முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் வன்முறைகளை வன்மையாக கண்டிக்கிறோம்
உலக தமிழர் பேரவை அறிக்கை
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு எதிராக சில சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வெறுப்புணர்வுமிக்க செயற்பாடுகள் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன், இத்தகைய ஆபத்தான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்திருக்கிறது.இதுவிடயத்தில் உலக தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து சிங்கள பௌத்த சமூகத்திலுள்ள பேரினவாதிகளின் அடுத்த பிரதான இலக்காக முஸ்லிம் சமூகம் மாறியதுடன், பெரும்பான்மையின சமூகத்தின் பலம் பொருந்திய பிரிவினரால் இந்நிலை போஷிக்கப்பட்டது.
துல்லியமாகத் திட்டமிடப்பட்டு கடந்த 2014 ஜூன் மாதம் களுத்துறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், கடந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அம்பாறை, கண்டி நகரங்களில் இடம்பெற்ற நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கலவரம் மற்றும் கடந்த மே மாதம் வடமேல் மாகாணத்தில் பல்வேறு நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பவற்றை குறிப்பிட்டுக் கூறமுடியும்.
இந்தத் தாக்குதல்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதுடன், எரியூட்டப்பட்டன. மேலும் பலர் இடம்பெயரும் நிலையேற்பட்டது.
இவற்றில் பெரும்பாலான தாக்குதல்கள் பௌத்த பிக்குகளின் வழிகாட்டலில், பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டிருக்கும் போது இடம்பெற்ற தாக்குதல்களாகும். அண்மைய வருடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு திட்டமிட்ட முறையில் கட்டியெழுப்பப்பட்டு வந்திருப்பதுடன், அச்சமூகம் பல்வேறு வழிமுறைகளிலும் வன்முறைகளுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.
இவற்றின் உச்சகட்டமாக உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்பிருப்பதாகக் குறிப்பிட்டு முஸ்லிம் அமைச்சரையும், ஆளுநர்களையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரதன தேரரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் அமைந்திருந்தது.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொண்டு, அதனுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உலகத் தமிழர் பேரவை முழுமையான ஆதரவை வழங்கும்.
இவ்வாறான ஆபத்தான போக்கைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கைது செய்தல் என்பவற்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இலங்கையின் அரசியல்வாதிகள் தவறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் சிறுபான்மையின சமூகத்தவரும், சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகளும் மீண்டும் தமது பாதுகாப்பு, உரிமைகள் என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகின்றது.
அதேபோன்று பெரும்பான்மையின சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்கள் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் சமத்துவத்துவத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். அதுமாத்திரமன்றி இலங்கை மீண்டுமொரு இன,மதம் சார்ந்த பிரிவினை மற்றும் வன்முறைக்குள் தள்ளப்படாதிருப்பதனை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பை சர்வதேச சமூகமும் சரியாகச் செய்ய வேண்டும்.
-Vidivelli