- அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்
கடந்த முப்பது வருடங்களுக்குள் முஸ்லிம்களது வாழ்வொழுங்கில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களில் இருந்து தூரமாகிக் கொண்டு போவதாகவும் சிலரால் கருத்தொன்று பரப்பப்பட்டு வருகிறது .
இந்தக் கருத்து உண்மையானதா? அப்படியாயின் முப்பது வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் மத்தியில் வித்தியாசங்கள் எதுவுமில்லாத அளவுக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களில் கரைந்து போய் வாழ்ந்தார்களா?
இதற்கான பதில் அப்படி இல்லை என்பதாகும். முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான கலாசார, மத தனித்துவங்கள் உள்ளன. அவற்றை முடிந்தளவு பேணிக்கொள்ள வேண்டுமென்ற உணர்வு அவர்களிடம் இருந்து வந்திருக்கிறது. அவற்றைப் பாதுகாத்துக் கொடுக்க முஸ்லிம் தலைவர்களும் கல்விமான்களும் சாத்வீக ரீதியான போராட்டங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றை படிக்கும்போது எம்மால் கண்டு கொள்ள முடிகிறது. முஸ்லிம்கள் இலங்கையில் பின்பற்றி வரும் தனியார் சட்டத்தை பிரதானமான உதாரணமாகக் கூற முடியும். இந்த ஆய்வு மிக நீண்டதாகும்.
இது தவிர முஸ்லிம்கள் கடந்த நூற்றாண்டுகளில் தமது தனித்துவங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கான சில சான்றுகளை நோக்குவோம்.
- கல்வி:- கல்வித்துறையில் முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் எச்சரிக்கையோடு செயல்பட்டனர் என்பதை ஏ.எம்.ஏ அஸீஸின் பின்வரும் கூற்று தெளிவுபடுத்துகிறது:-
‘முற்போந்த நூற்றாண்டுகளில் மேலைக் கல்வியானது மதப்பற்றைத் தாக்குதலிலும் கிறிஸ்தவ மதப்பரப்பு முயற்சியை ஊக்குவிப்பதிலும் அமைந்திருந்ததால் அவர்கள் (முஸ்லிம்கள்) தங்கள் பிள்ளைகளை அரசினர் ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் 1832 – 1846 க்குமிடையில் அநேகம் நிறுவப்பட்டிருந்த போதிலும் அவற்றுக்கு அனுப்புவதற்கு விரும்புவதில்லை’ (ஏ.எம்.ஏ.அஸீஸ், இலங்கையில் இஸ்லாம், பக் :172)
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் மட்டுமன்றி, ஆங்கிலேயர் காலத்திலும் கல்விக் கூடங்கள் மதம்மாற்று ஸ்தாபனங்களாகவே அமைந்தன. அஞ்ஞானிகளதும் இஸ்லாமியர்களதும் மத நம்பிக்கைகளை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும்; பாடசாலையில் அவர்கள் கிறிஸ்தவ சமயிகளாக்கப்பட வேண்டும் என ஒல்லாந்தர் விரும்பினர். இதற்காகவே இவர்கள் பாடசாலைகளை அமைத்தனர். ஆங்கிலேயரின் இலட்சியமும் இதுவாக இருந்தாலும் அதனை அவர்கள் மிக நளினமாகவே கையாண்டார்கள். கி.பி.1833இல் கோல்புரூக் இலங்கையில் மேற்கொண்ட சீர்திருத்தங்களும் மதமாற்றத்தையே இலக்காகக் கொண்டிருந்தன. எனவே, அரசினர் பாடசாலைகளுக்கு தம் பிள்ளைகளை அனுப்ப முஸ்லிம்கள் தயக்கம் காட்டியபோது உலமாக்களோ காபிர்களின் மொழியை (ஆங்கிலத்தை)ப் படிப்பது பாவமானது என்று போதித்தார்கள். இதனால் முஸ்லிம் சமூகம் நவீன கல்வியைப் புறக்கணித்தது.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தமையை உணர்ந்த சித்திலெப்பை போன்ற முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவுமான பாடசாலைகளை நிறுவினார்கள். அதேவேளை, முஸ்லிம் ஆண் பாடசாலைகளை அரசாங்கப் பாடசாலைகளாக அரசு அங்கீகரிக்காமை முஸ்லிம்களுக்குப் பாதிப்பாக அமைந்தது. அப்பாடசாலைகளுக்கு அரசு நன்கொடைகளை வழங்கினாலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதிலும் பிரச்சினை தோன்றியது என எம்.ஐ.எம் அமீன் தெரிவிக்கிறார். (எம்.ஐ.எம்.அமீன், இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் பக்:58 – 63)
இவ்வாறு கல்வித்துறையில் சமய உணர்வைப் பேணிப் பாதுகாப்பதிலும் பல்வேறு சிக்கல்களை முஸ்லிம்கள் எதிர்கொண்டமைக்கு பிரித்தானிய அரசின் சமய நல்லிணக்கமற்ற போக்கே காரணமாக அமைந்தது. முஸ்லிம்களும் இந்நாட்டின் குடிமக்கள் எனக்கணித்து மதத்திணிப்பைக் கையாளாமல் சுதந்திரமான கல்வி, கலாசார வளர்ச்சிக்கு வழிவகை செய்திருக்க வேண்டும்.
