் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கூட அந்நடவடிக்கைகள் அமையப்பெறலாமென அந்த உயரதிகாரி சுட்டிக்கடடினார்.
உண்மையில் வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மேலோட்டமாகப் பார்க்கும்போது சோடிக்கப்பட்டவையே. அது குறித்த விசாரணைகள் தொடர்வதால், உண்மை மிக விரைவில் வெளிச்சத்துக்கு வருமென எதிர்பார்க்கலாம். முறைப்பாடுகளின்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஊடகங்களில் செய்தி வெளியிட்டு ஷாபி டாக்டருக்கு எதிராகப் பெரும் சதி செய்யப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. சட்டம், ஒரு வைத்தியர் தொடர்பிலேயே இவ்வளவு வளைக்கப்படுமானால், சாதாரண ஒரு மனிதன் தொடர்பில் எவ்வளவு வேண்டுமானாலும் வளைக்கப்படலாம்.
எனவே, சட்டத்தை கையில் வைத்துக்கொண்டிருப்பதாக மமதை கொண்டு இவ்வாறு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக தனக்கு வேண்டாதோரைப் பழிதீர்க்கும் படலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். ஷாபி டாக்டரின் கைதும் அதுசார்ந்த விசாரணைகளும் பலரது முகத்திரைகளைக் கிழிக்கும் என எதிர்பார்க்கலாம்.
எம்.எப்.எம்.பஸீர்