அரசாங்கத்திடம் நாங்கள் முன்வைத்த முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியுடனும், பிரதமரிடமும் கலந்துரையாடியிருக்கிறோம். தற்போது சுமுகநிலை ஏற்பட்டு வருகிறது. முஸ்லிம் சமூகம் தொடர்பான ஹஜ் சட்டமூலம், அரபுக்கல்லூரிகளுக்கான சட்டமூலம், வக்பு சட்டத்தில் திருத்தங்கள் என்பன நிலுவையிலுள்ளன. இவற்றை நிறைவு செய்வதைக் கருத்திற்கொண்டே மீண்டும் அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன் என அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் நேற்று தனது முன்னைய அமைச்சர் பதவியினை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்பு அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
முஸ்லிம் அமைச்சர்கள் நாம் கூட்டாகவே பதவிகளை இராஜினாமா செய்து கொண்டோம். வேறுபட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் நாம். தலைமைத்துவத்திற்கு நாம் கட்டுப்பட வேண்டியவர்களாக உள்ளோம். அத்தோடு நானும், கபீர்ஹசிமும் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட தொகுதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள். எமக்கு வாக்களித்த மக்களும் நாம் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டுமென அழுத்தங்களைப் பிரயோகித்தார்கள். முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் தாமதமின்றி விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு முஸ்லிம் ஒருவர் அமைச்சராக பதவி வகிக்காது விட்டால் பல சிக்கல்கள் ஏற்படுத்தப்படும். முஸ்லிம்களின் கடமைகளில் அசௌகரியங்கள் உருவாகும் எனக்கருதியே மீண்டும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டேன் என்றார்.
-Vidivelli