கடந்த இரண்டு நாட்களாக ஈராக்கில் பெய்துவரும் அடைமழை காரணமாக குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுள் பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குவதாக கடந்த ஞாயிறன்று ஈராக் சுகாதார அமைச்சின் பேச்சாளர் சயிப் அல்-பத்ர் தெரிவித்தார்.
வெள்ளத்தில் மூழ்கியதில் சிலர் உயிரிழந்ததாகவும், ஏனையோர் கார் விபத்துக்கள், மின்சாரத் தாக்கம் மற்றும் இடிந்து வீழ்ந்த வீடுகளுக்குள் சிக்குண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளனர். குறைந்தது 180 பேர் இதில் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஈராக்கின் வடக்குப் பகுதியில் சராசரி மழை வீழ்ச்சியைவிட அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், அடைமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஈராக்கிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் உள்ளடங்கலாக வடக்கு மாகாணத்திலுள்ள 10,000 மக்களும், நினவேஹிலுள்ள 15,000 மக்களும் அவசிய உதவிகளை எதிர்பார்த்திருக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இழப்புக்கள் தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளமேற்பட்டுள்ள பகுதிகளில் பாதிப்புக்குள்ளான வீடுகள், கால்நடைகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருள்கள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பக்தாதிற்கு வடக்கே சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சராஹத்தீனின் அல்-ஷராகத் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
மௌசூலில் நகரத்தைப் பிரிக்கும் தைக்கிரிஸ் நதிக்கு மேலாக இருக்கும் இரு மிதவைப் பாலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. மௌசூலின் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையேயான ஒரேயொரு பாதையாக இது காணப்படுகின்றது. இப்பாலங்கள் நகரை மீட்பதற்கான ஒரு வருடகால யுத்தத்தின்போது ஐ.எஸ். ஆயுத அமைப்பினரால் இப்பாலங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை இணைத்த அவசரக்குழு ஒன்றினை அமைப்பது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய பிரதமர் டெல் அப்தெல் மஹ்தி அறிவித்தார்.
மின்சார, எண்ணெய் மற்றும் வர்த்தக அமைச்சுக்கள் உதவுவதற்கு தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளன.
உலகின் மிக வெப்பமான நாடுகளுள் ஒன்றான ஈராக்கில் உட்கட்டமைப்புக்கள் சீரில்லாததன் காரணமாக கடுமையான மழையினால் உயிரிழப்புக்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மின்சாரத் தாக்கத்தினால் 58 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.