அண்மையில் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துகொண்ட 9 முஸ்லிம் அமைச்சர்களில் இருவர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் தங்களது முன்னைய அமைச்சுப்பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசீம் தனது முன்னைய அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சி ஹாரிஸ்பத்துவ தொகுதி பிரதான அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ.ஹலீம் தனது முன்னைய அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இருவரும் நேற்றுக் காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஒன்றுகூடி இராஜினாமா செய்து கொண்ட அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் கலந்துரையாடினார்கள்.
கலந்துரையாடலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீமும், எம்.எச்.ஏ.ஹலீமும் மீண்டும் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு தங்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் உறுப்பினர்கள் கட்சி உயர் பீடத்தில் கலந்துரையாடி இறுதித்தீர்மானம் எட்டுவதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் கட்சித் தலைமைத்துவங்களின் தீர்மானத்துக்கு அமைவாக தீர்மானங்கள் மேற்கொள்வதாக தீர்மானமொன்றினை மேற்கொண்டனர்.
இதற்கமைவாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் தீர்மானத்தின்படி நேற்று இருவரும் தமது முன்னைய அமைச்சுப் பொறுப்புக்களைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியரதன தேரர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்கள் அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவரையும் பதவி விலக்கக்கோரி அல்லது அவர்களாகவே பதவிகளை இராஜினாமா செய்து கொள்ளுமாறு கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த 3 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் 12 மணிவரை அவரால் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. இல்லையேல் நாடு முழுவதும் திருவிழா காண வேண்டியேற்படும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரும் எச்சரித்த நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதி சில கோரிக்கைகளை முன்வைத்து 9 முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை கடந்த 3 ஆம் திகதி இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களில் 4 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 4 இராஜாங்க அமைச்சர்களும் ஒரு பிரதியமைச்சரும் அடங்குகின்றனர்.
தற்போது எஞ்சியுள்ள 2 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 4 இராஜாங்க அமைச்சர்களும் ஒரு பிரதியமைச்சரும் தங்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வது தொடர்பில் இதுவரை எதுவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.
-Vidivelli