கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது இன்று கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
கோடீஸ்வரன், வியாழேந்திரன், கருணா ஆகியோரும் பங்கேற்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்தக் கோரி நேற்று மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்று வரும் இப்போராட்டத்தில் நேற்று திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
கடந்த திங்கட்கிழமை காலை தொடக்கம் கல்முனை சுபத்ரா ராமயா விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கல்முனை முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தன் குருக்கள் , கிறிஸ்தவ போதகர் அருட்தந்தை கிருபைராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அ.விஜயரெத்தினம் ஆகியோர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களது உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் தமிழ் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் உண்ணாவிரதத்தில் பங்கேற்று வருகின்றனர். அத்துடன் பெரும் திரளான இளைஞர்களும் பொது மக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக அங்கு கூடியுள்ளனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அமைந்துள்ள பிரதான வீதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. பொலிஸார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செவ்வாயன்று மாலை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரநாயக்க இங்கு வருகைதந்து உண்ணாவிரதம் மேற்கொள்கின்றவர்களுடன் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையில் நேற்று இப்போராட்டம் கடுமையாக வலுவடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதற்கிடையில் குறித்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனையில் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று கிழக்கு மாகாணத்தில் கடையடைப்பு செய்து ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறும் தமிழ் பற்றாளர்களை உண்ணாவிரதம் இடம்பெறும் இடத்தில் ஒன்றுகூடுமாறும் கிழக்கு மாகாண மாணவர் பேரவை எனும் அமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உரிய தீர்வு வழங்காவிடின் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும்: கருணா
கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்து உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்குமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை முன்னெடுத்து வரும் மதகுருமார்களினால் மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்குச் நேற்று சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த பிரச்சினை நீண்டகாலப் பிரச்சினையாக கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதன்போது தீர்வினை வழங்க அவர் முன்வந்தார். எனினும், பல முஸ்லிம் அரசியல் தலைவர்களே அதனை தடுத்து நிறுத்தினர்.
கல்முனை பிரதேசத்தை வேறுபடுத்தி இனத்துவேசத்தை இதற்குள் கொண்டுவந்து எங்களை பிரிக்க நினைப்பார்களானால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இதற்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லையெனில் நாட்டில் முற்றுமுழுதாக போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
-Vidivelli