ஆய்வாளர் சமீம் இது பற்றி எழுதும் போது :- சேர் ராஸிக் பரீத் தலைமையில் இயங்கிய இலங்கை சோனகர் சங்கம் 1945ஆம் ஆண்டு, சோல்பரி குழுவுக்கு தாம் இதுவரை தனித்துவம் காக்க எடுத்த முயற்சிகளை விபரித்தது. காலியிலும் மகரகமவிலும் இரண்டு அரபு மத்ரஸாக்களை நிர்மாணித்தமை, ஸாஹிராக் கல்லூரியில் அரபு, இஸ்லாமிய நாகரிகம் ஆகிய பாடங்களை கற்பிக்க முயற்சித்தமை, முஸ்லிம் தாய்மார்களுக்கு முஸ்லிம்களின் நன்கொடைகளைக் கொண்டு அமைத்த வைத்தியசாலைகளை அமைத்தமை, முஸ்லிம்களின் கல்விக்காக அளுத்கமையில் ஒரு முஸ்லிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை நிறுவியமை போன்றவற்றை உதாரணங்களாகக் காட்டினார்கள் என்கிறார். (சமீம், ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள், பக்: 195)
2.ஷரீஆ சட்ட விதிகள்:- முஸ்லிம்கள் தமது தனித்துவத்துக்காக வரலாற்றில் பல்வேறுபட்ட முயற்சிகளை எடுத்துவந்துள்ளனர். தம்மைப் பொறுத்தவரையில் மட்டும் செல்லுபடியாகும் வகையில் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தொகுப்பில் ஷரீஆ சட்ட விதிகளையும் ஓரங்கமாக்கி அமுல்நடாத்த 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்து முயற்சித்து வந்துள்ளனர்.
இது பற்றி விளக்கும் சமீம், “இக்காலகட்டத்தில் முஸ்லிம்களுடைய அரசியல் நோக்கம் பெரும்பாலும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதாகவே இருந்தது. முஸ்லிம் தலைமை பயந்த சுபாவத்துடனும் எச்சரிக்கையோடும் நடந்து கொண்டது. தமது கலாசாரத் தனித்துவத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தின் உதவியை முஸ்லிம் தலைவர்கள் நாடினார்கள். முஸ்லிம்களுக்கென்றே தனிப்பட்ட சட்டங்களை அமுலாக்குவதில் மும்முரமாக இருந்தார்கள். முஸ்லிம்களின் விவாகம், விவாகரத்துச் சட்டமும் முஸ்லிம்களின் மரபுரிமை வக்புச்சட்டமும் இக்காலகட்டத்தில் அமுலாக்கப்பட்டன. முஸ்லிம்களது கலாநிலையங்களை தமிழ் ஆசிரியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதிலும் முஸ்லிம்களுக்கென்றே தனியான இஸ்லாமிய சூழ்நிலையில் அமையப்பெற்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் மும்முரமாக ஈடுபட்டார்கள்’ எனக் கூறுகிறார். (சமீம், ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள், பக்:77,78)
1892 இல் பிரேதங்களை அடக்குவது பற்றிய சட்டவிதியொன்றை அரசு பிரசுரித்தது. அவ்விதி சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவாக இருந்தது. ஆனால், இவ்விதி தமது சமய, ஒழுக்க விதிகளுக்கும் மரபுகளுக்கும் முரண்பட்டதாக இருந்ததுடன் அமுலாக்கும் போது நடைமுறைப் பிரச்சினைகளையும் உருவாக்குவதாகக் கூறி முஸ்லிம்கள் கடுமையாக எதிர்த்தனர். முஸ்லிம் நேசன் பத்திரிகை இவ்வெதிர்ப்பை அப்பட்டமாகக் காட்டியது.
