பியகம பிரதேச எல்லைக்குள் புதிதாக பள்ளி நிர்மாணிக்க அனுமதி வழங்கக் கூடாது
பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்
பியகம பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் பதிதாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் நிர்மாணிப்பதற்கான அனுமதியை ரத்து செய்யவும் பொது இடங்களில் புர்கா அணிந்து செல்வதை தடைசெய்யவும் பியகம பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட இரு பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன.
பியகம பிரதேச சபைத்தலைவர் ஆனந்த கணேபொலவின் (பொஜ.பெ.) தலைமையில் ஜூன் மாதத்துக்கான அமர்வு அண்மையில் (கடந்த வியாழன்) மாவரமண்டிய பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பியகம பிரதேசத்தில் புதிதாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்படக்கூடாது என்ற பிரேரணையை சமர்ப்பித்து ஆனந்த கணேபொல கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;
பியகம பிரதேசத்தில் வாழும் 180,000 பெளத்த சிங்களவர்களுக்கு 57 விகாரைகள் உள்ளன. ஆனால் இங்கு வாழும் 18,000 முஸ்லிம்களுக்கு 27 பள்ளிவாசல்கள் உள்ளன. அதேவேளை இது தேவைக்கும் அதிகமாகும். கோழிக் கூண்டுகள் போன்று. எல்லா இடங்களிலும் பள்ளிவாசல்கள் அமைப்பது பொருத்தமற்றது என்றார்.
புர்காவை தடை செய்யும் பிரேரணையை உறுப்பினர் ஆஸிரி ஸசிந்த விதானகே (பொஜ.பெ.) சமர்ப்பித்ததோடு இது தொடர்பாக கருத்து தெரிவித்த எம்.ஏ.எம் இர்பான் (ஐ.தே.க.) புர்கா தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே தடைவிதித்துள்ளதாகவும் புதிய பள்ளிவாசல்கள் நிர்மாணிக்க அனுமதி வழங்கல் தொடர்பாக அடுத்தமாத அமர்வில் முறைப்படி பிரேரணையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
-Vidivelli