அரச மற்றும் நியதிச் சபைகள், நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், கிராமங்கள் மற்றும் வீதிகளின் பெயர்ப்பலகைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். வெளிநாட்டு மொழிகள் உபயோகப்படுத்தப்பட்டிருத்தால் அது சட்ட விரோதமானதாகும் எனத் தெரிவித்துள்ள உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு, தற்போது அமுலிலுள்ள அரச மொழிக் கொள்கைக்கமைய அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் தவிர்த்த வேறு மொழிகள் உபயோகிக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்தும்படி அனைத்து அமைச்சர்களின் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான சுற்று நிருபமொன்றினை உள்ளக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளர் எஸ்.டி.ஏ.பி. பொரலெஸ்ஸ அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதன் பிரதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அரச மொழிகள் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர், பிரதேச செயலாளர்கள், அனைத்து உள்ளூராட்சிமன்ற ஆணையாளர்கள், நகரசபைத் தலைவர்கள், ஆணையாளர்கள், ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கிராமமொன்றின் பெயர் அல்லது வீதியின் பெயர் மாற்றப்பட்டு புதிய பெயர் சூட்டப்படும்போது அந்தந்த பிரதேச மற்றும் இலங்கை கலாசாரம், வரலாறு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்த அமைச்சுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி சில உள்ளூராட்சி மன்றங்கள் பெயர்ப்பலகைகள் காட்சிபடுத்தலில் இலங்கை கலாசாரத்தின் பின்னணி எந்த வகையிலும் பின்பற்றப்பட்டதாக இல்லை. சில பிரதேசங்களில் உரிய அனுமதி பெற்றுக்கொள்ளப்படாது கிராமத்தின் பெயர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலைமை இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் கலாசார பின்னணியினைப் பாதுகாப்பதில் சவால்களை ஏற்படுத்தலாம். இதனை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். குறிப்பாக உள்ளூராட்சிமன்ற பிரதானிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவேண்டும். தேவையான ஆலோசனைகள் உள்நாட்டலுவல்கள் பிரிவினால் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அரசமொழி மற்றும் தேசிய மொழிகள் மாத்திரம் அரச மற்றும் அரச நியதிச் சபைகள், நிறுவனங்களை அடையாளப்படுத்துவதற்காக அக்கட்டங்களில் காட்சிப்படுத்தப் பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் மற்றும் கிராம, வீதிகளின் பெயர்ப்பலகைகளில் இடம்பெற வேண்டும். அரசமொழி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர வேறு வெளிநாட்டு மொழிகள் பெயர்ப்பலகைகளில் இடம்பெறுவது சட்டவிரோத மானதாகும். எனவே பெயர்ப்பலகைகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிக்கப்பட்டிருந்தால் அவ்வாறான பெயர்ப்பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.
இது தொடர்பில் அந்தந்தப் பிரதேசங்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இவ்விடயத்தில் பிரச்சினைகள் ஏதும் உருவானால் பிரதேச இணைப்புக்குழுவில் அல்லது மாவட்ட இணைப்புக்குழுவில் கலந்துரையாடி தீர்வு பெற்றுக்கொள்ளலாம்.
இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை இந்த அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் எனவும் உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளர் பொரலெஸ்ஸ தனது சுற்றுநிருபத்தில் தெரிவித்துள்ளார்.
-Vidivelli