அம்மை நோய் கண்ட முஸ்லிம் பெண்களுக்கு அம்மைப்பால் கட்ட பெண் வைத்தியர்களை நியமிக்குமாறு 1890 இல் முஸ்லிம்கள் அரசை வற்புறுத்தினர். அம்மை நோய் வந்த ஆண்களையும் பெண்களையும் அம்மை வைத்தியசாலையில் ஒரே மண்டபத்தில் வைத்துப் பராமரித்ததால் முஸ்லிம் பெண் நோயாளிகளை அங்கு அனுப்ப முஸ்லிம்கள் மறுத்தனர்.
இந்நிலையில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதால் அரசு பெண் நோயாளிகளை பலாத்காரமாக வீடுகளிலிருந்து அழைத்துச் சென்றது. எனவே, முஸ்லிம்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதன் பின்னர் கொழும்பு மாநகர சபையில் பின்வரும் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன:-
அ. முஸ்லிம்களது வழக்கங்களும் ஒழுக்கங்களும் தனித்துவமானவை. எனவே, முஸ்லிம்களின் பிரச்சினைகளை தனித்து நோக்க வேண்டும்.
ஆ. வைசூரி நோய் கண்ட முஸ்லிம் பெண்களைப் பராமரிக்க அம்மை வைத்தியசாலையில் பிரத்தியேக பகுதி வேண்டும்.
இ. அவர்களைப் பராமரிக்க முஸ்லிம் பெண் தாதிகள் தேவை. இந்நோயைக் கண்டறிய வீடுகளுக்குச் செல்லும் போது பெண் உத்தியோகத்தர்களை அழைத்துச் செல்ல வேண்டும். (எம்.ஐ.எம்.அமீன்,பக்:102, 103)
- துருக்கித் தொப்பி விவகாரம்:- முஸ்லிம்களின் முதல் பட்டதாரியும் வழக்கறிஞருமான எம்.ஸீ.அப்துல் காதர் பிரித்தானிய காலனித்துவ அரசின் பிரதம நீதிபதியாகக் கடமையாற்றிய சேர் சார்லட் லயர்ட் என்பவருக்கு முன்நிலையில் 1905.05.02ஆம் திகதி நீதிமன்றத்திற்கு துருக்கித் தொப்பியுடன் வந்தபோது, தொப்பியைக் கழற்றும்படி நீதிபதி உத்தரவிட்டார். அக்கட்டளைக்குப் பணிய மறுத்த அப்துல்காதர், அது தனது சமூகத்திற்கு ஏற்பட்ட அவமானம் எனக்கூறி நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார். முஸ்லிம் தலைவர்கள் நீதிபதியின் தீர்மானத்தைக் கண்டித்த போதிலும் நீதிபதி அதில் பிடிவாதமாகவே இருந்தார். இவரது நடத்தையை ஆட்சேபித்து நாடுபூராகவும் முப்பது கூட்டங்கள் நடாத்தப்பட்டன.அவற்றில் மருதானையில் நடந்த கூட்டமே மிகப் பிரமாண்டமாக அமைந்தது. பிரசித்தி பெற்ற இந்திய வழக்கறிஞரான மௌலவி ரபியுத்தீன் இக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார். இத்தடையுத்தரவை நீக்கக் கோரி பகிரங்க வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டது. துருக்கித் தொப்பி விவகாரம் மக்களின் உணர்வுகளைத் தூண்டி முழு முஸ்லிம் சமூகத்தினதும் பிரச்சினையாகப் பரிணமித்ததைக் கண்ட ஆங்கில அரசு 1906.06.16 ஆம் திகதி அத்தடையுத்தரவை நீக்கியது.(அமீன், எம்.ஐ.எம், பக் :103)
தொப்பி விவகாரமாயிருப்பினும் தமது தனித்துவ அடையாளங்களில் ஒன்று என முஸ்லிம்கள் கருதிய வேளை அதனைப் பாதுகாக்கக் களமிறங்கியிருக்கிறார்கள் என்பதை இந்நிகழ்ச்சி காட்டுகிறது.
