எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான முஹம்மத் முர்ஸியின் திடீர் மரணம் உலகளாவிய ரீதியில் பலத்த கவலையைத் தோற்றுவித்துள்ளது.
எகிப்திய வரலாற்றில் ஜனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதி என வர்ணிக்கப்படும் முர்ஸி, இராணுவ சதிப் புரட்சியினால் பதவி கவிழ்க்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் விசாரணைகளின்போது நீதிமன்றினுள் வைத்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
சிறையிலிருந்த காலப்பகுதியில் அவர் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டிருந்தார். எனினும் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் அவரது குடும்பத்தினரும் மனித உரிமை அமைப்புகளும் குரலெழுப்பி வந்த நிலையிலேயே இந்த திடீர் மரணம் பதிவாகியுள்ளது.
அந்தவகையில் இதுவொரு ‘திட்டமிடப்பட்ட கொலை ‘ என முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தெரிவித்துள்ளது. முர்ஸியின் மரணத்திற்கு எகிப்தின் சர்வாதிகாரிகளே பொறுப்புக் கூற வேண்டும் என துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகான் தெரிவித்துள்ளார். முர்ஸியை சிறையில் அடைத்து அவரை தூக்கிலிடப் போவதாக மிரட்டிய எகிப்தின் சர்வாதிகாரிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றும் அர்துகான் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் முர்ஸியின் மரணத்திற்கு எகிப்திய அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனக் குற்றஞ்சாட்டியுள்ளன. முர்ஸியின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என மன்னிப்புச் சபை எகிப்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எகிப்தில் 30 வருட காலமாக சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு வந்த ஹு ஸ்னி முபாரக்கிற்கு எதிராக அந்நாட்டில் 2011 இல் மக்கள் எழுச்சி போராட்டம் வெடித்தது. 18 நாட்களாக தொடர்ந்த இப் போராட்டத்தை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதனையடுத்து 2012 இல் தேர்தல் நடாத்தப்பட்டது. இதில் போட்டியிட்டே ஜனநாயக முறையில் முர்ஸி தெரிவானார். எனினும் முர்ஸி பதவிக்கு வந்த ஒரு வருட காலத்தில் அவரது ஆட்சிக்கு எதிராகவும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சர்வதேச நாடுகளின் பின்புலத்துடன் போராட்டங்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து 2013 ஜூலையில் அந்நாட்டு இராணுவத் தளபதியாகவிருந்த அப்துல் பத்தாஹ் சிசியினால் , முர்ஸி பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதனையடுத்தே 2014 இல் சிசி எகிப்தின் ஜனாதிபதியானார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து வந்த நிலையில் பல வழக்குகளின் கீழ் மொத்தமாக சுமார் 45 வருட சிறைத் தண்டனை முர்ஸிக்கு விதிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை சிறையிலேயே காலத்தைக் கழித்து வந்தநிலையிலேயே அவர் நீதிமன்றில் வைத்து உயிரிழந்துள்ளார். ஈற்றில் அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவிருந்ததாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
உண்மையில் எகிப்தின் அரச ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே அவர் நீதிமன்றில் மாரடைப்பினால் மரணித்ததாக கூறப்படுகிறது. எனினும் அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. எப்படியிருப்பினும் எகிப்தின் இப்போதைய ஆட்சியாளர்களின் மனிதாபிமானமற்ற கொடூங்கோல் நடவடிக்கைகளின் விளைவாகவே அவர் மரணித்தார் என்பது வெளிப்படை உண்மையாகும். அந்த வகையில் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளதைப் போன்று முர்ஸியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அவரது மருத்துவ சிகிச்சை விடயத்தில் நீதிக்குப் புறம்பான நடந்து கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
-Vidivelli