‘அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் பதவி வகிக்காமையின் பாதகம் இப்போது உணரப்படுகிறது. எதிர்காலத்தில் அமைச்சுப் பதவிகளிலிருந்தும் முஸ்லிம்கள் ஒதுக்கப்படும் நிலை ஏற்படலாம். இவ்வாறான நிலையில் பதவிகளை இராஜினாமா செய்து கொண்ட முன்னாள் முஸ்லிம் அமைச்சர்களாகிய நாம் தீர்மானமொன்றினை மேற்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளோம். அதற்காக இறுதித் தீர்மானம் ஒன்றினை எட்டுவதற்காக பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களும் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடி ஆலோசிக்கவுள்ளோம்’ என முன்னாள் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ. ஹலீம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். பதவி விலகியுள்ள முஸ்லிம் அமைச்சர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘சமூகத்தின் பாதுகாப்பு கருதியும் நலன்கருதியும் குறுகிய காலத்தில் நாம் கலந்துபேசி கூட்டாகவே அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தோம். இப்போது கூட்டாகவே நாம் அடுத்த கட்ட தீர்மானத்தையும் மேற்கொள்ளவேண்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் எங்களுக்கு பெரும்பான்மை யினத்தவர்களின் வாக்குகள் அவசியப்படுகிறது. மகாநாயக்க தேரர்கள் நாங்கள் மீண்டும் எங்கள் பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். கட்சியின் தலைமைப் பீடமும் எங்களை மீண்டும் பதவியில் அமருமாறு வலியுறுத்தி வருகிறது.
நாங்கள் கூட்டாகவே இராஜினாமா செய்தோம். எனவே கூட்டாகவே தீர்மானங்களையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அமைச்சுப் பதவிகளில் முஸ்லிம்கள் இல்லாதிருந்தால் முஸ்லிம் சமூகத்துக்கே பாதிப்புகள் ஏற்படும். இந்நிலைமை தொடர்வது ஆபத்தானதாகும்.
சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய ஆபத்துகளை ஏற்படுத்தவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தற்போது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். தமிழ் சமூகம் சிங்கள சமூகத்துடன் ஒன்று சேர வேண்டுமெனவும் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படவேண்டும் எனவும் கூறி வருகிறார்.
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தொடர்பான விசாரணைகள் நடைபெறவுள்ளன. விசாரணைகள் நடைபெறும் நிலையில் எந்தவோர் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாத முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகி தொடர்ந்தும் செயலற்று இருக்கக்கூடாது. அவர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. மகாநாயக்க தேரர்களும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் உலமா சபையும் மௌனியாக இருக்கிறது.
எனவே நாங்கள் விரைவில் தீர்மானமொன்றினை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
-Vidivelli