எனவே, ஆட்சியாளர்கள் யாராக இருப்பினும் அவர்கள் முஸ்லிம்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்கி, அவர்களை நியாயமாக நடத்திய வேளையில் அங்கு சகவாழ்வும் சௌஜன்யமும் நிலவியதையும் தனித்துவ அம்சங்களில் பாதிப்பு ஏற்பட்ட போது அவர்கள் உரிமைக் குரல்களை எழுப்பியதையும் இன உணர்வுகள் தூண்டப்பட்டதையும் காணமுடியும். சகவாழ்வுக்கும் தனித்துவம் காத்தலுக்குமிடையில் நேரடியான உறவிருப்பது இதிலிருந்து புலனாகிறது.
வரலாற்றில் இஸ்லாமிய அரசின் கீழ் வாழ்ந்த சிறுபான்மையினரான மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் அடிப்படையான, நியாயமான உரிமைகளை போதிய அளவு உத்தரவாதப்படுத்தியதை வைத்துப் பார்க்கும் போது, இஸ்லாம் அல்லாத அரசுகளின் கீழ் முஸ்லிம் சிறுபான்மையினர் அது போன்ற உரிமைகளை எதிர்பார்ப்பது தவறாக அமையாது.
தமிழர்களை விட வித்தியாசப்படும்
முஸ்லிம்கள்
முஸ்லிம்களது தனித்துவமான அம்சங்களை இந்நாட்டின் மற்றோர் முக்கியமான இனமாகிய தமிழர்களும் புரிந்து செயல்பட வேண்டும் என முஸ்லிம்கள் எதிர்பார்த்தார்கள். முஸ்லிம் – தமிழர் உறவு சுமுகமாக அமைய இது அவசியம் என அவர்கள் உணர்ந்தார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களால் நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட போது தமிழர்கள் கைகொடுப்பர் என்றும் முஸ்லிம்கள் எதிர்பார்த்தார்கள். இந்நாட்டின் இனமுரண்பாட்டு வரலாற்றில் முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமான பிரச்சினைகள் இருக்கின்றன என்ற உண்மையை ஏற்று தமிழர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதும் முஸ்லிம்களது அவாவாக இருந்திருக்கிறது.
ஆனால், இந்நாட்டில் தமிழர்களோடு பல நூற்றாண்டுகளாக சகவாழ்வை மேற்கொண்டு வரும் ஓர் இனம் என்ற வகையில் முஸ்லிம்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்காமல் சேர் பொன்னம்பலம் ராமநாதன் எழுதியும் பேசியும் வந்தார். 1880 ஆம் ஆண்டில் அவர், மொழி மற்றும் இரத்த உறவில் முஸ்லிம்கள் தமிழர்களே என்று கூறியதன் மூலம் சட்டநிரூபண சபையில் முஸ்லிம் பிரதிநிதியொருவர் நியமிக்கப்படுவதை தடுத்துவந்தார். இலங்கை முஸ்லிம்களது வரலாறு அரபிகளுடன் தொடர்புபட்டது என்பதை அவர் மறுத்ததுடன் அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்களே என்றும் வாதாடினர். ‘இலங்கை முஸ்லிம்கள் தென்னிந்தியாவில், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றப்பட்ட இழிசனசாதியைச் சேர்ந்த தமிழர்களின் சந்ததியினார்’ என ‘றோயல் ஏஸியடிக் சொஸைடி’ என்ற சரித்திர ஆராய்ச்சிக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவில் தெரிவித்தார். 1915 சிங்கள – முஸ்லிம் கலவரத்தின் பின்னர் அவர் முஸ்லிம்களையும் பிரித்தானிய அரசையும் கடுமையாக சாடி சிங்கள சமூகத்துக்கு அநீதியிழைக்கப்பட்டதாகக் கூறினார்.
