உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை இடைநிறுத்த முடியாது. சாட்சியமளிக்க முன்வருபவர்களை தடுத்து நிறுத்தும் அதிகாரம் எவருக்கும் கிடையாது . மீறி அழுத்தங்கள் பிரயோகிக்கும் பட்சத்தில் உயர்நீதிமன்றில் ஆணையை பெற்றுக்கொள்ள முடியும்.
பாதுகாப்பு அதிகாரிகளை ஜனாதிபதி பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்களுக்கு அனுமதிக்காவிட்டால் அவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும் என்று ஆளும் தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். ஏப்ரல் 21 பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவென நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் யாரும் வந்து சாட்சி வழங்க முடியும். நியாயமான தீர்வுகளையும் உண்மையை மக்களுக்கு வெளிக்காட்டுவதற்காகவே இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. சாட்சியமளிக்க முன்வருபவர்களுக்கு கட்டாயமாக இடமளிக்க வேண்டும். சாட்சியமளிக்க முன்வருபவர்களுக்கு எவராலும் தடைவிதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையிலான சாட்சிகள் விசாரணை குழுவுக்கு வழங்கப்படுமாக இருந்தால் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் போது அந்த சாட்சிகளை, ஊடகங்களின் முன்னிலையில் இல்லாமல் தனியாகப் பெற்றுக்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு உள்ளது. அதேபோன்று தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக இந்த தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லை. அதனையும் மீறி தெரிவுக்குழு விசாரணைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான சாட்சிகள் வழங்கப்படுமாக இருந்தால் அதற்குத் தேவையான விசாரணை நுட்பங்களை உபயோகிப்பதற்கான அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு உள்ளது.
தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுமாக இருந்தால் அது மற்றவர்களின் குறைபாடுகளை மூடி மறைப்பதாகிவிடும். குறைபாடுகளை மூடிமறைப்பதற்காக விசாரணைகளை இடைநிறுத்த முடியாது என்றும் பாராளுமன்ற வட்டாரம் தெரிவிக்கின்றது. அவ்வாறு விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யும் அதிகாரமும் தெரிவுக்குழுவுக்கு உண்டு.
இந்நிலையில் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதிப்பதில்லை என்ற முடிவில் இருப்பாராக இருந்தால் தெரிவுக்குழுவால் பாராளுமன்றத்துக்கு முறைப்பாடு செய்ய முடியும்.
விசாரணை நடவடிக்கைகளுக்கு தடங்கலை ஏற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. எதிர்வரும் டிசம்பர் மாதம் வரைக்குமே அவருக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆட்சியை விட்டு வெளியேறிய பின்னரும் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்பதன் அடிப்படையில் அவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-Vidivelli