பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கடந்த மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சுற்றுநிருபத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பாடசாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சுற்று நிருபமொன்றினை வெளியிட்டது. அச்சுற்று நிருபத்தின்படி அரச பெண் உத்தியோகத்தர்கள் சாரி அல்லது ஒஸரியும் ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை, மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிய வேண்டும்.
இச்சுற்று நிருபம் வெளியிடப்பட்டதும் அரச அலுவலகங்கள், பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் பல அசௌகரியங்களுக் குள்ளாகினர். அபாயா அணிந்து கடமைக்கு வரவேண்டாம் என தடை விதிக்கப்பட்டது.
இச்சுற்று நிருபத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதையடுத்தே திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
-Vidivelli