ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து சிலரை பிரித்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முயற்சித்து வருகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த சர்வதேச சக்திகளும் முயற்சித்து வருகின்றன என அக்கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சந்திரிகா குமாரதுங்க இனி ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைய முடியாது. அவர் ஐக்கிய தேசியக் கட்சியாகிவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள், மாற்று அணிகள் உருவாகி வருவதாக கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் இவ்வாறான கருத்தினை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒருபோதும் இணைந்து செயற்பட முடியாது. அதன் காரணமாகவே நாம் உரிய நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணியை உடைத்துக்கொண்டு எமது தனி அரசாங்கத்தை அமைத்தோம். மக்களும் அவ்வாறான ஆட்சியை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையையே விடுத்தனர். ஆகவே ஜனாதிபதி உரிய நேரத்தில் சரியான தீர்மானம் எடுத்தார்.
மேலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒருபோதும் ஆட்சியமைக்க இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி உறுதியாகக் கூறி வருகின்றார். இந்த நிலைமைக்கு கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி செய்த மோசடிகளே காரணமாகும்.
அதேபோல் இப்போதும் எமது ஆட்சியை கொண்டு நடத்தவிடாது ஐக்கிய தேசியக் கட்சி குழப்பி வருகின்றது. பாராளுமன்றத்தை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பியை கைக்குள் வைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியும் சபாநாயகரும் தமக்கு ஏற்றால்போல் செயற்பட்டு வருகின்றனர். ஜனநாயகம் பேசும் நபர்களே பாராளுமன்றத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு நாட்டினை மோசமாக வழிநடத்தி வருகின்றனர்.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஒரு சிலரை பிளவுபடுத்தி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் மிகப்பெரிய சூழ்ச்சியொன்று இடம்பெற்று வருகின்றது. இந்த சூழ்ச்சியினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே முன்னெடுத்து வருகின்றார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் செய்த சூழ்ச்சியை இம்முறையும் செய்ய முயற்சித்து வருகின்றார். இதற்கு சர்வதேச சக்திகளின் தலையீடுகளும் உள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையில் இன்று அவர்கள் எவரும் இல்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களாக மாறிவிட்டனர். இதனை மக்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அவருக்கான இடம் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli