தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இதுவரையில் எந்தவொரு பள்ளிவாசலும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தினால் பதிவு செய்யப்படவில்லை.
அதனால் இதுதொடர்பாக முன்னாள் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பாராளுமன்ற தெரிவுக்ழுவில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை முடிந்தால் நிரூபித்துக் காட்டவேண்டும் என்று சவால் விடுக்கின்றேன் என்று முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஏப்ரல் 21 ஆம் திகதி சம்பவம் தொடர்பாகவும் அதற்குக் காரணமான விடயங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் கடந்த 11 ஆம் திகதி மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி சாட்சியமளித்திருந்தார். அவர் அங்கு என்னைப்பற்றியும் எனது அலுவலக பணியாளர்கள் தொடர்பாகவும் எனது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பாகவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
அவரின் சேற்றை கழுவிக்கொள்வதற்கான முயற்சியையே அவர் மேற்கொண்டிருந்தார் என்பதை கண்டுகொள்ள முடிந்தது. அத்துடன் அவர் அடிக்கடி இவ்வாறான குற்றச்சாட்டுகளை தெரிவித்து ஊடகங்களுக்கு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து தனது அரசியலை முன்னெடுக்கின்றார்.
எவ்வாறாயினும், தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இதுவரையில் எந்தவொரு பள்ளியோ, அமைப்போ முஸ்லிம் விவகார திணைக்களத்தினால் பதிவு செய்யப்படவில்லை என்பதனை கூறிக்கொள்கின்றேன். பள்ளிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டமூலத்திற்கமைய அமைக்கப்பட்ட வக்பு சபையின் பரிந்துரைகளுக்கமையவே நடக்கும். இது ஓர் உயர்ந்த சபையாகும். இந்த சபை எந்தவொரு பள்ளியையும் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களை ஆராய்ந்து அந்த சபையின் பரிந்துரை முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட பின்னர் அந்தப் பள்ளியை பதிவு செய்யும் சான்றிதழை அந்த திணைக்களம் விநியோகிக்கும். இந்நிலையில் அமைச்சருக்கோ அமைச்சின் பணியாளர்களுக்கோ எந்தவொரு அதிகாரிகளினாலோ வக்பு சபைக்கு எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாது.
இவ்வாறான நிலைமையில் அசாத்சாலி தெரிவுக்குழுவுக்கு முன் பள்ளியை பதிவு செய்வது தொடர்பாக என் மீதும் எனது சகோதரர் பாஹிம் மீதும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்ட கருத்தால் சிங்கள மக்கள் மத்தியில் என்னை பற்றியும் எனது சகோதரர் பற்றியும் தவறான நிலைப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் இது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும். இதேபோன்ற கருத்தை தயாசிறி ஜயசேகரவும் வெளியிட்டுள்ளார். எவ்வாறாயினும் கண்டி மாவட்டத்தில் தௌஹீத் என்ற பெயரில் ஒரு பள்ளியேனும் பதிவுசெய்யப்படவில்லை.
அசாத்சாலி என்ற நபர், நான் முஸ்லிம் விவகார அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலம் முதல் அடிக்கடி இவ்வாறாக என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன, அவர் ஹஜ் குழுவின் தலைவராகுவதற்கு முயற்சித்தார். இது குறித்த யோசனை எமக்கு வந்தது. அவர் தகுதியற்றவர் என்பதனால் அதனை நிராகரித்தேன். இது பிரதான காரணமாகும்.
அத்துடன் அவர் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட வந்தபோது அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தமையும் இதற்கு மற்றுமொரு காரணமாக இருக்கலாம்.
அஸாத் சாலி என்பவர் கடந்த அரசாங்க காலத்தில் ஹஜ் குழுவின் உறுப்பினராக செயற்பட்டு பாரிய நிதி மோசடி மேற்கொண்டவர். அதனால்தான் நான் அவரை ஹஜ் குழு உறுப்பினராக நியமிப்பதை நிராகரித்தேன். அதனால் நான் அல்லது எனது சகோதரர் பாஹிம் மற்றும் எனது அலுவலக உறுப்பினர்கள் யாராவது தெளஹீத் அமைப்புக்கோ வேறு அமைப்புகளில் உறுப்பினராக செயற்பட்டு அந்த அமைப்புகளுக்கு உதவிசெய்ததாக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்காமல் அதனை முடியுமானால் ஒப்புவிக்க வேண்டும் என்று நான் அவருக்கு சவால் விடுக்கின்றேன் என்றார்.
vidivelli