முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு நலன் கருதி, அவர்களின் விடியலுக்காக தான் எந்நேரத்திலும் என்னை அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன். இந்நிலையில், தற்போது நானும் அமைச்சராக இருந்திருப்பின் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக இராஜினாமா செய்திருப்பேன் என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, கடந்த வெள்ளிக்கிழமை, பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது, நானும் தற்போது அமைச்சராக இருந்திருப்பின், ஏனைய சக அமைச்சர்களுடன் இணைந்து, எனது இராஜினாமாக் கடிதத்தையும் கையளித்திருப்பேன்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிற்குப் பின்னர், முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறு வைரமாகவும், குரோதமாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை, நான் இதற்கு முன்னர் ஒருபோதும் பார்த்ததில்லை.
இதன் காரணமாகவே, அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறுவதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் தீர்மானித்தனர்.
முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கமுடியாவிடின், முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளை வகிப்பதில் எவ்விதப் பயனுமில்லையென முஸ்லிம் மக்களின் மிக நீண்ட நாள் வேண்டுகோளாக இருந்ததையும் நான் அறிவேன்.
இந்நிலையில், இன்று நானும் அரசாங்கத்தில் அமைச்சராக அங்கம் வகித்திருந்தால், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக, ஏனைய அமைச்சர்களுடன் எனது இராஜினாமாக் கடிதத்தையும் வழங்கியிருப்பேன்.
முஸ்லிம்கள் கிறேண்ட்பாஸ், அளுத்கம, கிந்தோட்டை, கண்டி, திகன போன்ற பகுதிகளில் இடம்பெற்ற இன வன்முறைத் தாக்குதல்களின்போது பல்வேறு இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தனர். இதன்போது எல்லா இடங்களுக்கும் நான் நேரடியாகவே சென்று, முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றுக்கான என்னாலான பல உடனடித் தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்தேன். இம்முறை மினுவாங்கொடை, கொட்டம்பபிட்டிய உள்ளிட்ட பல முஸ்லிம்கள் வாழும் பகுதிகள், மிக மோசமான முறையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதல் சம்பவங்கள், முஸ்லிம்களுக்கு கடுமையான மன உளைச்சலைக் கொடுத்துள்ளன.
இத்தாக்குதல்களின் பின்னணியிலேயே அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும், தமது அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து விலகி இராஜினாமா செய்துள்ளனர். முஸ்லிம் அமைச்சர்களின் இவ்வாறான துணிகரச் செயலை, இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களின் விடிவுக்காகவும் நானும் என்னை எச்சந்தர்ப்பத்திலும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன் என்றார்.
-Vidivelli