கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து வெளிக்காட்டப்படும் எதிர்ப்பை வரவேற்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருக்கிறார்.
இலங்கையில் ஒவ்வொருவரும் முதலில் தங்களை இலங்கையர் என்றே அடையாளப்படுத்தவேண்டும். அவ்வாறு எவராவது சிந்திக்கவில்லை என்றால், அவர்கள் தீர்வின் ஒரு அங்கமல்ல, மாறாக பிரச்சினையின் ஓர் அங்கமே என்று ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் இலங்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும், உலகில் பெரும்பான்மையானவர்கள். அதனால் எவருக்கும் அஞ்சிவாழத் தேவையில்லை என்று ஹிஸ்புல்லா கிழக்கில் கூட்டமொன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்குள் ஐக்கியத்தை பலப்படுத்துவதற்கு பாராளுமன்ற சபாநாயகர் என்ற வகையில் தன்னாலான சகல முயற்சிகளையும் செய்துவருவதாகவும் ஐக்கியத்தைப் பேணுவதற்கு சகல தலைவர்களும் தங்கள் பங்களிப்பைச் செய்யவேண்டியிருக்கிறது. அரசாங்கத்துக்குள் பிளவுகள் ஏற்படுவதையே எதிரிகள் விரும்புகிறார்கள் என்பதால் சகல இலங்கையர்களின் நலன்களுக்காகவும் தற்போதைய வேறுபாடுகள் வெற்றிகொள்ளப்பட வேண்டும். அவ்வாறு நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக ஜெயசூரிய கூறியிருக்கிறார்.
அரசியல் ஐக்கியத்தின் மூலமாகவே பாதுகாப்பு, பொருளாதாரம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு ஏற்படுகின்ற சவால்களை வெற்றிகொள்ள முடியும். நிறைவேற்று அதிகாரமும் பாராளுமன்றமும் ஒன்றுக்கு மற்றது உதவியாக இருந்து செயற்படவேண்டியதே தற்போதைய தருணத்தில் அவசியமாகத் தேவைப்படுகின்றது எனறு டுவிட்டரில் சபாநாயகர் பதிவிட்டுள்ளார்.
-Vidivelli