நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்?

0 894

1956 பொதுத் தேர்­தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­கவின் வெற்­றிக்குப் பிறகு இலங்­கையின் அர­சியல் கட்­சி­களின் பிர­சா­ரங்­களில் ஆதிக்கம் செலுத்­தி­வ­ரு­வது ஒரே­யொரு பிரச்­சி­னையே; இன­வா­தமே அது. ஐம்­பது வரு­டங்­க­ளுக்கும் மேலாக இந்தப் பிர­சா­ரங்­களின் பிர­தான இலக்­காக தமிழ் சமூ­கமே இருந்­தது. இறு­தியில் ஒரு முப்­பது வரு­ட­கால போருக்கும் வழி­வ­குத்­தது. அந்தப் போரினால் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் ஏற்­பட்ட இழப்பு உண்­மையில் மதிப்­பிட முடி­யா­த­தாகும். தமிழர் பிரச்­சினை இப்­போது அதன் தாக்­கத்தை இழந்து வாக்­கா­ளர்­களைக் கவ­ரு­வ­தற்கு தென்­னி­லங்­கையில் பயன்­ப­டுத்­த­மு­டி­யாத ஒன்­றா­கி­விட்­டது. என்­றா­லும்­கூட, குறிப்­பிட்ட சில ‘அர­சியல் ஹீரோக்கள்’ தமிழர் பிரச்­சி­னைக்கு புத்­துயிர் கொடுக்க முயற்­சித்துக் கொண்­டி­ருப்­ப­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

2009ஆம் ஆண்­டுக்குப் பிறகு அதுவும் குறிப்­பாக, 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து சிங்­கள அர­சி­யல்­வா­திகள் அச்­சு­றுத்தும் புதிய பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இன்­னொரு இலக்கை தேடிக்­கொண்­டி­ருந்­தார்கள்; அந்த தேடலில் அவர்கள் முஸ்லிம் சமூ­கத்தை கண்­டு­பி­டித்­தார்கள்.

சிங்­க­ள­வர்­க­ளுக்கு மேலாக அர­சியல் ரீதி­யிலும், கலா­சார ரீதி­யிலும் தமி­ழர்கள் மேலா­திக்கம் செலுத்தும் ‘அச்­சு­றுத்தல்’ இருப்­ப­தாக புனை­வு­செய்து சிங்­கள மக்­களை நம்­ப­வைக்­கக்­கூ­டி­ய­தாக பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டதைப் போன்று முஸ்­லிம்கள் வர்த்­தக ரீதி­யிலும் குடிப்­ப­ரம்பல் ரீதி­யிலும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு மேலாக ஆதிக்கம் செய்யும் அச்­சு­றுத்தல் வந்­து­விட்­டது என்று இப்­போது பிர­சா­ரங்கள் முழு­வீச்சில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ‘சஹ்ரான் அன்ட் கோ’வின் ஈஸ்டர் ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் (அவற்றின் பின்­னணி பற்­றிய விப­ரங்கள் இப்­போது விளக்­க­மாக வெளி­வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன) கார­ண­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஏற்­கெ­னவே முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வந்த பிர­சா­ரங்­களில் ‘முஸ்லிம் பயங்­க­ர­வாத’ பரி­மா­ணமும் சேர்ந்­து­கொண்­டுள்­ளது.

அதே­வேளை, எந்­த­வொரு அர­சியல் கட்­சி­யுமே பொரு­ளா­தாரம், சுகா­தாரம், கல்வி, சுற்­றாடல் பாது­காப்பு போன்ற மக்­களை பெரிதும் வாட்­டி­வ­தைக்­கின்ற உண்­மை­யான பிரச்­சி­னை­களைப் பற்றி பேசு­வ­தாக இல்லை. கடந்த காலத்­தில்­கூட, இட­து­சா­ரி­களைத் தவிர வேறு எந்­த­வொரு அர­சியல் கட்­சியின் தலை­வரும் தேர்தல் சமர்­க­ளின்­போது உண்­மை­யான பிரச்­சி­னை­களில் கவனம் செலுத்­தி­ய­தில்லை. இன்று ஆட்­சி­ய­தி­கா­ரத்­துக்­காக மல்­லுக்­கட்டிக் கொண்­டி­ருக்­கின்ற மூன்று பிர­தான கட்­சி­களும் “ஐக்­கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன” திறந்த பொரு­ளா­தா­ரத்தை ஏக­ம­ன­தாக ஆரத்­த­ழு­வி­யி­ருக்­கின்­றன.

அர­சாங்­கத்­து­றையை பொரு­ளா­தார பங்­கேற்­பிலும் முகா­மைத்­து­வத்­திலும் இருந்து படிப்­ப­டி­யாக விடு­விப்­ப­தற்கு தயங்­காத அள­வுக்கு இந்தக் கட்­சிகள் திறந்த பொரு­ளா­தா­ரத்தை நேசிக்­கின்­ற­வை­யாக மாறி­விட்­டன. அதனால் முஸ்லிம் அச்­சு­றுத்­தலைப் பற்றி பேசி மக்­களை திசை­தி­ருப்­பு­வதைத் தவிர அவற்­றுக்கு ஆக்­க­பூர்­வ­மான திட்டம் எதையும் மக்கள் முன்­வைக்­கக்­கூ­டிய வல்­லமை இல்லை. மார்க்­சி­யத்­துடன் ஒரு புனை­வுத்­தன்­மை­யான பிணைப்பைக் கொண்ட ஜனதா விமுக்தி பெர­முன (ஜே.வி.பி.) யாவது ஆக்­க­பூர்­வ­மான பொரு­ளா­தார நிகழ்ச்­சித்­திட்­டத்­து­ட­னான நம்­ப­கத்­தன்­மை­யான மாற்­றாக அமையும் என்று பார்த்தால் அதுவும் ஏமாற்­ற­மாகப் போய்­விட்­டது. ஜே.வி.பி.யையும் கூட இன­வாத வைரஸ் தொற்றிக் கொண்­டுள்­ளது. தீவிர வல­து­சாரிக் கட்­சி­க­ளிடம் எந்­த­வி­த­மான உருப்­ப­டி­யான கொள்­கையும் இல்லை. அவை படு­மோ­ச­மான அர­சியல் வங்­கு­ரோத்து நிலையில் இருக்­கின்­றன. இதுதான் எமது தேசத்தின் இன்­றைய நிலை.

இவற்­றினால் ஏற்­ப­டக்­கூ­டிய விளைவு எத்­த­கை­ய­தாக இருக்கும்? தமிழ்ச் சிறு­பான்மை இனத்­த­வர்­களை கண்­ணி­ய­மாக நடத்தி அவர்­க­ளுக்கு சில­வ­கை­யான அதி­காரப் பகிர்­வு­களை வழங்­கு­வ­தற்கு தொடர்ச்­சி­யாக மறுத்­து­வந்த கார­ணத்­தால்தான் இறு­தியில் உள்­நாட்­டுப்போர் வந்­தது. இப்­போது என்ன நடந்­தி­ருக்­கி­றது. தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரத்தைப் பகிர மறுத்­த­வர்கள் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனர்­க­ளுக்கு 99 வரு­டங்­க­ளுக்கு கொடுத்­தி­ருக்­கி­றார்கள். எப்­போது அவர்கள் இங்­கி­ருந்து போவார்கள்? இந்தக் கேள்­விக்கு கட­வு­ளினால் மாத்­தி­ரமே பதில்­சொல்ல முடியும்.

