ஹலால் சான்றுறுதி கவுன்ஸில் ஹலால் சான்றிதழ்கள் வழங்குவதன் மூலம் முஸ்லிமல்லாத நுகர்வோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் வருமானம் பள்ளிவாசல்கள் நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படுவதுடன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது என ஓமல்பே சோபித தேரர் முறைப்பாடு செய்துள்ளதை உலமா சபை வன்மையாகக் கண்டிப்பதுடன் இது தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன விசாரணைக்குழுவொன்றினை நியமித்து நாட்டு மக்களுக்கு உண்மை நிலையினைத் தெளிவுபடுத்தவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவிச் செயலாளர் எம்.எஸ்.எம். தாஸிம் மௌலவி கருத்து தெரிவிக்கையில்;
மீண்டும் தற்போது ஹலால் சான்றிதழுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. சுயாதீன குழுவொன்றினாலே தற்போது ஹலால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு உலமா சபை வழிகாட்டல்களை வழங்கிவருகிறது.
இலங்கையின் உணவு உற்பத்திப் பொருட்கள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அப்பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் கட்டாயமாகும். தேயிலை ஏற்றுமதிக்கும் சில நாடுகள் ஹலால் சான்றிதழ் கோருகிறது. இலங்கையிலிருந்து பெரும்பாலான முஸ்லிமல்லாத பெரும்பான்மை இனத்தவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களே ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. ஹலால் சான்றிதழ் தடை செய்யப்படுவதன் மூலம் இலங்கை கோடிக்கணக்கான வெளிநாட்டு செலாவணியை இழக்கவேண்டியேற்படும்.
எனவே அரசாங்கம் ஹலால் சான்றிதழின் அவசியம் குறித்து மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும். ஹலால் சான்றிதழ் மூலம் கிடைக்கும் வருமானம் பயங்கரவாதத்துக்கும் பள்ளிவாசல் நிர்மாணத்துக்கும் பயன்படுத்தப் படுகிறது என்ற பிரசாரம் தவறானது என்பதை நிரூபிப்பதற்காக சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.