2018 ஆம் ஆண்டு கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான இறுதிக்கட்ட நஷ்டஈடுகள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படவுள்ளன.
இதுவரை நஷ்டஈடு வழங்கப்படாதுள்ள 174 சொத்துகளுக்கு நஷ்ட ஈடாக 17 கோடி 5 இலட்சத்து 67 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது. குறிப்பிட்ட 174 சொத்துக்களுக்கான நஷ்டஈடுகளை வழங்குவதற்கு காசோலைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் இழப்பீட்டு பணியகத்தின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம். பதூர்தீன் தெரிவித்தார்.
குறிப்பிட்ட 174 சொத்துகளுக்கான நஷ்டஈடுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துகளுக்கும், வீடுகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும் தாமதியாது நஷ்டஈடுகளை வழங்குமாறு அப்போதைய அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் ரவூப்ஹக்கீம் ஆகியோர் பிரதமரும், புனர்வாழ்வு அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சருமான ரணில் விக்கிரம சிங்கவை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி, திகன பகுதிகளில் கடந்த வருடம் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு நஷ்டஈடு கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களில் 546 சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு புனர்வாழ்வு அமைச்சின் இழப்பீட்டு பணியகம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவற்றில் ஒரு இலட்சம் ரூபாவுக்கு உட்பட்ட நஷ்ட ஈடுகளையும் பெற்றுக் கொள்வதற்கு தகுதி பெற்றிருந்த 372 பேருக்கு ஏற்கனவே நஷ்டஈடு வழங்கப்பட்டு விட்டது.
372 சொத்துகளுக்கும் நஷ்டஈடாக 19 கோடி 48 இலட்ச்தது 45 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் இழப்பீட்டு பணியகத்தின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவித்தார்.
இறுதிக்கட்டமாக வழங்கப்படவுள்ள 174 சொத்துகளுக்குமான நஷ்டஈடுகளுடன் இந்தப்பணி நிறைவுறுவதாகவும், 174 சொத்துகளும் தலா ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இழப்பீடுகளாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததால் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அமைச்சரவையின் அங்கீகாரம் தாமதமாகியமையே நஷ்டஈடு வழங்குவதிலும் தாமதங்களை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.
-Vidivelli