இது இப்படியிருக்க எமது தமிழ் சகோதர்கள் சிலரது அண்மைக்கால நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் முஸ்லிம்களது தனித்துவத்தை சற்றும் புரியாமல் நடந்துகொள்வது போல் தெரிகிறது. இதனை ஆய்வாளர் சித்தீக் ‘தமிழர்களது விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை தங்களில் ஒரு பகுதியினராகக் காட்டுவதற்கும், தம்முடன் அணைத்துக் கொள்வதற்கும் காட்டிய ஆர்வத்தின் அளவுக்கு முஸ்லிம்களின் சமய, கலாசார தனித்துவத்தையும் பிரச்சினையையும் கோரிக்கைகளையும் விளங்கி, முஸ்லிம்கள் தொடர்பாக தெளிவான உறுதியான நம்பிக்கை ஏற்படக்கூடிய நிலைப்பாட்டை எடுக்கத் தவறினர்.’ எனக் கூறுகிறார். (சித்தீக், எம்.வை.எம். , தமிழ் முஸ்லிம் கலவரங்கள், பக்கம் :67)
இம்மனோநிலை பற்றி கலாநிதி நுஃமான் கூறுகையில், ‘இலங்கை முஸ்லிம்கள் தாமும் தமிழர் என்பதை ஏற்க மறுத்துவிட்டனர். துரதிஷ்டவசமாக தமிழ் அரசியல் தலைமையானது அன்றும் இன்றும் இதனை பொருட்டாகக் கொள்ளவில்லை. தற்கால அரசியல் சூழ்நிலையில் தமிழ் பிரிவினைவாத இயக்கங்கள் குறிப்பாக எல்.ரீ.ரீ.ஈ. ஆனது ராமநாதனின் கொள்கையை மீட்டிக் கொண்டு, முஸ்லிம்களை தமது அரசியல் வட்டத்துக்குள் கொண்டுவந்து அவர்களை இஸ்லாமியத் தமிழர் என அழைக்க முயற்சிக்கிறது. நூறு வருடங்களுக்கு மேல் முயற்சித்து முஸ்லிம் தனித்துவம் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த வாதத்தை எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என எழுதுகிறார்.(Nuhman, Understanding Sri Lankan Muslim Identity, p: 12)
எனவே, முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் ஐக்கியமும் சௌஜன்யமும் நிலவ வேண்டுமாயின் தமிழர்களது தரப்பிலிருந்து முஸ்லிம்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்படவேண்டும். முஸ்லிம்களுக்கென்றே தனித்துவமாகவுள்ள பண்புகளைத் தமிழர்கள் ஏற்பதுடன் அவற்றிற்கேற்ப நடந்து கொள்ள வேண்டியுமிருக்கிறது.
அந்தவகையில் நோக்குமிடத்து முஸ்லிம் சமூகத்தின் தனித்துவப் பண்புகள் எவை என முஸ்லிமல்லாதவர் புரிந்து கொள்ளும்பட்சத்தில் அவற்றை முஸ்லிம்கள் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அவற்றில் எவ்வித தலையீட்டையும் செய்யலாகாது. அத்துடன் பிறசமயத்தவரது கலாசார, பண்பாட்டு தனித்துவங்களைச் செய்யும்படி முஸ்லிம்களை நிர்ப்பந்திக்கவும் கூடாது.
முஸ்லிம்களும் கூட பிற சமூகத்தவர்களது தனித்துவங்களை மிகத்தெளிவாக அறிந்திருப்பதுடன் அவற்றை சகித்து வாழவேண்டும். அவற்றை கொச்சைப்படுத்துவதோ அவமதிப்பதோ இஸ்லாமிய போதனைகளுக்கு விரோதமானதாகும்.பிறர் வணங்கும் தெய்வங்களை ஏச வேண்டாம் என அல்குர்ஆனில் கூறபாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே,சமாதான சகவாழ்வு என்பது முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் தத்தமது கடமைகள், உரிமைகளை மிகவும் துல்லியமாக அறிந்து நடைமுறைப்படுத்துவதில் தான் தங்கியுள்ளது. முஸ்லிம்கள் மாத்திரம் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் பேணுகையில் பிறர் அசிரத்தையாக இருந்தால் அங்கு எதிர்பார்க்கப்படும் சுபீட்சமான அமைதியான சமூக அமைப்பு உருவாகமாட்டாது.
அண்மைக்காலமாக முஸ்லிம் பெண் களதும் ஆண்களதும் ஆடைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையும் ஹலால் விவகாரம்,இஸ்லாமிய வங்கி முறை போன்றவற்றை மையமாக வைத்தும் முஸ்லிம்கள் கடந்த முப்பது வருடங்களுக்குள் தான் மாறி விட்டார்கள் எனக் கூறுவது பொருத்தமல்ல என்ற கருத்தை நாம் புரிய வேண்டும்.
-Vidivelli