இலங்கையின் அரசியல் வரலாறு மாற்றம் கண்டுவிட்டது. முஸ்லிம் அமைச்சர்களின் பங்களிப்பில்லாத ஓர் அரசாங்கம் இன்று பதவி வகிக்கிறது. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகளில் சிலர் இனவாதக் கொள்கையிலேயே ஊறிப்போயிருக்கிறார்கள். அதன் விளைவுகளையே முஸ்லிம் சமூகம் இன்று எதிர்கொண்டுள்ளது.
நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதியமைச்சர் என 9 முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்து கொண்டார்கள்.
அவர்கள் பல்வேறு அரசியல் கொள்கைகளைக் கொண்டவர்கள். சமூகத்தின் நலனுக்காக அவர்கள் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் களத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் கருத்து முரண்பாடுகளைக் களைந்து ஒன்றுபடுவார்கள் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இனவாத மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமல்ல ஜனாதிபதி கூட எதிர்பார்க்காத நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக இனவாதிகள் விரல் நீட்டினார்கள். அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். உதவி செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீதான எதிர்வலைகள் நாளுக்கு நாள் வலுப்பெற்றன. இவர்கள் தீவிரவாதிகளின் ஆதாரவாளர்கள். பதவி விலக்கப்பட வேண்டும் அல்லது அவர்களாகவே பதவிகளை இராஜினாமா செய்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு தழுவிய ரீதியில் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த காலங்களில் அரசியலில் மௌனித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இவ்வாறான சூழ்நிலையிலேயே மூவரும் பதவி விலக்கப்பட வேண்டுமெனக் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுத்தார். இந்தப் போராட்டத்தை அரசியல் பின்புலமான இனவாதப் போராட்டமாகவே முஸ்லிம்கள் கருதினார்கள். இதனை தங்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தலாகவே அவர்கள் எண்ணினார்கள்.
இதை உறுதி செய்யும் வகையிலான சம்பவம் கடந்த 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அன்று அத்துரலிய ரத்ன தேரரைப் பார்ப்பதற்காக கண்டி தலதா மாளிகை வளாகத்துக்குச் சென்ற ஞானசார தேரர் ஒரு அச்சுறுத்தலை விடுத்தார். திங்கட்கிழமை அதாவது 3 ஆம் திகதி பகல் 12 மணிக்கு முன்பு குறிப்பிட்ட 3 அரசியல்வாதிகளும் பதவி விலக்கப்படாவிட்டால் நாடு முழுவதும் திருவிழா காண வேண்டியேற்படும் என்று அச்சுறுத்தல் விடுத்தார்.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஞானசார தேரர் பேருவளையில் இவ்வாறான ஒரு கருத்தையே வெளியிட்டார். அவர் ‘அபசரனய்’ அதாவது அழிவு அல்லது சாபம் ஏற்படும் என்றார். இந்த அவரது உரையே அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இன வன்முறைக்கு வித்திட்டது. பாரிய அழிவுகளும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. அவ்வாறான வன்முறைகளே மீண்டும் அரங்கேற்றப்படப்போகின்றன என முஸ்லிம்கள் பீதிக்குள்ளானார்கள்.
கடந்த 2 ஆம் திகதி பல பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் இரவு தூக்கமின்றி விழித்திருந்தார்கள். சிலர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருந்தனர்.
3 அரசியல்வாதிகளின் இராஜினாமாவையடுத்து முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் அநாவசிய கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். மூன்று அரசியல்வாதிகளும் பயங்கரவதத்திற்கு துணை போகவில்லை என்றும் அவர்கள் கருதினார்கள். தாம் தொடர்ந்தும் பதவியிலிருந்தால் அவர்கள் விசாரணைகளின் பின்பு குற்றமற்றவர்கள் எனக் காணுமிடத்து தாம் அரசியல் செல்வாக்கு செலுத்தியதாக குற்றம் சுமத்தப்படும் என்றும் அவர்கள் கருதினார்கள்.
ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மீது குற்றம் சுமத்தியவர்கள் தற்போது அவற்றை நிரூபிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். விசாரணைக்கென பொலிஸ் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் ஒரு மாத காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து கொண்டாலும் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவளிப்பதாகவே தெரிவித்துள்ளார்கள். விசாரணைகளின் பின்பு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டால் அனைவருக்கும் பொறுப்பான அமைச்சுப் பதவிகளை வழங்கி கௌரவிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அத்தோடு குற்றச்சாட்டுகள் போலியானவை என நிரூபிக்கப்பட்டால் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
-Vidivelli