ஹோட்டலில் அரேபியர்களுடன் ஹிஸ்புல்லாஹ்: சந்திப்பை ஏற்பாடு செய்தவர் சவூதியில் நாட்டுக்கு அழைத்து விசாரிக்க திட்டம்
4/21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற தினத்தன்று இரவு அரேபிய பிரஜைகள் மூவரை மட்டக்களப்பு – பாசிக்குடா ஹோட்டல் ஒன்றில் சந்தித்து அவர்களை நாட்டிலிருந்து அனுப்புவதற்கு முயற்சித்ததாக கிழக்கு முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வுக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் பிரதான ஒருங்கிணைப்பாளரை விசாரணை செய்ய சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
குறித்த தின இரவு சந்திப்பை தொடர்ந்து அந்த ஒருங்கிணைப்பாளரும் சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரை விசாரணைகளுக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அரேபிய பிரஜைகள் மூவர் பாசிக்குடா பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் சந்தித்தமை தொடர்பிலான சி.சி.ரி.வி. காணொலிகள் ஊடகங்களில் ஒலிபரப்பப்பட்டிருந்தன. தற்போது அந்த காணொலிகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட நாளில் அரேபிய பிரஜைகள் மூவரும் பதற்றமான நிலையில் ஹோட்டலை விட்டு வெளியேறும் பதிவுகள் அதில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள், என்ன நோக்கத்திற்காக இலங்கைக்கு வருகை தந்தார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் ஏற்கனவே 7 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த சனியன்று முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் 8 மணி நேர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் உள்ளிட்ட மேலதிக தகவல்களை ஹிஸ்புல்லாஹ் விசாரணை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார். அதன்படியே குறித்த ஒருங்கிணைப்பாளர் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர், குறித்த வீடியோவிலும் தோன்றுவதாகக் கூறப்படுகின்றது.
ஏற்கனவே இந்த ஒருங்கிணைப்பாளர் தொடர்பில் பிரத்தியேக விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது பாசிக்குடா ஹோட்டல் சம்பவம் தொடர்பிலும் அவரை விசாரிக்க பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli