- அபூ உமர்
இன்று வரை எமது நாட்டில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், சவால்களையும் ஆழமாக உற்று நோக்கினால் மூன்று விடயங்கள் தெளிவாகும்.
- எமது முஸ்லிம் சமூகம் கன கச்சிதமாக துண்டாடப்பட்டிருக்கிறது.
- எமக்கென்று தூரநோக்கு சிந்தனையும், தூய்மையும், ஆளுமையும் கொண்ட ஒரு தேசியத் தலைமையில்லை.
- எமக்கும், பிற மதத்தவர்களுக்குமிடையிலான ஆழமான புரிந்துணர்வும், உறவும் போதிய அளவு இல்லை. அதை கட்டியெழுப்புவதற்கான தேசிய பொறிமுறைகள் பரந்த அளவில் உருவாக்கப்படவும் இல்லை.
மேற்படி விடயங்கள் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணத்துக்குப் பிற்பட்ட காலத்தில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு தீவிரவாத சமூகமாக இன்று முத்திரை குத்தப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றோம்.
ஆரம்ப காலங்களில் எமது அரசியல்வாதிகள், வியாபாரிகள், புத்திஜீவிகள் ஊர் மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் மேற்படி 3 விடயங்களிலும் கவனம் செலுத்தி எமது சமூகத்தின் அமைதியான இருப்புக்கும், சுதந்திரத்திற்கும் பெரும்பங்காற்றினார்கள். ஆனால், இன்று தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்காக உள்ளூர் மற்றும் தேசிய மட்ட ஒற்றுமை, தலைமைத்துவம், சமாதானம், சகவாழ்வு அனைத்தையும் இப்போதிருக்கும் எமது அரசியல்வாதிகள் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கி வைத்திருக்கின்றார்கள்.
எனவே, இவர்களிடம் எமது சமூகம் சார்பில் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். அதற்காக அவர்கள் அனைத்தையும் ஒரே மேசைக்கு அழைக்க என்னிடம் அதிகாரமுமில்லை அவ்வாறு சமூகத்தின் பேரால் அழைக்க அவர்கள் ஒன்றாக வந்தமரப்போவதும் இல்லை.
ஆகவே! கொஞ்சம் வித்தியாசமாக ‘விடிவெள்ளி’ பத்திரிகையில் ஒரு மேசையை வரைந்து அதனைச் சுற்றி அவர்கள் எல்லோரும் வந்து அமர்ந்திருக்கின்றார்கள் எனக்கொண்டு (அவர்களின் போட்டோக்களையெல்லாம் சுற்றி வைத்து) வாசகர்களாகிய (மக்களாகிய) உங்கள் முன்னால் எனது வேண்டுகோளை முன் வைக்கின்றேன்.
மதிப்பிற்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களே!
நீங்கள் உங்கள் பரம்பரைக்கும் சம்பாதித்துவிட்டீர்கள், குளிரூட்டப்பட்ட வாழ்க்கை, உங்கள் பிள்ளைகள் மிகச்சிறந்த பாடசாலையில் படிக்கிறார்கள், 5 நட்சத்திர ஹோட்டல்களில் உங்கள் வீட்டு திருமணங்கள் நடந்தேறுகின்றன. உங்கள் மனைவியருக்கு ஹிஜாப் பிரச்சினையில்லை. ஏனெனில் அவர்கள் பஸ்ஸில் பயணிப்பதில்லை, ஓடும் வாகனங்கள் முதல் பேசும் தொலைபேசி கட்டணம் வரை அனைத்தும் இலவசம். உங்கள் வீட்டை, வாகனத்தை யாரும் பரிசோதிக்கப் போவதும் இல்லை. மொத்தத்தில் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டீர்கள்.
ஆனால் உங்கள் சொகுசு வாழ்க்கைக்கு மாடாய் உழைத்து மறைமுக வரி, நேர்முக வரி என செலுத்திக்கொண்டு பிரசார மேடைகளில் உங்களின் ஏமாற்று வார்த்தைகளை நம்பி வோட்டும் போட்ட நாம் இன்று இந்நாட்டில் நாதியற்று, பயந்துபோய் கற்பிழந்த பெண் போல் அநியாயமாய் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு நிற்கின்றோம். நீங்களும் சாது கண்டியிலிருந்து எறிந்த பந்தில் கொழும்பில் ‘ஆல் அவுட்’ ஆகி நிற்கிறீர்கள்.
அளுத்கம, திகன, குருநாகல் என்று தொடர்ந்து 3 முறை பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் அநியாயமாக அடிவாங்கினோம். நீங்கள் முன்கூட்டி பாதுகாக்கவும் இல்லை. நடந்து கொண்டிருக்கும் போது நிறுத்த வரவும் இல்லை, அடிவாங்கி முடிந்த பின் எங்களின் அன்றாட வாழ்வாதாரம் எப்படிப் போகிறது என்பது பற்றி உங்களுக்கு கவலையும் இல்லை. நீங்கள் இலங்கை முஸ்லிம்களின் வருங்கால சமூக, பொருளாதார, கல்வி, சமாதான முன்னேற்ற செயற்பாடுகளுக்கு சரி வரமாட்டீர்கள் என்பது நிறுவப்பட்ட உண்மை.
