ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் நோக்கில் பதவி விலகவில்லை
முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீம் சுட்டிக்காட்டு
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை தொடர்பில் தவறான கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அரசியலாக்க வேண்டாம். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் நோக்கில் எவரும் பதவி விலகவில்லை. ஒரு தனிமனிதனின் முறையற்ற செயற்பாட்டை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் தொடர்பில் இன்று மகாநாயக்க தேரர்களிடம் கலந்துரையாடவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளிலிருந்து சுயமாக விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் இன்று மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளார்கள். இச்சந்திப்பு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிபிட்டார்.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இஸ்லாம் மதத்திற்கு முரணாகத் தாக்குதலை மேற்கொண்ட அடிப்படைவாதிகளின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். முஸ்லிம் மக்கள் என்றும் தீவிரவாதத்திற்கு துணை செல்லவில்லை. ஒரு தனிமனிதனின் செயற்பாட்டின் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்கள்.
தாக்குதலை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர திகதியும் நிச்சயிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் ரிஷாத் பதியுதீன் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தால் வழங்கப்படும் தண்டனையினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் தயார் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் நிலைமை ஒரு தரப்பினருக்கு எதிராகவே கட்டவிழ்த்து விட்டப்பட்டது. முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் பதியுதீனை பதவி விலக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதன் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிப்படையும் சூழ்நிலை காணப்பட்டது. ஆகவே முஸ்லிம் மக்களினால் பிரச்சினை ஏற்பட்டது என்ற நிலைமை உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளை எவ்வித அழுத்தங்களுமின்றி சுயமாகத் துறந்தோம்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை மாத்திரமே பதவி விலக கோரினோம் என்று குறிப்பிடுபவர்கள் கடந்த காலங்களில் குறிப்பிட்ட விடயங்களை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் எது செய்தாலும் அதில் தவறு கண்டுபிடித்து தூற்றும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. சுயாதீனமான அமைப்புக்கள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு எவரும் தடைகளை ஏற்படுத்தவில்லை. அமைச்சர் ரிஷாத் மாத்திரம் பதவி விலகியிருந்தால் அவருக்கு சார்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள் என்ற கருத்தும் வெளிவரும். ஆகவே பல விடயங்களை தூரநோக்குடன் ஆராய்ந்தே அனைவரும் அமைச்சு பதவிகளை துறந்தோம். எங்களின் தீர்மானம் எவருக்கும் எந்நிலையிலும் பாதிப்பினை ஏற்படுத்தாது.
முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். இன்று நாட்டில் மதத் தலைவர்கள் முறையான வழிநடத்தல்களை முன்னெடுக்கின்றார்கள். தேசிய நல்லிணக்கம் மீண்டும் சீர்பட வேண்டும். ஆகவே அரசாங்கமும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை காண துரிதமாக செயற்படுதல் அவசியம். எமது தரப்பு நியாயத்தை எடுத்து கூறவே இன்று மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளோம். என்றார்.
-Vidivelli