குருநாகல் மாவட்டம் சியம்பலாகஸ்கொட்டுவ – கட்டுபொத்த நகரில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு கடைகள் நேற்று முன்தினம் இரவு இனம் தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. தீயினால் கொள்முதல் கடையொன்றும் பென்சி சாமான்கள் அடங்கிய கடையொன்றும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இரு கடைகளும் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமானதாகும். கட்டடத்துக்கும், பொருட்களுக்கும் ஏற்பட்ட சேதம் சுமார் 75 இலட்சம் ரூபா என கடைகளின் உரிமையாளர் ஏ.எச்.எம்.சிபாய் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
கட்டுபொத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளும் ஆய்வுகளை நடாத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டுபொத்த நகரில் இந்த இரு கடைகள் மாத்திரமே முஸ்லிம்களுக்குச் சொந்தமானதாகும். ஏனைய கடைகள் அனைத்தும் பெரும்பான்மை இனத்துக்குச் சொந்தமானவையாகும்.
கடைகளின் உரிமையாளரான சியம்பலாகஸ்கொட்டுவையைச் சேர்ந்த ஏ.எச்.எம்.சிபாயை ‘விடிவெள்ளி’ தொடர்புகொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு விபரித்தார்.
‘கட்டுபொத்த நகரில் நான் கடந்த 20 வருடகாலமாக கொள்முதல் கடையை நடத்தி வருகிறேன். பென்சி சாமான்கள் கடையை கடந்த 9 மாதங்களுக்கு முன்பே திறந்தேன். எனது கடைகள் மாத்திரமே முஸ்லிம் கடைகளாகும்.’
அண்மையில் எமது பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களின் பின்பு நான் கடைகளை அதிகமாகத் திறப்பதில்லை. கடந்த சனிக்கிழமை ½ மணி நேரமே திறந்திருந்தேன். திங்கட்கிழமை கடையைத் திறந்து வியாபாரம் செய்து விட்டு மாலை 6 மணியளவில் மூடிவிட்டுச் சென்றேன். அனைத்து மின்சார சுவிட்ச்களையும் ஓப் செய்து விட்டே சென்றேன். மெய்ன் சுவிட்சும் என்னால் ஓப் செய்யப்பட்டது.
அன்று இஷா தொழுதுவிட்டு பஸாரில் இருக்கும்போது எனது கடை தீப் பற்றி எரிவதாகத் தகவல் கிடைத்தது. நான் அங்கு சென்றபோது கடைகள் முழுமையாக எரித்திருந்தன. தீயணைப்பு படையினர் முழுமையாக எரிந்ததன் பின்பே வந்து சேர்ந்தார்கள்.
இப்பகுதியில் ஏற்பட்ட வன்செயல்களுக்குப் பின்பு பீதியிலே இருந்தேன். இடைக்கிடையே கடையைத் திறந்தேன். பிரச்சினைகள் உருவானால் எனது கடை இலக்கு வைக்கப்படும் என பெரும்பான்மை இனத்தவர்கள் தெரிவித்திருந்தார்கள். எனக்கு கடைகளின் கட்டடம், பொருட்கள் உட்பட சுமார் 75 இலட்சம் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளது. நான் இன்ஸூரன்ஸ் செய்து கொண்டுமில்லை. எனது வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. திட்டமிட்டே எனது கடைக்குத் தீ வைத்திருக்கிறார்கள். பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை’ என்றார்.
vidivelli