அதே­போன்றே 2009 ஆம் ஆண்­டுக்குப் பிறகு இலங்கை விவ­கா­ரங்­களில் இந்­தி­யாவின் செல்­வாக்கும் கணி­ச­மா­ன­ள­வுக்கு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. உள்­நாட்டில் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுப்­ப­தற்கு முன்­ன­தாக இந்­திய தலை­வ­ரிடம் ஆசீர்­வாதம் பெறு­வ­தற்­காக இலங்­கையின் ஜனா­தி­ப­தி­களும் பிர­த­மர்­களும் புது­டில்­லிக்கு விஜயம் செய்­வ­தென்­பது பெரும்­பாலும் ஒரு சடங்­கா­கவே மாறி­வ­ரு­கி­றது எனலாம். மத­ரீ­தி­யான ஆசீர்­வா­தத்­துக்­காக திருப்­ப­தியும் அர­சியல் ரீதி­யான ஆசீர்­வா­தத்­துக்­காக புது­டில்­லியும் இலங்கைத் தலை­வர்­க­ளுக்கு அர­சியல் யாத்­திரை மையங்­க­ளாக மாறி­விட்­டன.

அம்­பாந்­தோட்­டையைப் போன்ற சொத்­துக்­களை நீண்­ட­கால அடிப்­ப­டையில் பெற்­றுக்­கொள்­வதன் மூலம் இலங்கைத் தீவில் சீனப் பிர­சன்­னத்தை எதி­ரீடு செய்­வ­தற்கு இந்­தியா விரும்­பு­கி­றது. பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, சிறி­சேன அன்ட் கம்­ப­னிக்கு வெறு­மனே ‘ஹலோ’ சொல்­வ­தற்கு கடந்­த­வாரம் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வில்லை. சீன – இந்­திய புவிசார் அர­சி­ய­லுக்குள் இலங்கை வச­மாக மாட்­டிக்­கொண்­டுள்­ளது. அதி­காரம் செய்­ய­வி­ரும்­பு­கின்ற மூன்­றா­வது நாடும் மிகவும் பலம் பொருந்­தி­ய­து­மான அமெ­ரிக்கா, ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து திரு­கோ­ண­ம­லையில் தனது கடற்­படை கப்­பல்­க­ளுக்கு தரிப்பு வச­தி­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு ஏது­வாக இலங்­கை­யி­ட­மி­ருந்து சலு­கை­களை வலிந்து கேட்­ப­தற்கு சர்­வ­தேச முஸ்லிம் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலை ஊதிப் பெருப்­பித்­துக்­காட்டும் என்­பது நிச்­சயம். (எல்­லா­வற்­றுக்கும் மேலாக அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யமே ஜிஹா­தி­க­ளையும் ஜிஹா­தி­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளையும் உரு­வாக்­கி­யது. இப்­போது இலங்­கையைப் போன்ற கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்­ததும் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் ரீதியில் வலி­மை­யற்­ற­து­மான நாடு­களில் நிரந்­த­ர­மாகக் காலூன்­று­வ­தற்கு அமெ­ரிக்க வெளி­யு­றவு கொள்கை வகுப்­பா­ளர்­க­ளுக்கு சர்­வ­தேச ஜிஹா­திய அச்­சு­றுத்தல் ‘வச­தி­யான ஒரு சந்­தைப்­ப­டுத்தல்’ கரு­வி­யாக மாறி­யி­ருக்­கி­றது) மோடியைத் தொடர்ந்து அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சர் மைக் பொம்­பியோ இலங்கை வரு­கிறார். அமெ­ரிக்­காவின் கோரிக்­கை­யையும் நெருக்­கு­த­லையும் எவ்­வ­ளவு காலத்­துக்கு இலங்­கை­யினால் மறுத்­து­நிற்க முடியும்? மூன்று மேலா­திக்க நாடுகள் மத்­தியில் இலங்கை இப்­போது சிக்­கி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, இலங்­கையின் பொரு­ளா­தாரம் ஒரு பக்­கத்தில் செய­லி­ழந்­து­போன அர­சாங்­கத்தின் கார­ண­மா­கவும், மறு­பக்­கத்தில் தொடரும் இன­வாத பதற்­ற­நிலை மற்றும் வன்­செ­யல்கள் கார­ண­மா­கவும் பார­தூ­ர­மான தாக்­கத்­துக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது. சீர்­கு­லைந்­து­போ­யி­ருக்கும் பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுக்க மத்­திய வங்கி ஆளுநர் என்­னதான் முயற்­சி­களை எடுத்­தாலும் – தேசத்தின் பெரும்­பாக பொரு­ளா­தா­ரத்தின் அத்­தி­பா­ரங்கள் கெட்­டி­யா­ன­வை­யாக இருப்­ப­தாக பிர­க­டனம் செய­்தாலும் மக்கள் அனு­ப­விக்­கின்ற கஷ்­டங்கள் வேறு­பட்ட கதை­யையே சொல்­கின்­றன. அன்­றாடம் அதி­க­ரித்­துக்­கொண்­டி­ருக்கும் வாழ்க்கைச் செலவு, குவியும் தனிப்­பட்ட கடன்கள் மற்றும் வறுமை அதி­க­ரிப்பு எல்­லாமே தற்­கொ­லைகள் அதி­க­ரிப்­ப­தற்கு வழி­வ­குக்­கின்­றன. இவை விரை­வாக வீழ்ச்­சி­ய­டைந்து கொண்­டி­ருக்கும் பொரு­ளா­தாரம் ஒன்றின் வெளிப்­பா­டுகள்.

இந்த பொரு­ளா­தார இடர்­நிலை இன­வாத வைர­ஸுக்கு பெரு­ம­ள­வுக்கு ஊட்டம் கொடுக்­கி­றது. ஒரு குடும்­பத்தில் தாரா­ள­மாக வளம் இருந்தால் மூத்த சகோ­தரன் கூடு­த­லான வளத்தை அப­க­ரிப்­ப­தா­கவும் தனக்கு சொற்­பமே கிடைப்­ப­தா­கவும் இளைய சகோ­தரன் முறை­யி­ட­மாட்டான். பகிர்­வ­தற்கு சொற்­பமே இருக்­கின்­ற­போது தான் தக­ராறு தொடங்­கு­கி­றது. பொரு­ளா­தா­ரத்தை முழு­மை­யாக எடுத்துப் பார்க்­கும்­போது இது தான் உண்­மை­நிலை.பொரு­ளா­தாரம் சுபிட்­ச­ம­டைந்து பன்­முக அர­சியல் சமூ­கத்தில் பகிர்ந்­து­கொள்­வ­தற்குத் தாரா­ள­மாக இருக்­கும்­போது மக்­க­ளினால் அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் அனு­ப­விக்­கக்­கூ­டி­ய­தாக இருப்­பதை வர­லாறு நிரூ­பித்து நிற்­கி­றது. பொரு­ளா­தார இடர்­நி­லை­யின்­போது மக்கள் கொந்­த­ளிப்­புக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது என்­ப­துடன் பன்­மு­கத்­தன்­மையும் ஆபத்­துக்­குள்­ளா­கி­றது.

கடந்த பல தசாப்­தங்­க­ளாக இலங்­கையின் பன்­மு­கத்­தன்­மையின் கதை இதுதான். இன­வாதம் பொரு­ளா­தா­ரத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­கி­றது. அந்தப் பல­வீனம் இன­வா­தத்தை போஷித்து வளர்க்­கி­றது. நாட்டின் பன்­முக சமூகம் உயிர்­வாழ வேண்­டு­மானால் இந்த தொடர்பு துண்­டிக்­கப்­ப­ட­வேண்டும்.

இந்த உண்­மையை முறை­யாகப் புரிந்­து­கொண்ட நாடு என்றால் அது சிங்­கப்­பூர்தான். அந்த நாடு லீ குவான் யூவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் அதன் தோற்­றத்தின் போதே இந்த விளக்­கத்தை பெற்­றி­ருந்­தது. அதன் கார­ணத்­தி­னால்தான் 1980களில் பேரி­ன­வா­தத்­தன்­மை­யான கோரிக்­கை­களை முன்­வைத்த சிங்­கப்­பூரின் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளான சீனர்­களைப் பார்த்து அந்த நாட்டை ஒரு இலங்­கை­யாக்கி விடா­தீர்கள் என்று லீ குவான் யூ எச்­ச­ரிக்கை செய்தார். அந்த நிலைப்­பாட்டை எடுத்­ததன் மூலம் அவர் தான் ஒரு அர­சி­யல்­வா­தி­யல்ல, அர­சி­யல்­ஞானி என்­பதை உல­கிற்கு நிரூ­பித்தார்.

1950களிலும் 1960களிலும் தொடங்கி (ஒரு­சிலர் விதி­வி­லக்­காக) சிங்­கள அர­சி­யல்­வா­திகள் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கும் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கும் இடை­யி­லான அபி­வி­ருத்தி இடை­வெ­ளிக்கு மற்­றைய சமூ­கத்­த­வர்­க­ளையே குற்­றஞ்­சாட்­டி­னார்கள். அந்த இடை­வெ­ளியை நிரப்­பு­வ­தற்கு கடு­மை­யான தீர்­மா­னங்­களை எடுக்­காமல் அவர்கள் இன­வாத அடிப்­ப­டையில் பார­பட்­ச­மான அணு­கு­மு­றை­க­ளையே கடைப்­பி­டித்­தார்கள். அப்­போது குற்­றச்­சாட்டு தமி­ழர்­க­ளுக்கு எதி­ராகத் திரும்­பி­யது. இப்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் திரும்­பி­யி­ருக்­கி­றது; அடுத்து யாருக்கு எதி­ராகத் திரும்பும்? இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள்?

தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் என்­பதே நாடு இன்று முகங்­கொ­டுக்­கின்ற அடிப்­படை பிரச்­சி­னை­யாகும். ‘மென்­மை­யான இன ஒதுக்கல்’ ஒன்றின் அறி­கு­றி­களை இலங்கை ஏற்­கெ­னவே காண்­பிக்கத் தொடங்­கி­விட்­டது; அது ‘வன்­மை­யான இன ஒதுக்­க­லாக’ பல­ம­டை­வ­தற்கு முன்­ன­தாக அர­சி­யல்­வா­திகள் நிதா­ன­மா­கவும் விவே­க­மா­கவும் செயற்­பட்டு, குணப்­ப­டுத்த முடி­யாத முறிவு நாட்­டுக்கு ஏற்­ப­டு­வதைத் தடுக்­க­வேண்டும்.

ஏனென்றால், வெளி­நாட்டு சக்­திகள் இந்த முறிவை பெரிதும் விரும்­பு­கின்­றன. ஏனென்றால், வறி­ய­வையும் பல­வீ­ன­மா­ன­வையும் உறு­திப்­பா­டற்­ற­வை­யு­மான நாடு­களை ஒன்­றுக்கு எதி­ராக ஒன்றை தொடர்ச்­சி­யாகப் பயன்­ப­டுத்­த­மு­டியும்; அதன் மூல­மாக உள்­நாட்டு அர­சியல் அதி­கார சக்­தி­களை தங்­க­ளது தாளத்­துக்­கேற்ப ஆட­வைக்­கலாம் என்று அவை நம்­பு­கின்­றன.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தற்­போ­தைய அலையைப் பொறுத்­த­வரை, முஸ்லிம் சமூ­கத்­திற்குள் சீர்­தி­ருத்­தங்­க­ளுக்­கான தேவை குறித்து நிறை­யவே சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால், எந்­த­வொரு சமூ­கமும் அதன் இருப்­புக்கு வெளி­யி­லி­ருந்து அச்­சு­றுத்­தலை எதிர்­நோக்­கும்­போது உள்­சீர்­தி­ருத்­தங்­களை முன்­னெ­டுக்­கப்­போ­வ­தில்லை. அந்தப் பின்­பு­லத்தில் நோக்­கு­கையில், சீர்­தி­ருத்­தங்­களை நியா­யப்­ப­டுத்­து­கி­ற­வர்கள் கூட தங்­க­ளது சொந்தச் சமூ­கத்­தினால் துரோ­கி­க­ளா­கவே கரு­தப்­ப­டுவர்.

