முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகிப் பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை கண்டியில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியமை குறித்து மகா நாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்ட போதே இவ்விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அஸ்கிரிய பீட அநுநாயக்க மெதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் தெரிவித்ததாவது,
பதவி விலகுவதாக முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் எடுத்த தீர்மானம் எமக்கு சந்தோஷமளிக்கவில்லை. அவ்வாறு பதவி விலகி தனித்து செயற்படுவதால் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண முடியும் என்று நாம் நினைக்கவில்லை. எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டில் பொது நீதி மற்றும் ஒரே கலாசாரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே இலங்கையில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் தலைவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் பிரஜைகள் எனும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவரும் இலங்கையர் என்ற ஒரே பார்வையிலேயே பார்க்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு அரசாங்கத்தின் கீழ் உள்ளடங்குகின்றனர். எனவே, கட்சிகள் வேறாயினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம் என்றார்.
சந்திப்பில் கலந்து கொண்ட ஏனைய தேரர்கள் குறிப்பிடுகையில்,
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை சரி செய்யப்படுவதற்கு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு நாம் நடுநிலையிலிருந்து தீர்வுகாண வேண்டும். எனவே நாம் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் ஏற்படப்போகும் பாரிய சிக்கல் நிலைமைக்கு அனைவரும் பொறுப்புக்கூற வேண்டியேற்படும். அதே நேரம் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளின்றி உங்களுக்கு பாராளுமன்றத்திற்குச் செல்ல முடியாது. எனவே குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அதே நேரம் சிங்கள மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றனர்.
vidivelli