இலங்கையிலும் சர்வதேசத்திலும் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வன்முறைகளுக்கு வித்திட்ட (4/21) தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே பாதுகாப்புத் தரப்பும் உளவுப்பிரிவும் அறிந்திருந்தன. ஆனால் இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டது. இதனால் உயிர்ச் சேதங்களுடன் கூடிய பாரிய அழிவுகள் நடந்தேறிவிட்டன.
தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கையொன்றினைச் சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி விஜித் மலல்கொட தலைமையில் ஆணைக்குழுவொன்றினை நியமித்தார். இதேவேளை இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரியவும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றினையும் நியமித்தார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இதுவரை தேசிய உளவுத் துறையின் தலைவர் சிசிர மென்டிஸ், முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, கட்டாய லீவில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேமசிறி பெர்ணான்டோ, ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர். மேலும் பல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சாட்சிமளிக்கவுள்ளனர். இதுவரை சாட்சியமளித்துள்ளவர்களின் வாக்கு மூலங்கள் பல்வேறு உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன.
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் எச்சரிக்கை மற்றும் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை பற்றிய தகவல்கள் அதிர்ச்சிக் குரியதாக உள்ளன. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு எதிராகவும் வாக்குமூலங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இநநிலையிலேயே தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
தெரிவுக் குழுவின் செயற்பாடுகள் நிறுத்தப்படாவிட்டால் அமைச்சரவைப் பத்திரங்களில் கைச்சாத்திடுவதில்லை என அவர் எச்சரித்துள்ளார். தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்து உயர் நீதிமன்றில் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ரிசாத் பதியுதீன் உட்பட சிலர் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். எனவே தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோரியுள்ளார்.
இதேவேளை, தெரிவுக்குழுவின் முன் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அரச புலனாய்வுத் தகவல்கள் ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்படுவதை நான் அனுமதிக்கப்போவதில்லை. பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எவரையும் சாட்சியமளிக்க அனுமதிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்படமாட்டாது. தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவுக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தெரிவுக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்றும் தாக்குதல் குறித்த உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் கோரிக்கை விடுத்துள்ளன. இதேவேளை, தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மூடி மறைப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணைகளை இடைநிறுத்த முடியாது. சாட்சியமளிக்க முன்வருபவர்களைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. தெரிவுக்குழு விசாரணைகளுக்கு ஜனாதிபதி அனுமதிக்கா விட்டால் அவருக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரலாம் என அரச தரப்புகள் தெரிவித்துள்ளன.
நேற்று முன்தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அதிகாரிகளுக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் குழுவின் முன்னிலையில் அந்த அதிகாரிகள் ஆஜராக வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 21ஆம் திகதிய தாக்குதலையடுத்து நாடு பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. உல்லாசப் பயணத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது. மக்களின் சகவாழ்வு பாதிப்படைந்துள்ளது. இனங்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் தொடர்பில் உண்மை கண்டறியப்படவேண்டும். அவ்வாறு உண்மையைக் கண்டறிந்தாலே எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதற்கான திட்டங்களை வகுக்க முடியும்.
21 ஆம் திகதி தாக்குதல் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்த பாதுகாப்புப் பிரிவினர் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையா? ஏன் நடவடிக்கை எடுக்கத் தவறினார்கள்? என்ற விபரங்கள் கண்டறியப்படவேண்டும். எனவே ஜனாதிபதி பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாட்டினை நிறுத்துவதற்கு முயற்சிப்பதை விடுத்து நாட்டின் தலைவர் என்ற வகையில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
-Vidivelli