நாட்டின் பொரு­ளா­தாரம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். அதற்கு சகல சமூ­கங்­க­ளி­னதும் ஒத்­து­ழைப்பு தேவை. பொரு­ளா­தாரம் என்­பது வெறு­மனே புள்­ளி­வி­ப­ரங்­க­ளு­டனும் வகை­மா­தி­ரி­க­ளு­டனும் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ர­மல்ல. அதை­வி­டவும் பெரி­யது. அது மக்­களைப் பற்­றி­யது. மக்கள் அச்­சத்­து­டனும் ஏக்­கத்­து­டனும் வாழும்­போது எந்த பொரு­ளா­தா­ரமும் செழிக்க முடி­யாது. மதத்தை அனுஷ்­டித்து கலா­சா­ரத்தை கொண்­டா­டு­வ­தற்கு மக்­களின் வயிறு நிரம்­ப­வேண்டும் என்­பதை மதத்­தையும் கலா­சா­ரத்­தையும் பேணிப் பாது­காக்­க­வேண்டும் என்ற அதீத பற்­று­தலை கொண்­ட­வர்கள் முதலில் விளங்­கிக்­கொள்ள வேண்டும். இவ்­வாறு கூறு­வதை பொருள் முதல்­வா­தத்தை போதிக்கும் ஒரு மடத்­த­ன­மான காரியம் என்று அர்த்­தப்­ப­டுத்தக் கூடாது.
மாறாக இதை மனி­த­வாழ்வு பற்­றிய பகுத்­த­றி­வு­பூர்­வ­மான நோக்­காகக் கரு­த­வேண்டும். இலங்கை அர­சி­யல்­வா­திகள் நாட்­டி­னதும் அதன் மக்­க­ளி­னதும் சிறந்த எதிர்­கா­லத்தைப் பற்றி உண்­மை­யான அக்­கறை கொண்­ட­வர்­க­ளாக இருந்தால், அவர்கள் தமிழ் மக்­க­ளு­டனும் முஸ்லிம் மக்­க­ளு­டனும் நல்­லி­ணக்க செயன்­மு­றையைத் துரி­தப்­ப­டுத்­த­வேண்டும்; வன்­மு­றையைக் கட்­ட­விழ்த்­து­வி­டு­கின்ற (சில காவி­யு­டைக்­கா­ரர்­க­ளையும் உள்­ள­டக்­கிய) கும்­பல்­க­ளி­ட­மி­ருந்து முஸ்­லிம்­களைப் பாது­காக்­க­வேண்டும்.

அனு­கூ­ல­மான சில சமிக்­ஞை­க­ளையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. மக்கள் மத்­தியில் பிளவை ஏற்­ப­டுத்­து­கின்ற போக்­கிற்கு எதி­ராக பல சிவில் உரிமை குழுக்கள் வெளிப்­ப­டை­யாகப் பேசு­வ­தற்கு முன்­வந்­தி­ருப்­பதை உதா­ர­ணத்­துக்கு கூறலாம்.

நிலை­வரம் மட்­டு­மீறிச் சென்று பயங்­க­ர­மான கட்­டத்தை எட்­டி­விட்­டதை செல்­வாக்­கு­மிக்க சில மதத்தலைவர்கள்கூட இப்போது உணர்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து எந்தளவு விரைவாக செயற்படுகிறார்களோ அந்தளவுக்கு அது நாட்டின் கௌரவம் மீட்கப்படுவதற்கு நல்லதாக இருக்கும்.

கலா­நிதி அமீர் அலி

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.