- சிங்களத்தில்: கே.வீ. பண்டார – மாவனெல்லை
- தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் குழுவினரின் முதலாவது துப்பாக்கி குண்டுக்கு இலக்கானவர் முஹம்மது ராஸிக் முஹம்மது தஸ்லீம் என்பவர்தான். 37 வயதுடைய இவர் மாவனெல்லை தனாகமையைச் சேர்ந்தவர். தலையில் புகுந்த துப்பாக்கி குண்டினால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது உடல்தேறி வருகிறார். இந்நிலையில் ‘மவ்பிம’ வார இதழ் இவரை நேர்கண்டு எழுதிய தகவல்கள் தமிழாக்கம் செய்து தரப்படுகிறது.
மத கருத்துவாதம் ஒன்றை முன்வைத்து இஸ்லாமிய மக்கள் மத்தியில் உருவான தீவிரவாதக் குழுவினர் மாவனெல்லையைச் சூழவுள்ள இடங்களில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலைகளைச் சிதைப்பதன் ஊடாக தம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தனர். இதன் விளைவாக அப்பகுதியெங்கும் இன முறுகலுக்கான சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில் இக்குற்றச் செயலில் ஈடுபடுவோர் இனங்காணப்பட்டு குறுகிய காலத்திலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விடயத்தில் தன்னையே அர்ப்பணிப்புச்செய்து செயற்பட்ட முன்னணி முஸ்லிம் வீரராகத் திகழ்பவர்தான் தஸ்லீம்.
எங்களுக்குள் இருந்து இயங்கிக்கொண்டிருக்கும் இவர்கள் மிகவும் பாவகாரக் குழுவினராவர். தீவிரவாத சிந்தனையுள்ள இவர்கள் இஸ்லாமியர்கள் அல்லர் என்று தஸ்லீம் பாதுகாப்புத் தரப்பிடமும் மற்றும் அரசியல்வாதிகள், அயலக சிங்களவர் களிடமும் எடுத்துரைத்தார்.
இந்த நாசகாரக் கும்பலை ஒழித்துக்கட்டுவதில் தஸ்லீம் விடா முயற்சியோடு ஈடுபட்டு வந்தார். அதனால் புத்தளம் வனாத்தவில்லுவிலுள்ள தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் உள்ளிட்ட வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களைக் கண்டுபிடிப்பதில் பாதுகாப்புத் தரப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி நான்கு நாட்கள் அர்ப்பணிப்புச் செய்துள்ளார்.
இஸ்லாத்தை முன்னிலைப்படுத்தி தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவோருக்கு எதிராக இயங்கும் தஸ்லீம் தீவிரவாதிகளுக்குப் பெரும் தடைக் கல்லாகவே காணப்பட்டார். இதனால் தீவிரவாதத் தலைவரின் பணிப்புரைக்கமைய அக்குழுவைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு கடந்த மார்ச் 9 ஆம் திகதி அதிகாலை தஸ்லீமின் தலை இலக்கானது.
தலையின் பின்புறம் புகுந்த சன்னம் முன்பக்க நெற்றியின் மேல்பகுதியால் வெளிவந்துள்ளது. உடனடியாக மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் காயம் மிகவும் பாரதூரமாக இருந்ததால் கண்டி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்.
இச் சம்பவம் குறித்து தஸ்லீமின் 28 வயதுடைய மனைவி முஹம்மது சாஹித் பாத்திமா ஜன்னத் கூறியதாவது;
தஸ்லீம் எனது கணவர். கடந்த மார்ச் 9 ஆம் திகதி காலை 4.30 மணிக்கே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. நானும் கணவரும் அவரது தாயும் எனது மூன்று பிள்ளைகளுமே அப்போது வீட்டிலிருந்தோம். எமது அறையின் கட்டிலில் ஜன்னலருகே எனது கணவர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரக் கோளாறு ஏற்பட்டது போன்றதொரு சத்தம் கேட்டது. கைத்தொலைபேசியின் சாஜர் வெடித்ததோ என்று எண்ணினேன். அது என்ன சத்தம் என்று அருகே இருந்த கணவனிடம் வினவினேன். அவரிடமிருந்து பதிலில்லை. அப்போது வெடிமருந்தின் நொடி என் நாசியைத் துளைத்தது. கணவனை உற்று நோக்கினேன். அவரது தலையிலிருந்து இரத்தம் பீறிட்டு வருவதை அவதானித்தேன். அவர் மயக்கமுற்று கட்டிலிலிருந்து விழப்போவதை உணர்ந்தேன். அவர் இறந்து விட்டதாகவே நினைத்தேன். உடனே கட்டிலில் அவரைப் பாதுகாப்பாகக் கிடத்திவிட்டு வீட்டின் பின்பக்கமாகப் போய்ப்பார்த்தேன். மூடப்பட்டிருந்த பின் கதவின் ஒரு பாதி திறந்திருக்கக் கண்டேன். வெளியே சென்று எனது மதினியைக் கூவி அழைதேன். அப்போது பின் பக்கமாகவிருந்து இருவர் ஓடுவதை இருளுக்குள் மத்தியில் நோட்டமிட்டேன். எமது பின் கதவின் உடைந்த தாழ்ப்பாவைப் பயன்படுத்தியே துப்பாக்கிதாரிகள் வந்திருப்பதை உணர்ந்து கொண்டேன்.
இலக்கம் டீ 36/2, தனாகம, மாவனெல்லை என்ற விலாசத்தில் வசிக்கும் மொஹமட் ராஸிக் மொஹமட் தஸ்லீம் ஒரு வர்த்தகர். பாத்திமா ஜன்னத் என்பவரை மணமுடித்து இத்தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள். இவர்கள் 9, 6, 1 ½ வயதுடையவர்கள்.
தஸ்லீமின் 62 வயதுடைய தாய் மொஹமட் சரீப் உம்முலய்மா உம்மா வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கூறியதாவது;
எனது மகன் 9 ஆம் தரத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது எமது குடும்பம் சமுர்த்தி நிதி உதவி பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது இப்பகுதியில் எம்மை விடவும் வறிய மக்கள் இருக்கிறார்கள். எமது சமுர்த்தி நிதியை அவர்கள் பெறும் வாய்ப்பாக நாம் திரும்பிக்கொடுத்து விடுவோம் என்று கூறி அதற்கான கடிதம் ஒன்றையும் எனது மகன் எழுதிக்கொடுத்து சமுர்த்தியிலிருந்து விடுவித்துக் கொண்டார். அதற்கீடாக பாடசாலையிலிருந்து வந்து மாலையில் எமது உறவினர் ஒருவரின் கடையில் அமர்ந்து குடும்ப செலவைச் சமாளித்து வந்தார். பள்ளிப் பருவத்திலிருந்தே நல்ல பிள்ளையாகவே வளர்ந்து வந்தார். நண்பர்களுக்கும் உதவி வந்தார்.
எம்மைச் சூழ சிங்களக் கிராமங்கள் உள்ளன. அதனால் சிங்கள மக்களுடன் எமது மகன் மிகவும் அன்னியோன்யமாகப் பழகி வந்தார். அவர்களின் பண்டிகை நாட்களில் மட்டுமல்லாது இதர நாட்களிலும் அவர்களது இல்லங்களுக்குச் சென்று நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வார்.
சிங்கள அயல் வீடுகளில் மரணம் சம்பவித்தால் அவ்வீடுகளுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும்படி மகன் என்னைக் கேட்பார். அவ்வாறு நடந்து கொள்வோம். இவ்வாறு குணவியல்புள்ள மகன் பாடசாலைக் கல்வியை விட்ட பின்னர் ஊர் இளைஞர்களுடன் இணைந்து சமூக சேவைகளில் ஈடுபட்டார் என்று அவரது தாய் கூறினார்.
தஸ்லீமின் மனைவி பாத்திமா மீண்டும் கூறியதாவது;
எனது கணவரால் சுயநினைவோடு கதைக்க முடியுமான போதிலும் அவரது இடது பக்க மண்டையூடாக குண்டு துளைத்துள்ளதால் அவரது வலது பக்க உடற்பகுதியே செயலிழந்துள்ளது. அதுவும் கூடிய சீக்கிரம் சீராகும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
முன்னர் சிகிச்சை பெற்றுவந்த வைத்தியசாலையிலிருந்து தற்போது பிறிதொரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்துள்ளனர். காரணம் அவரது உளவியல் நிலையைச் சீராக்கவும் நரம்பியல் தொடர்பான சிகிச்சைகளை வழங்கவுமே. இந்த வைத்திய விடுதியில் சிகிச்சைகள் நடக்கின்றன. அவரது அன்றாட பணிகளைச் செய்வதற்கு எமது குடும்ப உறுப்பினர் ஒருவர் அருகே அமர்த்தப்பட்டுள்ளார். அத்துடன் இவரது பாதுகாப்புக்காக இரு பொலிஸாரும் கடமையில் உள்ளனர்.
திகன பிரதேசத்தைச் சேர்ந்த கண்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பந்துல என்ற சிங்கள பொலிஸ் அதிகாரியொருவரே இப்போது அவரது கடமைகளுக்கு மத்தியில் எனது கணவரின் நிவாரணத்திலும் பெரிதும் உதவி வருகிறார். தனது உடன் பிறப்பைப்போல நின்று உளவியல் ரீதியாக நிவாரண உதவிகள் செய்து வருகிறார். அதற்காக இப்போதும் அவரை நினைவுகூர்ந்து எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். எனது கணவரைப் பார்க்கச்செல்லும் உறவினர்களுடனும் இப்பொலிஸ் அதிகாரி மிகவும் அன்புடன் கதைப்பார். அவரது குடும்பத்தினரும் வைத்திய விடுதிக்கு வந்து கணவரின் சுகம் விசாரித்து ஆறுதல் கூறுவர். இத்தகையோராலும் எனது கணவருக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியர்களின் அர்ப்பணிப்பாலும் எனது கணவர் நன்கு தேறி வருகிறார். எனவே இவர்கள் அனைவருக்கும் புண்ணியம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் என்றார் அவர் மனைவி.
அதன்போது தஸ்லீமின் தாய் மீண்டும் பேச ஆரம்பித்தார்.
எனது மகன் பெரும்பாலும் சிங்கள ஏழைச் சிறார்களுக்கு உதவி வந்துள்ளார். சிங்கள சமயப் பாடசாலைக்கும் உதவிகளைச் செய்துள்ளார். அரனாயக்க சாமசரகந்த மலை சரிந்து அனர்த்தம் ஏற்பட்டபோது மலையடிவாரத்திலிருந்த தெபெத்கம, வியன்எளிய விகாரையின் விகாராதிபதியைச் சந்தித்து அங்குள்ள மக்களுக்கும் குறித்த விகாரைக்கும் பல வழிகளிலும் உதவியுள்ளார். முஸ்லிம் தனவந்தர்களின் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் எனது மகன் அபரிமிதப் பங்களிப்புச் செய்துள்ளார். இதேபோன்று சுனாமியின் போதும் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நாட்கள் தங்கியிருந்து கொண்டு உதவிகள் புரிவதில் பங்களித்துள்ளார். மகனின் பொதுப்பணிகளால் அவரது தாய் என்ற வகையில் மக்கள் என்னையும் அன்புடனும், மரியாதையுடனும் நோக்கவே செய்தனர். அவர் செய்த புண்ணியங்களால் தான் அவர் இந்தளவாவது காப்பாற்றப்பட்டு உயிருடன் இருக்கிறார்.
