இரண்டாம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள் நேற்று திங்கட்கிழமை காலை ஆரம்பமாகின.
கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையினாலும் பின்னர் புனித ரமழான் நோன்பு விடுமுறைக்காகவும் மூடப்பட்டிருந்த முஸ்லிம் பாடசாலைகள் சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று மீண்டும் ஆரம்பமாகின.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் நேற்று 70 வீதமான மாணவர்கள் சமுகமளித்ததாக பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே.வேளை ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் வரவு அதிகரித்துக் காணப்பட்டதாக ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான் தெரிவித்தார்.
நேற்று பாடசாலை ஆரம்பிப்பதற்காக நேற்று முன்தினம் பாடசாலைகளை பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டதோடு பாடசாலைகளின் சூழலை நிர்வாகத்தினர் சுத்தப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலும் நேற்று முஸ்லிம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, 90 வீதமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளித்ததாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர்.
அதிபர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும் பாடசாலை ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பெரிய வகுப்பு மாணவர்களின் ஒத்துழைப்புடன் தொற்று நீக்கி திரவங்கள் கொண்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. இதன் பின்னர்தான் நேற்று பாடசாலைகளை உரிய பாதுகாப்பு ஒழுங்குகளுடன் ஆரம்பித்து கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து சீராக நடத்திச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வருடத்துக்கான பாடத்திட்டங்களை எஞ்சியுள்ள காலப்பகுதிக்குள் முடிப்பதற்கு விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டிருப்பதாகவும் அதிபர்கள் தெரிவித்தனர்.
-vidivelli