ஏனெனில், ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்பட்டு வேலை செய்ய மாட்டீர்கள். ஒன்றுகூடி மசூரா மூலமாகவும் (உங்கள் பதவிகளுக்கு பிரச்சினை வந்தால் தவிர) தீர்வு காணமாட்டீர்கள். இஸ்லாமிய அரசியல் விழுமியங்களை பின்பற்றமாட்டீர்கள் (உண்மை பேசுதல், வாக்குறுதிகளை பாதுகாத்தல், பொது மக்களின் நிதியை மோசடி செய்யாமல் பாதுகாத்தல், ஒற்றுமையைப் பலப்படுத்தல்)
பிற சமூகங்களுடன் இன நல்லுறவை கட்டியெழுப்பவோ, அவர்களுடன் கலந்துரையாடவோ மாட்டீர்கள்.
உங்களை விட பொருத்தமானவர் சமூகத்தை தலைமைதாங்க முன்வந்தால் அவரை அங்கீகரிக்காமல் மட்டந்தட்டி தூரமாக்கிவிடுவீர்கள்.
ஆக உங்கள் வருமானம், பதவி, கௌரவம், கட்சி போதை, நான் எனும் அகங்காரம் (ஈகோ) என்பவற்றை விட்டுக்கொடுக்கமாட்டீர்கள்.
இப்படியான தலைமைத்துவம் முஸ்லிம்களை இன்னும் இன்னும் அழிவுக்கே இட்டுச்செல்லும், அல்லாஹ்வின் கோபப்பார்வையை அதிகரிக்கும்.
சகோதரர்களே! அபிவிருத்தி அரசியல் என்றும், ஜனாதிபதி மாறினாலும், பிரதமர் மாறினாலும், ஆட்சி மாறினாலும் நாங்கள் எப்போதும் மந்திரிதான் என்ற தேர்தல்கால விளையாட்டு இன்னும் மக்களிடம் செல்லுபடியாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். மூன்று முறை அடிவாங்கி நான்காவது முறையும் உங்களை நம்பி அடிவாங்கினால் இலங்கை முஸ்லிம் சமூகத்தினை போல் குட்டக் குட்ட குனியும் சமூகம் எதுவும் இருக்காது.
“சரி தம்பி எங்கள விட்டா வேறு யார் தம்பி இருக்காங்க என்று நீங்கள் கேட்கலாம்” . இருக்கிறது. ஒரு முன்மாதிரி இருக்கிறது. அதுதான் ‘‘சாய்ந்தமருது மக்கள்” எனும் முதுகெலும்புள்ள முன்மாதிரியான கூட்டம் தெரிவு செய்த (பள்ளிவாசலூடான மசூராக் கட்டமைப்பு கொண்ட) தலைமைத்துவம். அல்லாஹ்வின் உதவியால் இன்று அந்த தலைமைத்துவத்தின் கீழ் உள்ள மக்கள் செய்த முன்மாதிரி தேர்தல் வேலைத்திட்டங்கலும் அதன் பின்னால் கிடைத்த வெற்றியும் மேலும் அண்மையில் நடந்த தீவிரவாதிகளின் இறுதிக்கட்ட தாக்குதலை தடுத்து நிறுத்தியதும் இலங்கையில் முஸ்லிம்களின் இறுதி நேர மானத்தையாவது காப்பாற்றியது.
இதுபோல் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களும் மாறினால் இந்நாட்டுக்கே முன்மாதிரியானவர்களாக ஒற்றுமையுடன் ஒரு தலைமைக்கு கீழாக இந்நாட்டில் சமாதானத்தையும், சகவாழ்வையும் முன்னெடுக்கக்கூடிய சக்தியாக எம்மை மீள் நிறுத்த முடியும். அத்தோடு எமக்கானதொரு புதிய அரசியல் வரலாற்றை மீள எழுத முடியும். அதுவே எமது இஸ்லாம் மார்க்கம் சொன்ன வழி முறையாகவும் இருக்கும்.
எனவே அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் அன்பாக கேற்கின்றோம்… மீண்டும் எம்மை தேர்தல் காலங்களில் ஊர் ஊராக பிரிக்கவராதீர்கள், மேடைகளில் நச்சு வார்த்தைகளால் எங்களது உள்ளத்தில் பிளவை உண்டாக்காதீர்கள். எங்களுக்கு நீங்கள் சேவை செய்து களைத்தது போதும், உழைத்தது போதும். எங்களது வரிப்பணத்தில் ஓய்வூதியம் தருகிறோம், சற்று ஓய்வு பெற்றுச் செல்லுங்களேன்! எங்கள் பிள்ளைகளாவது நிம்மதியாக இந்நாட்டில் வாழவிடுங்களேன்!
“முஃமீன்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்” (3:200)
-விடிவெள்ளி