அஸாத்சாலி, றிஸ்வி முப்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்புகிறோம்
தெரிவுக்குழுவிடம் வாய்ப்பு கோருகிறது எஸ்.எல்.ரி.ஜே
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சிமளிப்பதற்கு பிரதிசபாநாயகரும் தெரிவுக்குழுவின் தலைவருமான ஆனந்த குமாரசிரியிடம் அனுமதி கோரியுள்ளது. இவ்வாறு அனுமதி கோரி ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஏ.கே.ஹிசாம் தெரிவுக்குழுவின் தலைவரான ஆனந்த குமாரசிரிக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடாத்திவரும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலியும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தியும் தவறான தகவல்களை வழங்கியுள்ளார்கள். உண்மைக்கு மாற்றமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். அத்தோடு எமது நட்புறவு அமைப்பான தமிழ்நாடு தெளஹீத் ஜமாஅத் தொடர்பிலும் தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் இருவரதும் குற்றச்சாட்டுகளை நாம் முழுமையாக மறுக்கிறோம்.
அசாத் சாலியும், ரிஸ்வி முப்தியும் முன்வைத்துள்ள பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்குவதற்காகவும், அவை ஆதார பூர்வமற்றவை என்பதை நிரூபிப்பதற்காகவும் எமது அமைப்பின் பிரதிநிதிகளுக்கு தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வேண்டிக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli