கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை தொடர்புகொண்டு அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்ததுடன் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு இரு நாள் கால அவகாசம் வழங்குவதாகவும் இல்லையேல் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 17 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப் பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்முனை சுபத்திரா ராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீ.க.கு. சச்சிதானந்தசிவம் குருக்கள், பெரிய நீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார் அருட் தந்தை தங்கமணி கிருபைநாதன் ஆகியோரும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரத்தினம், சா.சந்திரசேகரம் ராஜன் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
-Vidivelli