உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை கண்டு ஜனாதிபதி அஞ்சுகிறார் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதி பிரதான அமைப்பாளருமான இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
நேற்று காலை திருகோணமலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தமிழ் பிரதேசங்களில் இடம்பெற்ற கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் ஆரம்பம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றதிலிருந்து நடைபெறும் நல்ல விடயங்களுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்பதும் கெட்ட விடயங்களை ஐக்கிய தேசியக் கட்சி மீது சுமத்துவதுமாக காணப்பட்டன. அதுவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலும் நடைபெற்றது. போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட போதும் மதூஷ் கைதுசெய்யப்பட்ட போதும் ஊடகங்களுக்கு முன் வந்து புள்ளிகளை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் ஊடகங்களுக்கு முன் வரவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் பக்கமே கைநீட்டினார்.
இப்போது பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து விசாரணை செய்யும்போது ஜனாதிபதி கூறிய பொய்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் சாட்சியமளிக்கும்போது இது தொடர்பாக தெளிவாக சாட்சியமளித்திருந்தனர்.
“தான் கடந்த வருடமே ஸஹ்ரானை கைதுசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் அதன்போதே தான் கைதுசெய்யப்பட்டதாகவும்” முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலகசில்வா சாட்சியம் அளித்திருந்தார். யாரோ ஒரு நாமல் குமாரவின் பேச்சை கேட்டு இவர் கைது செய்யப்பட்டதுக்கும் இந்த தாக்குதலுக்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா? என விசாரித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இந்த தெரிவுக்குழுவுக்கு உள்ளது.
இவ்வாறு இந்த விசாரணை தொடர்ந்தால் ஜனாதிபதி விட்ட தவறுகள், அவர் கூறிய பொய்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறிந்துகொள்வார்கள் என பயந்தே இந்த தெரிவுக்குழுவின் விசாரணைகளை உடனடியாக நிறுத்த சொல்லி அழுத்தங்களை பிரயோகிக்கிறார்.
இந்த தெரிவுக்குழு தொடர்பான முடிவெடுக்கும் சகல அதிகாரமும் பாராளுமன்றத்துக்கும் சபாநாயகருக்குமே உள்ளது. ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விசாரணைகளை தடுக்க நினைப்பாராயின் நாம் நீதிமன்றம் சென்றாவது மக்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்துவோம்.
ரணில் மீண்டும் பிரதமரானால் தான் ஒரு நிமிடம் கூட ஜனாதிபதி பதவியில் இருக்கமாட்டேன் என கூறிய ஜனாதிபதியே இப்போதுள்ளார் ஆகவே அவரின் பேச்சுக்களை நாம் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என தெரிவித்தார்.
-Vidivelli