முஸ்லிம் வாலிபர் குழுவொன்று தவறாகச் செயற்பட்டபோது அவர்களை எதிர்த்து எனது மகன் செயற்பட்டார். பொலிஸ், இராணுவத்திற்குக் காட்டிக்கொடுத்து இவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற மகனின் பாதை ஆபத்தானதென்று தெரிந்தும் நான் அதனைத் தடுத்து நிறுத்தவில்லை.
தஸ்லீமின் ஆப்த நண்பனாகவிருந்த மும்தாஸ் நண்பனின் பண்புகள் குறித்து விபரிக்கையில், தஸ்லீமின் ஆலோசனைகளின் படியே நாம் செயற்பட்டோம். சமூகப் பணி அவரது உடன் பிறந்த குணமாகவேயிருந்தது. அவரிடம் சிறியரக லொறியொன்றிருந்தது. அது பெரும்பாலும் சமூகப் பணிகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தது. மரணித்தோரின் பூதவுடல்களை எடுத்துச்செல்வதில் அவ்வண்டி பெரிதும் பயன்பட்டுள்ளது. இதுவரை சுமார் 100 இற்கும் மேற்பட்ட பூதவுடல்கள் தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் இவ்வண்டியின் சேவை சமூகத்திற்கு ஊன்று கோலாக அமைந்துள்ளது. இன, மதம், பாராமலே சேவைகள் இடம்பெற்றன.
தனாகமையைச் சூழவுள்ள பகுதி சிங்கள, முஸ்லிம் வாலிபர்களின் மதுப்பாவனையை விடுவிப்பதிலும் தஸ்லீம் அளப்பரிய அர்ப்பணிப்புச் செய்துள்ளார். இவர்களைத் திசை திருப்ப விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதிலும் இவர் அரும்பாடு பட்டுள்ளார். இவற்றுக்குப் புறம்பாக எத்தகைய அனர்த்தங்களில் சிக்கிய உயிர்களையும் தன்னுயிரைத் துச்சமாக மதித்துக் காப்பாற்றுவதிலும் பின் நிற்கமாட்டார்.
பள்ளியின் நிர்வாக சபைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் இணைப்புச் செயலாளர் போன்ற பதவிகளை அலங்கரித்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனத்தையும் சொந்தத் தேவைக்கும் பயன்படுத்தமாட்டார். அதில் ஊருக்கும் பயணிக்கமாட்டார். அப்படிப்பட்ட பண்பாளர்.
அரசியலில் இறங்கி சமூக சேவையில் முழு மூச்சாக ஈடுபடவும் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். தனது பழைய எளிமையான வீட்டிலே தான் வசித்து வருகிறார். இவரின் பாதிப்பால் இவரது குடும்பம் இன்று அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகள் பலரும் இவர் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். வியன் எலிய விகாராதிபதி தஸ்லீமைப் பார்க்கச் சென்று பிரித் நூல் கட்டி சமய கிரியைகளைச் செய்துள்ளார். பிரதேச பௌத்த மக்கள் தஸ்லீமுக்கு சுகம்வேண்டி விகாரையில் போதிபூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படிப் பல சமய வழிபாடுகள் கூட தஸ்லீமுக்காக இடம்பெற்றுள்ளன.
தனாகமையைச் சேர்ந்த தயானந்த, இந்திரானி உள்ளிட்ட சிங்கள பௌத்தர்கள் பலரும் தஸ்லீமின் நற்பண்புகள் குறித்தே கருத்துக் கூறியுள்ளனர். தஸ்லீம் முஸ்லிம்களை விட பௌத்தர்களுக்கே பேருதவி செய்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளனர். தஸ்லீமின் பணிகள் குணவியல்புகள் எழுதி முடிக்க இயலாது.
-Vidivelli